உன்னதப்பாட்டு 7 : 7
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



உன்னதப்பாட்டு 7 : 7

"உன் உயரம் பனைமரத்தொழுங்கு போலவும், உன் ஸ்தனங்கள் திராட்சக்குலைகள்போலவும் இருக்கிறது.”

பனைமரம் உயரமாக, நேராக, கம்பீரமாக மற்றும் நிமிர்ந்து வளர்கின்ற ஒரு மரம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சபையை பனைமரத்தோடு நேரடியாக ஒப்பிட்டுப் பேசுகிறார். பனைமரம் தொடர்ந்து பசுமையாகவும், செழிப்பாகவும் இருப்பதால், புயல் போன்ற எல்லா அழுத்தங்களையும் மீறி மேல் நோக்கி வளர்கிறது. பனைமரத்தின் சிறப்புகளாக வேதம் கூறுவது யாதெனில், நீதிமான் பனையைப்போல் செழித்து வளருவான் என்று சங் 92 : 12 -ல் பார்க்கிறோம். ஏனென்றால் அவருடைய இரட்சிப்பைப் பெற்று அவரால் நாம் நீதிமானாக்கப்படுகிறோம் என்று வேதம் சொல்கிறது. மேலும் பனைமரம் தண்ணீர் இல்லாத வறட்சியான காலங்களிலும், செழித்து வளரும், கனிகளை கொடுக்கும். இன்று சபையும் கிறிஸ்துவின் பார்வையில், எல்லா சூழலிலும் வறட்சியான  சூழலிலும் ஆவிக்குரிய வளர்ச்சியில் செழித்து காணப்படுகிறவர்களாக இருக்கிறார்கள்.

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து இன்று சபையைப் பார்த்து சொல்கிறது என்னவென்றால் நீங்கள் பனைமரத்தை போல உயரமாக சிறந்து காணப்படுகிறீர்கள். இந்த உலகத்தில் எத்தனையோ மரங்கள் இருந்தாலும் பனைமரம் தான் உயரமாக கருதப்படுகிறது. அதேபோல இந்த உலகத்தில் எத்தனையோ ஜனங்கள் இருந்தாலும், என் ஜனமாகிய நீங்கள் தான் பனைமரத்தைப் போல என் பார்வையில் உயரமானவர்களாக, நீதிமான்களாக, வெற்றி பெற்றவர்களாக காணப்படுகிறீர்கள். மேலும் புயல் போன்ற எத்தனை கஷ்டங்கள் உங்கள் வாழ்வில் வந்தாலும் நீங்கள் உயர்ந்து காணப்படுவீர்கள் என்று இயேசு கிறிஸ்து தன்னுடைய சபையைப் பார்த்து கூறுகிறார். அன்பானவர்களே! இந்த பனைமரத்துக்குரிய ஆசீர்வாதம் நம்முடைய வாழ்வில் வேண்டுமானால், இயேசு கிறிஸ்துவோடு நெருங்கி வாழ்கிற ஒரு உன்னத அனுபவம் நமது வாழ்வில் காணப்பட வேண்டும்.

"உன் ஸ்தனங்கள் திராட்சக்குலைகள்போலவும் இருக்கிறது” இந்த வசனத்திற்கு ஆதாரமான தீர்க்கதரிசன வசனம் ஏசா. 66 : 10-13 -ல் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வார்த்தையை கர்த்தரே சொல்லுகிறார் (ஏசா. 66 : 12). இதனுடைய அர்த்தம் என்னவென்றால், தனது பிள்ளைகளைப் போஷித்து காப்பாற்றும் தாய்க்கு சபை ஒப்பிடப்படுகிறது. அதேபோல் கர்த்தரை நேசிப்பவர்களுக்கும், சபையினிடத்தில் வருகின்ற புறஜாதிகளுக்கும் சபை சமாதானமாகவும் ஆறுதலாகவும் இருக்கும். அதே நேரத்தில் ஒரு தாய் தேற்றுவது போல் கிறிஸ்து நம் ஒவ்வொருவரையும் தேற்றுகிறார்  (ஏசா. 66 : 13) என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஸ்தனம் என்பதின் தீர்க்கதரிசன வெளிப்பாடு ஏசா. 66 : 10 -13 -ன் படி ஆறுதல், போஷிப்பு மற்றும் தேற்றுவது ஆகும். மேலும் இது சபையினுடைய மார்க்கவசத்தைக் குறிக்கிறது. சபையினுடைய மார்க்கவசம் என்பது அன்பும், விசுவாசமும் (1 தெச. 5 : 8). சபையே நீங்கள் அன்பு, விசுவாசம் என்னும் மார்க்கவசத்தையும் உடையவர்களாக திராட்சக்குலைகள் போல இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. திராட்சக்குலைகள் என்பது ஒரு வளர்ச்சியும் ஒரு பெருக்கத்தையும் காட்டுகிறது. இந்த வசனம் சபைக்குரிய ஒரு வளர்ச்சியை மட்டும் குறிக்காமல், மற்றவர்களுக்காக சபை தன் வாழ்நாள் முழுவதும் பிரயோஜனமாக மற்றவர்கள் வாழ்வில் செழிப்பானவர்களாக, ஆசீர்வாதமானவர்களாக காணப்பட வேண்டும். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், மற்றவர்களுடைய தேவைகளை சபை சந்திக்க வேண்டும்.  இப்படிப்பட்டவர்கள் திராட்சகுலைகளைப் போல சபையில் செழித்து காணப்படுகிறார்கள் என்று மணவாளன் குறிப்பிடுகிறார்.

நீங்கள் கிறிஸ்துவின் பார்வையில் நீதிமானாக உயர்ந்து இருக்கிறீர்களா?

குறிப்பு வசனம்: எரே 10 : 5




  :   28 Likes

  :   93 Views