உன்னதப்பாட்டு 8 : 14
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



உன்னதப்பாட்டு 8 : 14

"என் நேசரே! தீவிரியும், கந்தவர்க்கங்களின் மலைகள்மேலுள்ள வெளிமானுக்கும் மரைகளின் குட்டிக்கும் சமானமாயிரும்.”

சபை இங்கே அழகான ஒரு தீர்க்கதரிசன வார்த்தையை முன்மொழிகிறது. "என் நேசரே! தீவிரியும்”  அதாவது, இயேசுவே சீக்கிரம் வாரும் என்பதாகும். வெளி 22 : 20 -ல் சபை இயேசுவைப் பார்த்து, கர்த்தராகிய இயேசுவே சீக்கிரம் வாரும் என்பதாக முடிகிறது.  அதே போல் உன்னதப்பாட்டிலும், கடைசி வசனம் என் இயேசுவே சீக்கிரம் வாரும் என்று இரண்டு வசனங்களிலும், சபை இயேசுவை நோக்கி, சீக்கிரம் வாருங்கள் என்று அழைக்கிற ஒற்றுமையை நாம் பார்க்கிறோம். மேலும் முழு உன்னதபாட்டும் மனவளனாகிய இயேசு கிறிஸ்துவின் வருகை குறித்து பேசுகிறது என்பதற்கு இந்த வசனம் ஒரு ஆதாரம்.  "என் நேசரே! தீவிரியும்”  என்று கூறி முடிக்கப்படுகிறது. 

"கந்தவர்க்கங்களின் மலைகள்மேலுள்ள வெளிமானுக்கும் மரைகளின் குட்டிக்கும் சமானமாயிரும்”  கந்தவர்க்கங்களின் மலைகள் என்பது பரிசுத்த பர்வதமாகிய உன்னதத்தை குறிக்கிறது  (சங்கீதம் 48:1,2, ஏசாயா 57:15). இனிமையான வாசனை திரவியங்களுடைய உயர்ந்த மலையாகிய பரலோகத்திலிருந்து, மகிமையோடு இறங்கி வருகிற இயேசு கிறிஸ்துவை இந்த வசனம் விளக்குகிறது. அங்குதான் பிதாவின் வலது பாரிசத்தில் குமரன்  வீற்றிருக்கிறார். அங்கிருந்து வரும்படியாக மணவாட்டி சபை மணவாளனை அழைக்கிறார்கள். கிறிஸ்துவை அடைந்து அவரோடு இருக்க வேண்டும் என்று உண்மையான விசுவாசிகள் அவரைத் தேடிக்கொண்டிருப்பதால், கர்த்தருடைய அந்த நாள் வருவதற்கு அவர்கள் ஆவலோடு இருக்கிறார்கள்.

வெளிமானுக்கும் மரைகளின் குட்டிக்கும் சமானமாயிரும் என்பது வேகத்தை குறிப்பிடுகிறது (1 நாளாகமம் 12:8).  அவர் சீக்கிரமாக வரவேண்டும் என்ற  சபையினுடைய ஏக்கத்தையும், ஆவலையும் இங்கே வெளிப்படுத்துகிறது.

அன்பானவர்களே! ஒரு நாள் மணவாளனாகிய இயேசு கிறிஸ்து மகிமையோடு பரலோகத்திலிருந்து வருவார். அவரைச் சந்திக்க ஆயத்தமா? அவர் வருகையை ஆவலோடு எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறீர்களா? என் மணவாளனே, தீவிரியும் என்று கேட்கிறீர்களா? மணவாட்டிக்கான தகுதியை அறிந்திருக்கிறீர்களா? நான் கிறிஸ்துவின் மணவாட்டி என்ற விசுவாசம் இருக்கிறதா? ஆயத்தமாகுங்கள், மற்றவர்களை ஆயத்தப்படுத்துங்கள்.

இயேசு கிறிஸ்துவின் வருகை அதிசீக்கிரம்! 

அதிசீக்கிரம்! அதிசீக்கிரம்!

என் நேசரே வாரும். ஆமென்.

குறிப்பு வசனம்:  சங் 70 : 1, 5, பிலி 3 : 20, 2 பேதுரு 3 : 9




  :   26 Likes

  :   98 Views