உன்னதப்பாட்டு 8 : 7
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



உன்னதப்பாட்டு 8 : 7

"திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது, வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டாது; ஒருவன் தன் வீட்டிலுள்ள ஆஸ்திகளையெல்லாம் நேசத்துக்காகக் கொடுத்தாலும், அது முற்றிலும் அசட்டைபண்ணப்படும்.”

சபைக்கு, இயேசு கிறிஸ்துவின் மேல் இருக்கும் அன்பின் வெளிப்பாடு தான் இந்த வசனம். 

"திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது, வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டாது". திரளான தண்ணீர்கள் என்பது ஒரு பெரும் ஆபத்தையும், கஷ்டத்தையும், நஷ்டத்தையும் குறிக்கிறது. சபை சொல்கிறதாவது, என்னைச் சார்ந்த ஜனங்கள், யாவராலும் எங்களுக்கு நெருக்கம், கஷ்டங்கள் வந்தாலும், நாங்கள் உங்கள் மீது வைத்திருக்கிற அன்பு ஒருபோதும் குறையாது என்று சொல்கிறார்கள். அதேபோல் சிறு வெள்ளங்களும் (நெருக்கம், கஷ்டங்கள்) நமது அன்பை மூழ்கடிக்காது என்பதாக சபை இங்கே கூறுகிறார்கள். வேதத்திலே இதற்கு ஆதாரமாக கொடுக்கப்பட்டிருக்கிற வசனம்; ரோமர் 8 : 36 இல் "கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? ",  மேலும்  ரோமர் 8:38,39  இல் "மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும்,உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்” மேலும் ரோமர் 8 : 37 இல்  "வையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்பு கூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே" என்று கூறப்பட்டிருக்கிறது.

"ஒருவன் தன் வீட்டிலுள்ள ஆஸ்திகளையெல்லாம் நேசத்துக்காகக் கொடுத்தாலும், அது முற்றிலும் அசட்டைபண்ணப்படும்.” நம் வீட்டில் உள்ள எல்லா ஆஸ்திகளும் (அதாவது பணம், சொத்து, வசதி) கிறிஸ்துவின் அன்புக்கு ஒருபோதும் ஈடாகாது; கிறிஸ்துவின் அன்பு இந்த உலகத்தில் இருக்கின்ற எல்லாவற்றையும் விட மிகப் பெரியது; இயேசு கிறிஸ்துவின் அன்புக்கு முன் இந்த உலக ஆஸ்திகள்  ஒன்றும் இல்லை; உலக ஆஸ்திகளை நாங்கள் அசட்டை செய்கிறோம் என்று சபை கூறுகிறார்கள். 

அன்பானவர்களே! இந்த வசனம் கூறுவது என்னவென்றால், நமக்காக சிலுவையில் மரித்து, தமது அன்பை வெளிப்படுத்தின கர்த்தாதி கர்த்தரை நாம் ஸ்தோத்தரிப்போம். அதேவேளையில், நம்முடைய வாழ்வில் சில கஷ்டங்கள், போராட்டங்கள் வந்தாலும் கிறிஸ்துவின் அன்பில் நிலைத்து நிற்க நாம் ஒவ்வொருவருமே அழைக்கப்பட்டிருக்கிறோம். அதேப்போல இந்த உலகத்திலேயே எவ்வளவு ஆசீர்வாதங்கள் இருந்தாலும், பணம் இருந்தாலும், நல்ல அந்தஸ்து இருந்தாலும் அதெல்லாம் நம்முடைய வாழ்வில் கிறிஸ்துவின் அன்புக்கு ஈடாகாது. கிறிஸ்துவின் அன்பு அதை விட மேலானதாக நம்முடைய வாழ்விலே இருக்க வேண்டும் என்பதை இந்த வசனம் நமக்கு விளக்குகிறது. அதாவது இயேசு கிறிஸ்து தான் நமது வாழ்வில் முதன்மையானவராகவும், போற்றப்படத்தக்கவராகவும் இருக்க வேண்டும் என்பதை நமக்கு விளக்கிக் காட்டுகிறது. 

கிறிஸ்துவின் அன்பை அறியீர்களா?

குறிப்பு வசனம்: சங் 93 : 4, ஏசா 43 : 2, ரோமர் 8 : 39





  :   30 Likes

  :   99 Views