கிறிஸ்துவின் பகிரங்க வருகை
"வெள்ளைப்போளத்தினாலும் சாம்பிராணியினாலும் வர்த்தகருடைய சகலவித கந்தப்பொடியினாலும் உண்டாகிய வாசனையை வீசி, தூபஸ்தம்பங்களைப்போல் வனாந்தரத்திலிருந்து வருகிற இவர் யார்?”
இயேசு கிறிஸ்துவினுடைய பகிரங்க வருகையை, அதாவது மூன்றாவது வருகையை இது வெளிப்படுத்துகிறது. அப்பொழுது அவர் இரட்சிப்பின் வாசனையையும், பிரதான ஆசாரியனாக பரிந்து பேசுகிறவராகவும், இராஜாவாக வெளிப்படுவதையும் குறிப்பிடுகிறது.
இந்த வசனத்தில் இயேசு கிறிஸ்து வனாந்திரத்தில் இருந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வனாந்திரம் என்ற வார்த்தை பல இடங்களிலே வானங்கள் என்ற அர்த்தத்தோடு வந்திருக்கின்றன. "வனாந்தரங்களில் ஏறிவருகிறவருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்” என்று (சங் 68 : 4,5,33) -,ல் இயேசு கிறிஸ்துவைக் குறித்த சொல்லப்பட்ட அருமையான வார்த்தை. இதன் உண்மையான அர்த்தம் சங் 68 : 33 ஆம் வசனத்தில் உள்ளது. ஆதிமுதலாய் இருக்கிற வானாதி வானங்கள் மேல் எழுந்து இருக்கிறவரை பாருங்கள். 4-வது வசனம் மற்றும் 33-வது வசனமும் நாம் இணைத்து பார்க்கிறப்பொழுது வனாந்திரம் என்கிற வார்த்தை வானத்தைக் குறிக்கிறது என்பதை நாம் பார்க்க முடிகிறது. அதேபோல் இயேசுகிறிஸ்து வானத்திலிருந்து இங்கே வருகிறப் பொழுது வருகிறதை இந்த வசனம் நமக்குக் குறிப்பிடுகிறது. அந்த வாசனையைக் குறித்துப் பார்ப்போம்
1) வெள்ளைப்போள வாசனை
இயேசுகிறிஸ்து பிறந்தப்பொழுது சாஸ்திரிகள் ஞானிகள் கொண்டு வந்த மூன்று பரிசுகளில் ஒன்று வெள்ளைப்போளம். பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் ஒருவர் மரிக்கும்போது வெள்ளைப்போளம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. யோவான் 12 : 3 ,ல் மரியாள் வெள்ளைப்போளத்தை இயேசு கிறிஸ்துவின் பாதத்திலே பூசுவதை பார்க்கலாம். இவள் செய்தது தன்னை அடக்கம் பண்ணுவதற்கு ஏதுவாக என்று இயேசு கிறிஸ்து சொல்கிறார் (யோவான் 19 : 39,40). இயேசு மரித்த பொழுதும் வெள்ளைப்போளம் பயன்படுத்தப்பட்டது. வெள்ளைப்போளம் மரணத்தைக் குறிக்கிறது. இயேசு கிறிஸ்துவின் மரணம் இரட்சிப்பை நமக்கு கொடுத்தது. இரட்சிப்பின் வாசனையை இந்த வெள்ளைப்போளம் நமக்கு விளக்கிக் காட்டுகிறது.
2) சாம்பிராணி
சாம்பிராணி பொடி தூபவர்க்கம் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. சாம்பிராணி தூபவர்க்கத்தைக் குறிப்பிடுகிறது (யாத் 30 : 34-36). தூபவர்க்கம் ஜெபத்திற்கு ஒப்பிடப்படுகிறது. (வெளி 5 : 8, 8 : 3). ஆகவே தான் சாம்பிராணி பிரதான ஆசாரியனுடைய பரிந்து பேசுதலின் ஜெபத்தைக் குறிக்கிறது.
3) கந்த வர்க்கம்
அவரை இராஜாதி இராஜாவாக அவருடைய ராஜ்யத்தைக் குறிக்கிறது. 2நாளா 9 : 1 சேபாவின் இராஜஸ்திரீ சாலொமோனின் கீர்த்தியைக் கேள்விப்பட்டபோது, கந்தவர்க்கங்களைக் கொண்டு வந்தாள். இது இராஜாக்களுடைய வீடுகளிலே அரண்மனைகளில் உபயோகப்படுத்தப்படுகிறது. கந்த வர்க்கம் ராஜரீக வாசனையை வெளிப்படுத்துகிறது.
ஆகையால் முதலாவதாக வெள்ளைப்போளம் இயேசுகிறிஸ்துவினுடைய முதல் வருகையையும் அவருடைய மரணத்தின் மூலம் கிடைக்கிற இரட்சிப்பையும் வெளிப்படுத்துகிறது. இவ்வாசனையை நாம் நம் வாழ்வில் பெற்று இருக்கிறோமா? இரட்சிப்பின் வாசனை நம்மிடத்தில் வெளிப்படுகின்றதா? என்று நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும். இரண்டாவதாக சாம்பிராணி வாசனை பிரதான ஆசாரியராக நமக்காக ஏறெடுக்கப்படுகிற ஜெபத்தை வெளிப்படுத்துகிறது. சாம்பிராணி பொடியின் வாசனை அதாவது ஜெபத்தின் வாசனை, விண்ணப்பத்தின் வாசனை, வேண்டுதலின் வாசனை, நம்மிடத்தில் வெளிப்படுகிறதா? ஜெப வீரர்களாக நம்மில் ஜெப வாசனை வீசுகிறதா என்று நம்மை ஆராய்ந்து பார்க்க வேண்டும். மூன்றாவதாக கந்த வர்க்க வாசனை இயேசுகிறிஸ்துவினுடைய ராஜரீகத்தை வெளிப்படுத்துகிறது. இப்பொடியின் வாசனை என்பது இராஜாக்களாக இயேசு கிறிஸ்துவோடு 1000 வருடம் அரசாட்சியில் அவரோடு சேர்ந்து ஆட்சி செய்ய இருக்க வேண்டிய இராஜரீக வாசனை நம்மில் வெளிப்படுகிறதா? இப்படிப்பட்ட வாசனை கொண்ட இராஜாதி ராஜாவை இந்த உலகம் ஆச்சரியத்தோடு பார்க்கிறது. இதைத்தான் இந்த வசனத்தில் வருகிற கேள்வி இவர் யார் இப்படிப்பட்ட வாசனை கொண்ட இவர் யார் என்பதாக வருகிறது.
கிறிஸ்துவின் அரசாட்சியில், அவருடைய சேனையாக இருப்போம் என்ற விசுவாசம் இருக்கிறதா?
குறிப்பு வசனம்: ஏசாயா 43: 19,20
Write a public review