“அப்பொழுது எலியா சகல ஜனத்தண்டைக்கும் வந்து: நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள் என்றான்” (1 ராஜாக்கள் 18:21).
இப்பொழுது பிரச்சினை எலியாவுக்கும் ஆகாபுக்குமானதல்ல; பரிசுத்த தேவனுக்கும் பாகாலுக்குமானது. இஸ்ரவேல் நாட்டின் மக்கள் இரண்டு நினைவுகளால் ஆட்கொள்ளப்பட்டு, சரியான தீர்மானம் எடுக்காதபடிக்குக் குந்திக்குந்தி நடந்தார்கள். எனவே இப்பொழுது இரண்டில் ஒன்றைத் தீர்மானிக்கும் நேரம் வந்துவிட்டது. மக்கள் மனந்திரும்பி, விசுவாச வாழ்க்கைக்குத் திரும்பி வரும்வரை தேவனிடமிருந்து எவ்விதமான அற்புதத்தையும் எதிர்பார்க்க முடியாது. அவர்கள் விக்கிரகங்களை விட்டுத் திரும்ப வேண்டும், அல்லது கர்த்தருடைய கோபத்தைச் சந்திக்க வேண்டும். இரண்டில் ஒன்றைத் தீர்மானிக்க வேண்டிய நெருக்கடிகளுக்குள்ளாக எலியா மக்களைத் தள்ளினான். பிறருக்காக திறப்பிலே நின்ற பரிந்துரை ஜெபவீரர்களாக விளங்கிய நோவாவும், யோபுவும், சாமுவேலும், தானியேலும் மீண்டும் வந்து ஜெபித்தாலும் மனந்திரும்பாவிடில் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது (எசேக்கியேல் 14:20).
எகிப்திலிருந்து விடுதலையாகி வந்த இஸ்ரவேலர்கள் வனாந்தரத்தில் விக்கிரக ஆராதனையில் ஈடுபட்டபோது, மோசே அவர்களைப் பார்த்து, “கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர்கள் யார்? அவர்கள் என்னிடத்தில் சேரக்கடவர்கள்” என்று அழைப்புக்கொடுத்தார். கானானுக்குள் வந்த பிறகு, யோசுவா மக்களிடம், “யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்; நதிக்கு அப்புறத்தில் உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களைச் சேவிப்பீர்களோ? நீங்கள் வாசம்பண்ணுகிற தேசத்துக் குடிகளாகிய எமோரியரின் தேவர்களைச் சேவிப்பீர்களோ?” (யோசுவா 24:15) என அறைகூவல் விடுத்தான். நம்முடைய ஆண்டவரும் மலைப் பிரசங்கத்தில் இதே கருத்தை வலியுறுத்தினார். “இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டை பண்ணுவான்; தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது” (மத்தேயு 6:24). மேலும், “என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான்; என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்” (மத்தேயு 12:30) என்றும் கூறியிருக்கிறார்.
மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தேசத்தில் ஏற்பட்ட கடுமையான வறட்சி மன்னனிடத்திலும் மக்களிடத்திலும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. பஞ்சம் மக்களை மீண்டும் தேவனிடம் கூட்டிச் சேர்க்கவில்லை. பெரும்பாலான மக்கள் பாகாலைத் தொழுதுகொண்டார்கள், பாகாலைத் தொழுதுகொள்ளாதவர்கள் அரசனை எதிர்க்கப் பயந்தார்கள். ஆகவே எலியா மக்களை ஒரு இறுதியான தீர்மானத்திற்கு நேராகக் கொண்டு வந்து நிறுத்தினான். இன்றைக்கும் இது நமக்கு ஓர் எச்சரிப்பாக இருக்கிறது. நமக்கு நிலையான ஒரு கொள்கை வேண்டும், நாம் அங்குமிங்கும் அலைபாயக்கூடாது. பவுல் தீமோத்தேயுக்கு எழுதும்போது, “கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்” என்று சொல்லிவிட்டு, “நீ கற்று நிச்சயித்துக் கொண்டவைகளில் நிலைத்திரு” (2 தீமோத்தேயு 3:14) என்றும் புத்தி சொன்னார். ஆகவே நாம் இந்த உலகத்திற்கும், உலகத்தின் மக்களுக்கும் பயப்படாமல் கர்த்தரை மட்டுமே தெய்வமாகப் பற்றிக் கொண்டு வாழுவோம்.
Write a public review