உன்னதப்பாட்டு 7 : 1
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



உன்னதப்பாட்டு 7 : 1

 "ராஜகுமாரத்தியே! பாதரட்சைகளிட்ட உன் பாதங்கள் மிகவும் அழகாயிருக்கிறது; உன் இடுப்பின் வடிவு விசித்திரத் தொழிற்காரரின் வேலையாகிய பூஷணம்போலிருக்கிறது.”

மணவாளன்,  மணவாட்டியாகிய ராஜகுமாரத்தியின் பூரண மகிமையை இந்த அதிகாரம் முழுவதும் அழகும், நயமும் கொண்டதாக வர்ணிக்கிறார்.

"ராஜகுமாரத்தியே!” மணவாட்டியாகிய சபையை ராஜகுமாரத்தி என்று அழைக்கப்படுகிறது. சங்கீதம் 45:13 ,ல் "ராஜகுமாரத்தி உள்ளாக பூரண மகிமையுள்ளவள்"  இந்த வசனத்தில் ராஜகுமாரத்தியின்; உள்ளான பூரண மகிமையை குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியானால் சபையாகிய மணவாட்டியின் ஆத்தும அழகை குறித்து மணவாளன் இந்த அதிகாரத்தில் பேசுகிறார். சரீர பிரகாரம் உள்ள அழகை அல்ல என்பதை நாம் புரிந்து இந்த அதிகாரத்தை தியானிப்போம். ராஜகுமாரத்தியாகிய மணவாட்டி எவ்வாறு காணப்பட வேண்டும்? சங்கீதம் 45 : 9,13,14 இல் ராஜஸ்திரீ ஓப்பீரின் தங்கம் அணிந்தவளாய், அவள் உடை பொற்சரிகையாயிருந்து, சித்திரத்தையலாடை தரித்தவளாய் காணப்பட வேண்டும். பொன்,தங்கம் என்பது வார்த்தையை குறிக்கும். அதாவது ஆவிக்குரிய வார்த்தையாகிய வஸ்திரத்தை தரித்துக் கொண்டவராய் மணவாட்டி காணப்பட வேண்டும். அப்பொழுது ராஜா உன் அழகில் பிரியப்படுவார்; (சங்கீதம் 45:11) இல்  என்று சொல்லப்பட்டிருக்கிறது.

 "பாதரட்சைகளிட்ட உன் பாதங்கள் மிகவும் அழகாயிருக்கிறது”  என்று இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. "பாதரட்சை” என்பது சமாதானத்தின் சுவிசேஷத்தைக் குறிப்பிடுகிறது. "சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்.”  என்று (எபே 6 : 15) ,ல் சொல்லப்பட்டிருக்கிறது. "சமாதானத்தின் சுவிசேஷம்” என்பது நற்செய்தி என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால், மனிதர்களை சமாதான மனப்பான்மை மற்றும் நடத்தைக் கொண்டவர்களாக இருக்க  இது நித்திய சமாதானத்திற்கான வழியில் வழிநடத்துகிறது. ஏனெனில், இது இயேசு கிறிஸ்துவின் சமாதானத்தை வெளிப்படுத்துகிறது. ஆகவே ஒரு கிறிஸ்தவன், தனது காலடி எடுத்து வைக்க உறுதியான அடித்தளத்தை அளிக்கிறது. காலணி நமது காலை முள்ளிலிருந்தும், கல்லிலிருந்தும் பாதுகாக்கிறது போல, சமாதானத்தின் சுவிசேஷம் ஒரு மனிதனுடைய வாழ்வில் இருக்கும் பல கஷ்டங்களை எதிர்க்கொள்ளவும், நேர்மையோடு நடக்கவும், அழகாகவும், பாதுகாப்பாகவும் மற்றும் தீமையை எதிர்த்துப் போரிடவும் உதவுகிறது. இந்த நற்செய்தி விசுவாசிகள் விசுவாசத்தில் நிலையாக மற்றும் உறுதியாக இருக்க உதவுகிறது. 

இப்படிப்பட்ட சமாதானமாகிய சுவிசேஷத்தைப் பாதரட்சைகளாக அணிந்து, இரட்சிப்பைப் பிரஸ்தாபப்படுத்துகிற சபையினுடைய பாதங்கள் எவ்வளவு அழகாக இருக்கிறதென்று  வேதம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது. ஏசா 52 : 7 இல் "சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன.” என்று சமாதானத்தின் சுவிசேஷத்தைப் பற்றி அழகாக வேதம் குறிப்பிடுகிறது.

