உன்னதப்பாட்டு 7 : 9
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



உன்னதப்பாட்டு 7 : 9

"உன் தொண்டை, என் நேசர் குடிக்கையில் மெதுவாயிறங்குகிறதும், உறங்குகிறவர்களின் உதடுகளைப் பேசப்பண்ணுகிறதுமான, நல்ல திராட்சரசத்தைப்போலிருக்கிறது.”

தொண்டையில் தான் குரல் வளையம் இருக்கிறது. சபையே உன் தொண்டையிலிருந்து வருகிற கர்த்தருடைய வார்த்தை, பாடல், ஆராதனை இதையெல்லாம் நேசராகிய இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவியானவர் மூலம் நிரப்புகையில், மற்ற ஜனங்களின் மனக்கண்கள் திறக்கப்படுகிறது. அப் 16 : 14 -ல் ஒரு பெண், பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தை திறந்தருளினார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இவ்வாறு கர்த்தருடைய வார்த்தைகளைப் பேசுகிறவர்கள் மூலம், உறங்குகிறவர்களின் உதடுகளும் பேசத்துவங்கும். அதாவது சபையில் எந்தவொரு செயல்பாடுகளும் இல்லாமல் கடமைக்காக கிறிஸ்தவர்களாக இருக்கிறவர்களும், கர்த்தருடைய வார்த்தையினால் தொடப்பட்டு, அவர்களும் கர்த்தருடைய நாமத்தை பிரஸ்தாபப்படுத்துகிறவர்களாக மாறுகிறார்கள் என்று சொல்கிறது.  ஏசா 6 : 7, 8 -ஆம் வசனத்தில் ஏசாயாவின் உதடுகள் தொடப்பட்டதினால் கர்த்தருடைய வார்த்தையை இஸ்ரவேல் ஜனங்களுக்கு அறிவிக்க தன்னை அர்ப்பணித்தான். அதேபோல் எசே 3 : 3-4 -ல் கர்த்தர் சுருளைக் கொடுத்துச் சாப்பிடச் சொல்கிறார், பின்பு 4-ஆம் வசனத்தில் என் வார்த்தைகளைக் கொண்டு அவர்களோடே பேசு என்கிறார்.

கர்த்தருடைய வார்த்தை ஜீவனுள்ள வார்த்தை , அது வெறுமென திரும்புகிறதில்லை; இவ்வார்த்தை  நமக்குள் இருந்து, நம் வாய் வழியாக வருகிறப்பொழுது, இயேசு கிறிஸ்து சொல்கிறார், தூங்குகிறவர்களையும் எழுப்பி விடுகிறது என்று. அதாவது, இந்நாளில் நாம் சொல்லிக் கொண்டிருக்கிற எழுப்புதலை, இது வெளிப்படுத்துகிற ஒரு காரியமாக இருக்கிறது.

அதேபோல் இங்கு தொண்டை நல்ல திராட்சரசத்திற்கு ஒப்பிடப்படுகிறது. நல்ல திராட்சரசம் இயேசு கிறிஸ்துவின் அற்புதம், வல்லமை, கிரியையை வெளிப்படுகிறது (யோவான் 2 : 10). இயேசு கிறிஸ்து கானாவூர் கல்யாண வீட்டில் தண்ணீரைத் திராட்சரசமாக மாற்றினார். அப்பொழுது ஜனங்கள் நல்ல திராட்சரசத்தை கடைசியில் கொடுக்கிறீர்களே என்று கூறுவதைப் பார்க்கலாம். இந்த வசனம் கூறுகிறது என்னவென்றால் கிறிஸ்துவின் அற்புதம், வல்லமை, கிரியை சபையின் தொண்டையிலிருந்து வருகிற வாயின் வார்த்தைகள் மூலமாக நடப்பதை தெளிவுப்படுத்துகிறது.

உங்கள் வாய் (தொண்டை) கிறிஸ்துவினால் பயன்படுத்தப்படுகிறதா?

குறிப்பு வசனம்: நீதி 16 : 24, எபே 4 : 29, எபி 13 : 15




  :   22 Likes

  :   76 Views