உன்னதப்பாட்டு 5 : 12
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



உன்னதப்பாட்டு 5 : 12

"அவருடைய கண்கள் தண்ணீர் நிறைந்த நதிகளின் ஓரமாய்த் தங்கும் புறாக்கண்களுக்கு ஒப்பானவைகளும், பாலில் கழுவப்பட்டவைகளும், நேர்த்தியாய்ப் பதிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது.”

இயேசு கிறிஸ்துவின் கண்கள் இன்றும் நமக்காக கண்ணீர் சிந்துகிற கண்களாயிருக்கிறது. (லூக் 19 : 41, யோவான் 11 : 35). உலகத்தில் அநேக தெய்வங்கள் உண்டு என்று சொல்லப்பட்டாலும், நமக்காக அழுகிறவர், நம்மை நேசிக்கிறவர் இயேசு மட்டுமே; நாம் நினைக்கலாம் நான் மட்டும்தான் அழுது கொண்டிருக்கிறேன் என்று; இல்லை, அவருடைய பிள்ளைகள் அழுகிற பொழுது இயேசு கிறிஸ்து அவர்களோடு சேர்ந்து அழுகிறார். லாசருவுக்காக அழுத இயேசு (யோவான் 11: 35) இன்று நமக்காகத் தவிக்கிறார், நம்மை விடுவிக்கிறார். இப்படிப்பட்ட நேசத்தை யாராலும் நமக்கு கொடுக்க முடியாது.

இயேசு கிறிஸ்துவின் பார்வை வேறு, நம்முடைய பார்வை வேறு இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு, அவர்  பூமி எங்கும் பார்க்கிற பார்வை வித்தியாசம்; ஜனங்களுக்காக கண்ணீர் விடுகிற ஆண்டவர்; அவர் ஏன் கண்ணீர் விட வேண்டும்? அவருடைய இருதயத்தில் ஜனங்கள் மீது பாசமும், அக்கறையும் உள்ளவராக இருக்கிறார். எனவே ஜனங்கள் அவரைவிட்டு பின்வாங்குகிற பொழுதும், பாவம் அக்கிரமம் பூமியில் மிகுதியாகிறபொழுதும், ஜனங்கள் அறிவில்லாமல் மாண்டு போகிற பொழுதும், அவர் ஜனங்களுக்காக கண்ணீர் விடுகிறார்.

இயேசு கிறிஸ்துவின் கண்கள் புறாக் கண்களுக்கு ஒப்பிடப்பட்டிருக்கிறது. புறாக் கண்கள் சமாதானத்திற்கும், பரிசுத்தத்திற்கும் வேதம் ஒப்பிடுகிறது. புறாக்கள் தங்கள் துணையை மட்டுமே நோக்கிப் பார்ப்பது போல, கிறிஸ்துவினுடைய அன்பின் கண்கள், அவருடைய படைப்பின் கிரியையாகிய மனுஷனை நோக்கி இருக்கிறது. "அவருடைய கண்கள் மனுஷருடைய வழிகளை நோக்கியிருக்கிறது; அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார்.”   (யோபு 34 : 21). அவரது அன்பான மற்றும் அழகான கண்கள், அவரது மக்களை அவர்களின் அனைத்து சோதனைகள் மற்றும் துன்பங்களிலிருந்தும், அனுதாபத்துடனும், அக்கறையுடனும் அவர்களை அவைகளிடமிருந்து விடுவிக்கிற கண்கள். மேலும் சகரி 3 : 9, 4 : 10 -ல் கர்த்தருடைய ஏழு கண்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஏழு கண்கள் கொண்ட அவரது சர்வ அறிவைக் குறிக்கலாம், மனிதர்கள் மேல் உள்ள அவருடைய பார்வையின் ஆழத்தையும் குறிப்பிடலாம். மேலும் அவருடைய கண்கள் கிருபையும், பாவமன்னிப்பும் அருளுகிற கண்கள் (யாத்திராகமம் 34:9)

"பாலில் கழுவப்பட்டவைகளும், நேர்த்தியாய்ப் பதிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது.” கிறிஸ்துவின் கண்கள் சத்தியமாகிய ஞானப்பால், நேர்த்தி என்கிற அன்பு நிறைந்தது. பால் என்பது திருவசனத்தை குறிக்கும் (1 பேதுரு 2: 3). பூரணம் என்பது அன்போடு தொடர்புடையது (கொலோசெயார் 3: 14). மேலும் வெளி 1 : 14, 19 : 12 - இல் இயேசு கிறிஸ்துவின் கண்கள் அக்கினிஜூவாலை போலிருக்கிறது என்றும், எரேமியா 5 : 3 -,ல் சத்தியத்தை நோக்குகிறது என்றும்,  நீதிமொழிகள் 22 : 12 -இல் ஞானத்தை காக்கிறது என்றும், ஆமோஸ் 9 : 8 - இல் பாவம் இல்ல ராஜ்யத்துக்கு விரோதமாக வைக்கப்பட்டிருக்கிறது என்றும், 1 பேதுரு 3 : 12 -ல் கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள் மேல் நோக்கமாயிருக்கிறது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இவ்வாறு வேதம் இயேசு கிறிஸ்துவின் கண்களை எவ்வாறு நேர்த்தியாக பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதை நமக்கு விளக்கிக் காட்டுகிறது.

இன்று கிறிஸ்துவின் கண்கள் உங்கள் மேல் நோக்கமாயிருக்கிறது என்று உணர்கிறீர்களா?                                 குறிப்பு வசனம்: சங் 32: 8, நீதி 15: 3, எபி 4: 13, 2நாளா 16: 9





  :   23 Likes

  :   93 Views