உன்னதப்பாட்டு 5 : 5
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



உன்னதப்பாட்டு 5 : 5

 "என் நேசருக்குக் கதவைத்திறக்க நான் எழுந்தேன்; பூட்டின கைப்பிடிகள்மேல் என் கைகளிலிருந்து வெள்ளைப்போளமும், என் விரல்களிலிருந்து வாசனையுள்ள வெள்ளைப்போளமும் வடிந்தது.”

"என் நேசருக்குக் கதவைத்திறக்க நான் எழுந்தேன்;” என்பது என்னவென்றால், பின்வாங்கி போன கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவுக்கு தங்களுடைய ஆத்தும கதவைத் திறக்கலாம் என்று நினைக்கிறார்கள்; ஆனால் அவர்களால் இன்னும் திறக்க முடியவில்லை. ஓசியா 6 : 1 -ல் சொல்லியிருப்பது போல், இவர்கள் தங்களை ஆயத்தப்படுத்துகிறார்கள்.

"பூட்டின கைப்பிடிகள்மேல் என் கைகளிலிருந்து வெள்ளைப்போளமும், என் விரல்களிலிருந்து வாசனையுள்ள வெள்ளைப்போளமும் வடிந்தது” நேசருடைய  சத்திய வாசனை கைப்பிடியின் மேல் பட்டதினால், அங்கிருந்து சபையாகிய ஸ்தியின் கைகளிலும் இந்த வெள்ளைப்போள வாசனை வடிய தொடங்கியது. இங்கே கதவை நாம் ஆத்துமாவோடு ஒப்பிட்டுள்ளோம். பின்வாங்கிப் போன கிறிஸ்தவர்கள், கிறிஸ்துவின் ஆறுதல் கிடைக்க முயற்சிக்கிறார்கள். அவரோடு ஐக்கியப்படுவதற்கு உலகத்தில் வரும் இடையூறுகளை நீக்க முயற்சிக்கிறார்கள். கிறிஸ்து இவர்களைத் தேடி இவர்களின் ஆத்தும வாசற்படியில் வந்ததினால், கிறிஸ்துவினுடைய வெள்ளைப்போள வாசனை இப்படிப்பட்ட கிறிஸ்தவர்களின் ஆத்துமாவில் வீச தொடங்குவதைக் குறிப்பிடுகிறது. எப்படிப்பட்ட வாசைன இது?       2கொரிந்தியர் 2 : 14-16 இல் சொல்லப்பட்டிருக்கிற கர்த்தரை அறிகிற வாசனை. இது ஒரு கவிதை மற்றும் பாடல் என்பதால் இங்கே குறிப்பிடப்பட்டுள்ள கை மற்றும் விரல்கள் ஆத்தும எண்ணங்களைக் குறிக்கிறது. கதவின் கைப்பிடியில் அவர்கள் கை இருக்கிறது; ஆனால் முழுமையாக இயேசு கிறிஸ்துவுக்கு தங்கள் ஆத்தும கதவைத் திறக்கவில்லை.

இன்று அநேக கிறிஸ்தவர்கள் இயேசுவை விசுவாசிக்கிறவர்கள், அவருக்கு தங்கள் இருதயத்தில் முக்கிய இடம் கொடுக்க நினைக்கிறார்கள். ஆகையால், கிறிஸ்துவினுடைய வாசனை மெல்ல வீச தொடங்கும். ஆனாலும் உலக இச்சைகள், மாமிச சிந்தைகளிலிருந்து அவர்களால் முழுமையாக ஜெயம் கொள்ளமுடியாமல் போய்விடுகிறது. இயேசு கிறிஸ்துவின் அன்பையும், கிருபையையும், வாசனையையும் உணர்கிறார்கள்; ஆனாலும் கதவைத் திறந்து அவரை முழுமையாக பெற்றுக்கொள்ள  முடியவில்லை.

 இந்த வசனத்தை இயேசு கிறிஸ்து சொன்ன கன்னிகைகள் உவமையோடு ஒப்பிடலாம் (மத் 25 : 8 - 11).  இயேசு கிறிஸ்து கொடுத்த காலத்தை பயன்படுத்தாமல், புத்தியில்லாமல் ஆயத்தமில்லாத கன்னிகைகளுக்கு கதவு அடைக்கப்பட்டது போல, இங்கே இயேசு கிறிஸ்து கதவின் துவாரத்தின் வழியாய் அழைத்த போது அவருக்குச் செவி கொடுக்காமல்,  ஆயத்தமில்லாமல் இருந்து, கடைசியாக அவருக்கு கதவைத் திறக்கலாம் என்றெண்ணி கைப்பிடியில் கையை வைக்கிறதை இந்த வசனம் குறிப்பிடுகிறது. ஆனாலும் ஆயத்தமில்லாத கன்னிகைகள் கடைசியில் முயற்சித்தும் கதவு அடைக்கப்பட்டது போல, தங்கள் இருதயத்தில் முழுமையாக இடங்கொடுக்காத கிறிஸ்தவர்களின் முடிவும் இந்த புத்தியில்லா கன்னிகைகள் போல் அமையும். இதை நாம் உன் 5 : 6   (அடுத்த வசனம்) -ல் பார்க்க முடியும்.

அன்பானவர்களே! நம் ஆத்தும நேசர் எத்தனையோ விதத்தில், வேதத்தின் மூலமாக நமக்கு சபை எடுத்துக் கொள்ளப்படுதல், கைவிடப்படுதலைப் பற்றி கூறியிருக்கிறார். இந்த உன்னதப்பாட்டாகிய பழைய ஏற்பாட்டிலும் தீர்க்கத்தரிசனமாக  கூறியிருக்கிறார். இதைப்படிக்கிற யாராக இருந்தாலும் ஆண்டவருக்கு முழுமையாக உங்கள் இருதயத்தைக் கொடுங்கள். புத்தியில்லாத கன்னிகைகள் போல் இருக்காதீர்கள். இது வேதத்தின் மூலம் நமக்கு கொடுக்கப்படுகிற எச்சரிக்கை, இன்றே மனம் திரும்புங்கள். நாம் பெயர் கிறிஸ்தவர்களாக அல்லது ஒரு சபையில் உறுப்பினராக இருப்பதால் எந்தப் பயனும் இல்லை: நாம் கிறிஸ்துவை உடையவர்களாய் அவருக்கு நமது இருதயக் கதவைத் திறக்கிறவர்களாய் இருக்க வேண்டும்.

உங்கள் ஆத்துமாவில் கிறிஸ்துவுக்கு முழுமையான இடம் இருக்கிறதா? கடைசி காலத்தில் இருக்கிறோம்.

குறிப்பு வசனம் :  சங் 119 : 59 - 60, லூக்கா 12 : 36, எபேசியர் 3 : 17, வெளி 3 : 20




  :   22 Likes

  :   84 Views