பாக்கியவான்கள்
 /   Blog /  Created by Kingslin R Last updated Mon, 03-Mar-2025



பாக்கியவான்கள்

“இவைகளில் பாதியாகிலும் எனக்கு அறிவிக்கப்படவில்லை என்று காண்கிறேன்” (1 ராஜாக்கள் 10:7).

சேபாவின் அரசி, சாலொமோனின் ஞானத்தைப் பற்றியும் அவனது செயல்களைப் பற்றியும் கேள்விப்பட்ட செய்திகள் யாவும் நேரில் வந்தபோது உண்மையென கண்டுகொண்டாள். அவளது ஆர்வமும் பிரயாசமும் சாலொமோனை கூடுதலாக அறிந்துகொள்ளச் செய்தன. நாம் இரட்சிக்கப்படும்போது, ஆவிக்குரிய வாழ்க்கையில் ஒரு குழந்தையாகத் தொடங்குகிறோம். நாளாக நாளாக நாம் வளர்ச்சியையும் முதிர்ச்சியையும் நோக்கிப் பயணிக்கிறோம். நம்மிடத்திலும் ஆர்வமும் உற்சாகமும் இருக்குமானால் கிறிஸ்துவை அறிகிற அறிவில் வளர்ந்துகொண்டே இருப்போம். இந்த வளர்ச்சி நாம் கிறிஸ்துவை முகமுகமாய் காண்பதிலே நிறைவடையும். “இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன்” (1 கொரி. 13:12) என்று நாம் கிறிஸ்துவைச் சந்திக்கும்போது அடையும் நிலையை பவுல் தெரிவிக்கிறார்.

நான் கேள்விப்பட்டவைகளைக் காட்டிலும் நேரில் வந்து பார்த்தது அதிகம். நான் நேரில் பார்த்தவற்றில் பாதி அளவாகிலும் எனக்கு அறிவிக்கப்படவில்லை என்று சாலொமோனின் மேன்மைகளைச் சீபா நாட்டின் அரசி கூறினாள். கிறிஸ்துவை சந்திக்கும்போதும் இவ்விதமான வார்த்தைகளையே நாமும் கூறுவோம் என்பதில் சந்தேகமில்லை. அவரவர் கேள்விப்பட்ட செய்திகளை நமக்கு அறிவிக்கிறார்கள், அவை எப்போதும் குறைவானவையே. நாம் கூடுதலாக அறிந்துகொள்வதற்கு நமது தனிப்பட்ட சந்திப்பைப்போல வேறு எதுவும் உதவாது. “தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காதுகேட்கவு மில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை; நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்” (1 கொரி. 2:9,10) என்று மேலும் பவுல் கூறுகிறார். ஆம் இந்த உலகத்திற்கு நாம் அடையப்போகிற மேன்மையான சிலாக்கியங்களைக் குறித்து எவ்வித அறிவும் கிடையாது. அதே நேரத்தில் சேபாவின் அரசிக்கு இந்தச் செய்தியை எடுத்துச் சென்றவர்களைப் போல, அவரை அறிந்திருக்கிற நாம் நமது ஆண்டவரின் புண்ணியங்களை அறிவிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம் என்பதையும் மறந்துவிட வேண்டாம்.

“உம்முடைய ஜனங்கள் பாக்கியவான்கள்; எப்போதும் உமக்கு முன்பாக நின்று, உம்முடைய ஞானத்தைக் கேட்கிற உம்முடைய ஊழியக்காரரும் பாக்கியவான்கள்” (1 ராஜாக்கள் 10:8). பெரிய ஞானவானும்,செல்வந்தனும், ராஜாவுமாகிய சாலொமொனிடத்தில் வேலை செய்கிற வேலைக்காரர்கள் பாக்கியவான்களாக இருப்பார்கள் எனில், கர்த்தருக்கு சேவை செய்கிறவர்கள் எத்தனை ஆசீர்வதிக்கப்பட்ட மக்கள் என்பதை நாம் உணர்ந்துகொள்வோம். நம்முடைய கர்த்தர் சாலொமோனிலும் பெரியவராயிருக்கிறார். சர்வ ஞானமுள்ளவரும், ஒழிந்துபோகாத நிறைவான பொக்கிஷங்களை வைத்திருக்கிறவரும், தம்முடைய தெய்வாதீனச் செயல்களால் எப்பொழுதும் தமது மக்களைச் சந்திக்கிறவருமாயிருக்கிறவருக்கு நாம் எப்பொழுதும் இன்முகத்தோடு சேவை செய்வோம். நம்முடைய சேவையால் உண்டாகும் சந்தோஷமும், மகிழ்ச்சியும் பிறர் காணும்படியாய் அமையட்டும். பிதாவே, உம்மைக் கூடுதலாக அறிந்து, இன்முகத்தோடு உமக்குச் சேவை செய்ய உதவி செய்வீராக, ஆமென்.




  :   18 Likes

  :   30 Views