உன்னதப்பாட்டு 4 : 1
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



உன்னதப்பாட்டு 4 : 1

இயேசு கிறிஸ்து சபையிடம் எதிர்பார்ப்பது

"நீ ரூபவதி, என் பிரியமே! நீ ரூபவதி; உன் முக்காட்டின் நடுவே உன் கண்கள் புறாக்கண்களாயிருக்கிறது; உன் கூந்தல் கீலேயாத் மலையில் தழைமேயும் வெள்ளாட்டு மந்தையைப் போலிருக்கிறது.”

"நீ ரூபவதி, என் பிரியமே! நீ ரூபவதி” இயேசு கிறிஸ்து தனது மணவாட்டி சபையின் மேல் இருக்கும் அன்பை வெளிப்படுத்துகிறார்.

"உன் முக்காட்டின் நடுவே உன் கண்கள் புறாக்கண்களாயிருக்கிறது;” இருளில் இருக்கிற ஜனங்கள்,  மனந்திரும்பி இயேசுவிடன் வரும்பொழுது, இயேசு கிறிஸ்துவினால் அந்த முக்காடு நீக்கப்படுகிறது (2 கொரிந்தியர் 3: 14-16) . எல்லோரும் பாவம் என்ற இருளில் இருந்து இரட்சிக்கப்பட வேண்டியது அவசியம். இப்படியாக இருள் பரவி இருக்கிற இந்த உலகத்தில் கர்த்தருடைய சுவிசேஷம்  என்கிற வெளிச்சம் உலகத்தில் பிரகாசிப்பதின் மூலம் மனிதர்களின் கண்கள் திறக்கப்படுகிறது.இயேசு கிறிஸ்துவின் வல்லமையினாலே அந்த முக்காடு நம்மிலிருந்து முற்றிலுமாக நீக்கப்படுவதின் மூலமாக நாம் நீதிமான்களாக மாற்றப்படுகிறோம்

இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது.(ஏசாயா 9:2). இயேசு கிறிஸ்துவின் மூலம் ஜனங்கள் பெற்ற வெளிச்சத்தை இந்த வசனம் குறிப்பிடுகின்றது. இவ்வாறு முக்காடு நீக்கப்பட்ட ஜனங்கள் கிறிஸ்துவின் மகிமை பொருந்தியவர்களாக காணப்படுகிறார்கள். அப்படிப்பட்ட தனது மணவாளியாகிய சபையை மணவாளனாக இயேசு கிறிஸ்து வர்ணிக்கிறார்.

இங்கே ஆண்டவர் சபையை புறாக் கண்களுக்கு ஒப்பிடுகிறார். புறா ஒரு பரிசுத்தமான பறவை, பலி செலுத்தப்படுகின்ற ஒரு பறவை, கள்ளம் கபடம் இல்லாத ஒரு பறவை. ஆண்டவர் சபையைக் குறித்து ப்படிக் கூறுகிறார்.  இருளில்  இருந்த நீங்கள் இப்பொழுது என்னால் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றீர்கள். அதனால் நீங்கள் பரிசுத்தமாக்கப்பட்டு நீதிமான்களாக இருக்கிறீர்கள் என்று சபையை அவர் வர்ணித்து பேசுகிறார். கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது என்று   மத் 6: 22 -ல் சொல்லப்பட்டிருக்கிறது. விளக்கு என்பது வெளிச்சத்தை வெளிப்படுத்துகிறது. அதாவது, கண் புறாவைப் போல் பரிசுத்தத்தை வெளிக்காட்டுகிறது. இப்பொழுது உலகத்தின் மத்தியில் இருக்கிற சபை கிறிஸ்துவின் பார்வையில் பரிசுத்தமாக இருக்கிறது என்கிறார்.

"உன் கூந்தல் கீலேயாத் மலையில் தழைமேயும் வெள்ளாட்டு மந்தையைப்போலிருக்கிறது” கூந்தல் என்பது தலைமுடியை குறிப்பிடுகிறது. தலைமுடியின் சிறப்பம்சத்தை வேதத்தில் பார்க்கிறபொழுது,

(1) எண் 6 : 5, 8 -ல் நசரேய விரதம் இருக்கிறவர்கள் தலைமயிரை வளர விட வேண்டும். வர்கள் கர்த்தருக்கென்று பிரித்தெடுக்கப்பட்டு பரிசுத்தமாய் இருப்பார்கள். நசரேய விரதத்திற்கு தலைமயிர் அடையாளமாக கொடுக்கப்பட்டிருக்கிறதைப் பார்க்கிறோம்.

(2) நியா 13: 5 -ல் இந்த வசனத்தில் சிம்சோனின் தலைமயிரைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. சிம்சோனும் நசரேயனாயிருந்தான். அவனுடைய தலைமயிர் தேவன் அவனுக்கு கொடுத்திருந்த பெலத்தைக் குறிப்பிடுகிறது. இந்த வசனம் அர்ப்பணிப்பையும், ஆவிக்குரிய பெலத்தையும் குறிப்பிடுகிறது. 

 (3)  கூந்தல் என்பது சபையின் மகிமையைக் குறிக்கிறது      (1கொரி 11: 15). சபை எப்பொழுதும் கிறிஸ்துவின் மகிமையால் நிறைந்திருக்க வேண்டும். 

அன்பானவர்களே! இயேசு கிறிஸ்துவினால் சபை புறாவைப்போல் பரிசுத்தமாக்கப்பட்டு, கபடற்றவர்களாய் இந்த உலகத்தில் இருந்தாலும், கிறிஸ்துவுக்கென்று பிரித்தெடுக்கப்பட்டு, ஆவிக்குரிய பெலத்தோடும், மகிமையோடும் இருக்கிறது என்பதே இந்த வசனம் குறிப்பிடுகிறது.

நீங்கள் பரிசுத்தமும், ஆவிக்குரிய பெலன், கிறிஸ்துவின் மகிமை உள்ளவர்களாய் இருக்கிறீர்களா?

குறிப்பு வசனம்:  உன் 1: 15, உன் 6: 7




  :   28 Likes

  :   96 Views