உன்னதப்பாட்டு 6 : 11
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



உன்னதப்பாட்டு 6 : 11

"பள்ளத்தாக்கிலே பழுத்த கனிகளைப் பார்க்கவும், திராட்சச்செடிகள் துளிர்விட்டு, மாதளஞ்செடிகள் பூத்ததா என்று அறியவும், வாதுமைத் தோட்டத்துக்குப் போனேன்.”

உன்னதத்தில் இருக்கிற இயேசு கிறிஸ்து பூமியாகிய பள்ளத்தாக்கிலே இருக்கிற சபையைப் பார்த்து, அந்தச் சபையிலே இருக்கிற அனுபவம் வாய்ந்த ஜனங்கள் ஆவிக்குரிய கனிகளைப் பெற்றவர்களாக இருக்கிறதைப் பார்த்து மகிழவும், அநேகருடைய விசுவாசம் எனும் வேர் இயேசு கிறிஸ்துவுக்குள் ஆழமாய் வேரூன்றி   துளிர்விட்டு எழும்புகிறததைப் பார்க்கவும், கனிகளைக் கொடுக்க விசுவாசிகள் ஆயத்தமாக இருக்கிறார்களா என்பதை அறியவும், வாதுமைத் தோட்டமாகிய சபையில் பிரசன்னம் கொடுப்பதற்கு, அவர் சபைக்கு வந்திருக்கிறார் என்பதை இந்த பகுதி மூலம் அவர் நமக்கு எடுத்துக் கூறுகிறார். 

அதே போல் இந்த வசனத்தோடு ஒருமித்த ஒரு வசனம்   ஆதி 40 : 10 -ல் வருகிறது. அங்கே பானபாத்திரக்காரனுக்கு வருகிற சொப்பனத்திற்கு யோசேப்பு ஒரு விளக்கத்தை கொடுக்கிறதை நாம் பார்க்க முடிகிறது. அந்த சொப்பனம் என்னவெனில், "அந்தத் திராட்சச்செடியிலே மூன்று கொடிகள் இருந்தது; அது துளிர்க்கிறதாயிருந்தது; அதில் பூக்கள் மலர்ந்திருந்தது; அதின் குலைகள் பழுத்த பழங்களாயிருந்தது." அதன் அர்த்தம் உன் தலை மறுபடியும் உயர்த்தப்படும் என்பதாக அமைந்துள்ளது  (ஆதி 40 : 13). பானபாத்திரக்காரனுடைய சொப்பனத்தில் துளிர், பூக்கள், பழம் என்ற மூன்றும் வந்தது. அதேபோல்  இந்த வசனத்திலேயும் துளிர், பூக்கள், பழம் என்ற மூன்று வார்த்தைகளும் வருகிறதை நாம் பார்க்க முடிகிறது. எனவே கிறிஸ்துவும் இங்கே சபைக்கு வந்து, நமது தலையை உயர்த்த விரும்புகிறார். அதே வேளையில் உயர்த்தப்பட்ட தலைகளைப் பார்க்க வருகிறார். "ஆனாலும் கர்த்தாவே, நீர் என் கேடகமும், என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்." (சங் 3 : 3) என்ற வசனத்தின்படி, சபையே கிறிஸ்துவினால் நம் தலை உயர்த்தப்படுகிறது, எல்லாக்காரியங்களிலும் இதை நாம் பெற்றுக்கொள்ள தகுதியுடையவர்களாக மாறுவோம்.

அன்பானவர்களே! இயேசு கிறிஸ்து தனது சபையில் கனி கொடுக்கிறவர்களையும், சிலர் கனி கொடுக்கிறார்களா என்பதையும், சபையின் தலை உயர்த்தப்பட்டிருக்கிறதா என்பதையும் பார்க்க வருகிறார்.

உங்கள் தலை உயர்த்தப்பட்டு கனி கொடுக்கிறீர்களா?

குறிப்பு வசனம்: ஆதி 2: 9, சங் 1: 3, சங் 92: 12-15, யோவான் 15: 16





  :   27 Likes

  :   96 Views