தெய்வீகப் பிரசன்னம்
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 27-Feb-2025



தெய்வீகப் பிரசன்னம்

“அப்படியே ஆசாரியர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியை ஆலயத்தின் சந்நிதி ஸ்தானமாகிய மகாபரிசுத்த ஸ்தானத்திலே கேருபீன்களுடைய செட்டைகளின்கீழே கொண்டுவந்து வைத்தார்கள்” (1 ராஜாக்கள் 8: 6).

ஆலயமும் அதைச் சார்ந்த சகல வேலைகளும் முடிந்த பிறகு, சாலொமோன் இஸ்ரவேலின் மூப்பர்களையும், கோத்திரப் பிரபுக்களாகிய இஸ்ரவேல் புத்திரரிலுள்ள பிதாக்களின் தலைவர்களையும், மக்களையும் கூட்டி, திறப்பு விழா நடத்தினான். ஒலிம்பிக் போன்ற உலகளாவிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் போது துவக்க விழா எவ்வாறு விமர்சையாக நடைபெறுமோ அவ்வாறே ஆலயத்தின் துவக்க விழாவையும் சாலொமோன் நடத்தினான். கர்த்தருக்காக அவன் கொண்டிருந்த வைராக்கியத்தை இது காட்டுகிறது. இதன் வாயிலாக கர்த்தருக்கு மிகப் பெரிய அளவில் மகிமையைச் சேர்க்க விரும்பினான். நாமும் சிறிய காரியங்களின் வாயிலாக மட்டுமின்றி, நமக்கு இரட்சிப்பைத் தந்து, சபையில் பிரசன்னராயிருக்கிற ஆண்டவருக்கு பெரிய அளவிலும் மனப்பூர்வமாகச் செய்வோம்.

எண்ணிக்கையும் கணக்குமில்லாத திரளான ஆடுகளையும் மாடுகளையும் பலியிட்டார்கள் (1 ராஜாக்கள் 8: 5).  அவன் சிறிய காரியங்களில் திருப்தியடையவில்லை. எத்தனை திரளான ஆடுகளையும், மாடுகளையும் பலியிட்டாலும், கர்த்தர் நமக்கு செய்த நன்மைக்கு ஈடாகாது என எண்ணினான். ஆகவே நாம் எப்பொழுதும் கர்த்தரைக் குறித்து உயர்ந்த எண்ணங்களைக் கொண்டிருப்போம். நம்முடைய ஆண்டவரின் இப்பூவுலக ஊழியத்தின் நாட்களில், ஒரு பெண் தான் ஓராண்டு வேலை செய்து பெறும் சம்பளப்பணத்திற்கு இணையான பணத்துக்கு வாங்கிய தைலக்குப்பியை உடைத்து ஆண்டவருடைய பாதத்தில் ஊற்றி அவரைக் கனப்படுத்தினாள். அவளைப் பொறுத்த வரை முந்நூறு பணத்துக்கு வாங்கிய தைலத்தைக் காட்டிலும், ஆண்டவரின் கனமே பெரிதாயிருந்தது. இவ்வளவு பெரிய காரியங்களைச் செய்ததற்காக சாலொமோன் மட்டுமின்றி, இந்த புதிய ஏற்பாட்டுப் பெண்ணும் இன்றைய நாள் வரை நினைவுகூரப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

ஆலயம் முழுவதும் கட்டி முடித்தாயிற்று. ஆயினும் அது செயல்பாட்டுக்கு வரவில்லை. காரணம் அங்கு இன்னும் உடன்படிக்கைப் பெட்டி வைக்கப்படவில்லை. எல்லாம் பிரமாதமாக இருந்தாலும் கிறிஸ்துவுக்கு அடையாளமாயிருக்கிற உடன்படிக்கை பெட்டி அங்கு இல்லாவிட்டால் அது வெறும் கட்டடம் மட்டுமே. இன்றைக்கும் கர்த்தருடைய பிரசன்னம் சபைகளில் இல்லை எனில், அச்சபையால் எதற்கும் பிரயோஜனமில்லை. நாம் பெரிய கட்டடங்களைக் கட்டலாம், மக்களையும் கூட்டிச் சேர்க்கலாம். ஆனால் கர்த்தர் அங்கு வீற்றிராவிட்டால் அது ஒரு சாதாரண பொதுநிகழ்வுக் கூடுகையைப் போலவே ஆகிவிடும். மேலும் இந்தப் பெட்டி முறைப்படி ஆசாரியர்களால் சுமந்து வரப்பட்டது. அவர்களாலேயே ஆலயத்தில் வைக்கப்பட்டது. ஆலயக் கட்டுமானப் பணியில் பல பேருடைய பங்களிப்பு இருந்தது. ஆனால் உடன்படிக்கைப் பெட்டியை ஆசாரியர்களே உள்ளே வைத்தார்கள். ஆண்டவர் சொன்ன மரபுகள் மீறப்படவில்லை. மேலும் தாவீது செய்த தவறு மீண்டும் நிகழாதபடி அது ஞானமாய்த் தவிர்க்கப்பட்டது. இங்கே தவறானது களையப்பட்டு, சரியானது நிறைவேற்றப்பட்டது. சொல்லாததைச் செய்வதும், சொன்னதைச் செய்யாதிருப்பதும் பாவம். நம்முடைய திருச்சபைகளிலும் வேதத்திற்கு ஒத்த காரியங்களே நடைமுறைப்படுத்தப்படும்படி நாம் விழிப்பாயிருப்போம். பிதாவே, நீர் எங்கள் வாழ்க்கையில் மையமாக இருப்பது மட்டுமின்றி, உம்முடைய பிரமாணங்களும் ஏற்றவிதத்தில் நிறைவேற்றப்பட உதவிசெய்வீராக, ஆமென்.




  :   16 Likes

  :   27 Views