“அவள் ஆகாபின் பெயரால் நிருபங்களை எழுதி, அவன் முத்திரையை அவைகளுக்குப் போட்டு, அந்த நிருபங்களை நாபோத் இருக்கும் பட்டணத்தில் அவனோடே குடியிருக்கிற மூப்பரிடத்துக்கும் பெரியோரிடத்துக்கும் அனுப்பினாள்” (1 ராஜாக்கள் 21:8).
நாபோத்தின் பரம்பரைச் சொத்தை தவறான முறையில் அபகரிப்பதற்காக யேசபேல் மிகவும் கொடூரமான ஒரு சதித்திட்டத்தை திட்டமிட்டாள். முதலாவதாக, அவள் போலியான கடிதம் ஒன்றை எழுதினாள். “அவள் ஆகாபின் பெயரில் கடிதங்களை எழுதி, அதில் அவனது அதிகார முத்திரையை இட்டு, அக்கடிதங்களை நாபோத் வசிக்கிற நகரத்தின் மூப்பர்களுக்கும் பெரியோரிடத்திற்கும் அனுப்பினாள்” . இரண்டாவதாக, ஒரு பொய்யான மதச்சடங்கில் ஈடுபடும்படி அதில் எழுதினாள். இதன் மூலம், எந்தக் கடவுளின் சட்டத்தின்படி திராட்சைத் தோட்டத்தை கொடுக்க மறுத்தானோ அந்த கடவுளின் பெயராலேயே அவனைக் கொலை செய்ய திட்டம் போட்டாள்.
தெய்வீக அச்சுறுத்தலைக் காட்டி ஒருவனைக் கொலை செய்தால் கேள்வி கேட்க எந்த மனிதரும் முன்வரமாட்டார்கள் என்று திட்டமிட்டு இப்படிச் செய்தாள். வேறு எந்தக் காரணங்களைக் காட்டிலும், கடவுளின் பெயராலும் மதத்தின் பெயராலும் நடைபெற்ற போர்களும், உயிரிழப்புகளுமே அதிகம் என்பதை வரலாறு கூறுகிறது. இயேசு கிறிஸ்துவுக்கு எதிராக எந்தப் பொய்சாட்சியும் எடுபடாமல் போனபோது, இவன் தேவதூஷணம் செய்தான் என்னும் குற்றச்சாட்டையே அவர் மீது சாற்றி அவரைக் கொலை செய்தார்கள் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். இன்றைய நாட்களிலும் மதத்தின் போர்வைக்குள் ஒளிந்துகொண்டு, பல்வேறு குற்றங்களைப் புரிவதைக் கண்கூடாகக் காண்கிறோம்.
தன்னுடைய சுய முடிவின் அடிப்படையில் ஒருவனைக்கொலை செய்வதற்காக சூழ்ச்சியை அமைத்துவிட்டு, பழியை அந்தக் நகரத்தின் பெரியவர்கள் மீது போட்டாள். தன்மீது சந்தேகம் வராமல் இருக்க அல்லது தான் காரணமாக இருந்துவிட்டு, மற்றவர்கள் மீது பழியை மடைமாற்றிவிட்டாள். ஏதுமறியாத நாபோத்தை மக்களின் நீதிமன்றத்திற்கு முன் கொண்டு வந்து நிறுத்தினாள். பொய் சாட்சி சொல்லும்படி பேலியாளின் மக்கள் இருவரை ஆயத்தம் செய்தாள். ஓர் எளிய மனிதனின் தோட்டத்தை அபகரிக்க ஏராளமான குற்றச் செயல்களில் ஈடுபட்டாள். தவறுக்கு மேல் தவறு செய்து, தேவனின் கோபத்திற்கு நெருக்கமாக வந்துகொண்டிருந்தாள்.
இவளுடைய செயல்கள், “பின்னும் சூரியனுக்குக் கீழே நான் நியாயஸ்தலத்தைக் கண்டேன், அங்கே அநியாயம் இருந்தது; நீதிஸ்தலத்தையும் கண்டேன், அங்கே அநீதி இருந்தது” ( பிரசங்கி 3:16) என்பது போலவே காணப்பட்டன. அந்த நகரத்தின் பெரியவர்களையும், முதியோர்களையும் தனது பாவச் செயலுக்கு உடந்தையாக்கினாள். நாபோத்துக்கு சூழ்ச்சி செய்து நகரத்தின் மக்களின் முன்னிலையில் அவப்பெயரை உண்டாக்கினாள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை இந்த வேளையில் நினைத்துப் பார்ப்போம். அவர் பாவம் செய்யவில்லை, வஞ்சனையான வார்த்தைகள் அவரது வாயிலிருந்து ஒருபோதும் புறப்பட்டு வந்ததில்லை. பொய்சாட்சிகளை அவருக்கு எதிராகக் கட்டவிழ்த்து விட்டார்கள். இறுதியில் கல்வாரி சிலுவையில் நமக்காக மாண்டார். தேவனுடைய குமாரன் நமது பாவங்களை கல்வாரிச் சிலுவையில் சுமந்து தீர்த்தார். நாம் விடுவிக்கப்படும்படி அவர் மரித்தார். அவரை நமது உள்ளப்பூர்வமாக நன்றியுடன் நினைவுகூருவோம்.
Write a public review