"உன் இடுப்பின் வடிவு” என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சபையைப் பார்த்துச் சொல்கிறார், அதாவது சபையே, என்னுடைய சத்தியத்தை நீ உன் இடுப்பிலே கச்சையாக அணிந்து கொண்டிருக்கிறாய். இது என் பார்வையில் ஏற்றதாக இருக்கிறது என்கிறார். "சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும்.” என்று எபே 6 : 14 இல் பார்க்கிறோம். சத்திய வார்த்தையின் மூலம் நாம் எல்லாவற்றையும் சோதித்து, நம் இருதயத்தில் ஒருமனப்பாட்டையும், நம் அழைப்பிற்கு விசுவாசத்தையும் வளர்க்க அனுமதிக்க வேண்டும். கர்த்தரால் வரும் சத்தியத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்;  ஏனென்றால் சத்தியம் நம்மை விடுதலையாக்கும். யோவான் 8 : 32 -ல், "சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்"  என்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. சத்தியம் என்பது தேவன் அருளிய பரிசு. அவருடைய சத்திய வார்த்தையில் நிறுவப்பட்டிருக்கிற நாம், பரிசுத்த ஆவியால் சத்தியத்தில் சூழப்பட்டிருக்கிறோம். அவர் நம்மை எல்லா சத்தியத்திற்குள்ளும்  வழிநடத்துவார். மேலும் சத்தியம் நம்மை பாவம் மற்றும் சாத்தானின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கிறது. இது நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவில் வெளிப்படுத்தப்பட்டது. அவர் தான், "நானே வழியும் சத்தியமும்” என்று கூறினார். சத்தியம் என்பது பரிசுத்தத்திற்கும், தேவ நீதிக்கும் வழிவகுக்கும் பாதை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

"விசித்திரத் தொழிற்காரரின் வேலையாகிய பூஷணம்போலிருக்கிறது” இதில் "பூஷணம்” என்பது ஒரு அழகான அணிகலன். உலகில் சிறந்த திறமையான தொழிற்காரர் செய்த, இடுப்பில் அணியும் விசித்திர வேலைப்பாடுகளுள்ள ஒரு அணிகலனை அணிவது போல, சத்தியம் என்னும் கச்சையை இடுப்பில் கட்டி இருக்கிற ஒவ்வொரு தேவ பிள்ளையும், தங்கள் இடுப்பில் சத்தியத்தை அணிகலனாக அணிந்திருப்பதாக மணவாளன் இயேசு கிறிஸ்து கூறுகிறார். 

அன்பானவர்களே! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, இந்த வசனத்தின் மூலம், சபையை வர்ணித்து பேசுகிறார். அதாவது அவருடைய இரட்சிப்பின் சுவிசேஷத்தை மற்றும் சமாதானத்தின் சுவிசேஷத்தை சுமந்து நடந்து திரிகிற கால்கள், அவருடைய பார்வைக்கு மிகவும் அழகாக இருக்கிறதென்று வர்ணித்து நம்மைப் பேசுகிறார். அதேபோல் எந்த சபைகளிலே தேவனுடைய சத்தியம், அதாவது தேவ வசனம் இருக்கிறதோ அது மிகவும் விசித்திரமான தொழிலாளர்களின் வேலையாகிய அணிகலன் போல் இருக்கிறது என்று மணவாளன் கூறுகிறார். அதாவது இயேசு கிறிஸ்து ஆச்சரியப்படும் அளவிற்கு, அதன் செய்கை இருக்கிறது. நாமும் கூட ஒரு விசித்திரமான வேலைகளைப் பார்த்தோமென்றால், ஆச்சரியத்தில் நாம் அதை வியப்போடு பார்ப்போம் அல்லவா? அதைப்போல் இயேசுகிறிஸ்து சபையை ஆச்சரியத்தோடு பார்க்கிறார். என் சத்தியம் இருக்கும் என் சபை, என் பார்வையில் ஆச்சரியமாக விளங்குகிறதென்று நெகிழ்ச்சியுடன் சபையைப் பார்த்து சந்தோஷமாக கூறுகின்றார். 

இதைப்படிக்கின்ற நாம் ஆண்டவரின் சுவிசேஷத்தை சுமந்து செல்கிற கால்களாக நம் கால்கள் இருக்கிறதா? என்று சிந்தித்து பார்க்கவேண்டும். இல்லையென்றால் இன்று அர்ப்பணிக்கலாமா? அவருடைய வசனம் என்னும் சத்தியத்தை நம் அரையில் (இடுப்பில்) கட்டி இருப்பவர்களாக வாழ்கிறோமா? உறுதிப்படுத்திக் கொள்வீர்களா? இயேசுகிறிஸ்து நம்மிடம் இதைத்தான் எதிர்பார்க்கிறார். அவ்வாறு செய்கிறவர்களைப் பார்த்து சந்தோஷப்படுகிறார்.

உங்கள் கால்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை சுமந்து செல்கிறதா? அவரது சத்தியத்தில் நடக்கிறீர்களா?

குறிப்பு வசனம்:  யாத் 12 : 11, லூக் 15 : 22, எபே 6 : 15, உபா 33 : 25




  :   29 Likes

  :   97 Views