பட்சிக்கிற அக்கினி
 /   Blog /  Created by Kingslin R Last updated Mon, 24-Mar-2025



பட்சிக்கிற அக்கினி

“அப்பொழுது: கர்த்தரிடத்தில் இருந்து அக்கினி இறங்கி, அந்தச் சர்வாங்க தகனபலியையும்… நக்கிப்போட்டது” (1 ராஜாக்கள் 18: 38).

எலியாவின் தேவன் நம் தேவன்

வல்லமையின் தேவன் நம் தேவன்

தாசர்களின் ஜெபம் கேட்பார்

வல்லபெரும் காரியம் செய்திடுவார்.

ஜெபத்துக்குப் பதிலளிக்கிற தேவனின் மேன்மை குறித்து ஒரு பக்தன் எழுதிய அருமையான பாடல் இது. ஆம், எலியாவின் தேவனே நம் தேவனாகவும் இருக்கிறார். இருப்பினும் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் பரிசுத்தவான்கள் ஆகியோரைக் காட்டிலும் கூடுதலான வெளிப்பாட்டை புதிய ஏற்பாட்டின் வாயிலாகப் பெற்றிருக்கிறோம்.

எலியா தேவனுக்காகவும் கண்ணுக்குத் தெரிகிற உலக (இஸ்ரவேல்) ராஜ்யத்துக்காகவும் வைராக்கியம் காட்டி, பலிசெலுத்தி, விசுவாசத்துடன் ஜெபம் செய்தான். அவனுடைய ஜெபம் கேட்கப்பட்டது. நாமோ அசைவில்லாத ராஜ்யத்தைப் பெற்றிருக்கிறோம். “ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்; நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே” என்று எபிரெயர் நிருபம் கூறுகிறது (எபிரெயர் 12:28 ,29).

நம்முடைய தேவன் அன்பானவர் மட்டுமின்றி, அக்கினியின் மூலமாகப் பதிலளிக்கிற பரிசுத்த தேவனாகவும் இருக்கிறார். அது இஸ்ரவேல் மக்களுக்கு ஓர் அடையாளமாக இருந்தது மட்டுமின்றி, பாகால் தீர்க்கதரிசிகளுக்கும், ஆகாபைப் பின்பற்றி விக்கிரக ஆராதனையில் ஈடுபட்ட மக்களுக்கு ஓர் எச்சரிப்பின் செய்தியாகவும் இருந்தது. “அவருக்குச் சொந்தமானவர்கள் உள்ளார்வத்துடன் புகழ்ந்துபோற்றவும், மேன்மைப்படுத்தவும் வேண்டும் என்னும் அளவுக்கு, அவருடைய பரிசுத்தமும் நீதியும் மிகப் பெரிதாயிருக்கின்றன” என்று திருவாளர் வில்லியம் மெக்டொனால்டு எழுதியுள்ளார்.

மக்கள் அனைவரும் அதைக் கண்டு முகங்குப்புற விழுந்து, கர்த்தரே தெய்வம், கர்த்தரே தெய்வம் என்று ஆமோதித்தார்கள். கடவுள் யார் என்னும் கேள்வி எழும்பட்சத்தில் அதற்கு மெய்யான தேவன் வெளிப்படையாகப் பதிலளிப்பதற்குக் கடனாளியாயிருக்கிறார். இப்போதும் பல்வேறு வழிகளில் அவர் மக்களிடத்தில் பேசிக்கொண்டுதான் இருக்கிறார். அதை ஆமோதிக்கிறவர்கள் கர்த்தரைக் கண்டு, அவரை அறிக்கையிடுகிறார்கள். அவரை விட்டு விலகுகிறவர்கள் பட்சிக்கிற அக்கினியால் ஒரு நாளில் பட்சிக்கப்படுவார்கள். கிறிஸ்துவானவர் தம்மை விசுவாசிக்கிறவர்களுக்கு பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் கொடுத்து ஆசீர்வதிக்கிறார், அவரை விசுவாசியாதோருக்கு அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுத்துத் தண்டிக்கிறார். மெய்யான விசுவாசிகள் அவருடைய களஞ்சியத்தில் சேர்க்கப்படுகிறார்கள், காற்றின் வேகத்தில் பறந்து சென்ற பதரோ ஒன்றுசேர்க்கப்பட்டு, அவியாத அக்கினியில் சுட்டெரிக்கப்படும். நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்வோம்.




  :   6 Likes

  :   13 Views