உன்னதப்பாட்டு 2 : 2
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



உன்னதப்பாட்டு 2 : 2

இயேசு கிறிஸ்து சபையைப் பார்த்துப் பேசுவது

"முள்ளுகளுக்குள்ளே லீலிபுஷ்பம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரத்திகளுக்குள்ளே எனக்குப் பிரியமானவளும் இருக்கிறாள்".

கிறிஸ்துவின் மனவாட்டியாகி சபை, இந்த உலக பாடுகளின் மத்தியிலும், கிறிஸ்துவுக்காக வைராக்கியமாக இருந்து , ஜெயம் கொண்டு  கிறிஸ்துவுக்கு பிரியமானவளாக இருக்கிறதை இந்த வசனம் குறிப்பிடுகிறது.

இயேசு கிறிஸ்து, முதல் வசனத்தில் தன்னை லீலி புஷ்பத்திற்கு ஒப்பிட்டவர், இங்கு சபையையும் அதற்கு ஒப்பிடுகிறார். எப்படியென்றால் பிதா, இயேசு கிறிஸ்துவுக்கு கொடுத்த மகிமையை அவர் நமக்கும் கொடுத்திருக்கிறார். நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன். (யோவான் 17 : 22) என்று வேதம் கூறுகிறது. மேலும் ஆண்டவரகிய இயேசு கிறிஸ்து ஆவிக்குரிய இஸ்ரவேலராகிய நம்மை லீலிபுஷ்பத்திற்கு ஒப்பிட்டுச் சொல்லுகிறதை ஓசியா 14 : 5 -ல் நாம் பார்க்கிறோம்.

"முள்ளுகளுக்குள்ளே லீலிபுஷ்பம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரத்திகளுக்குள்ளே எனக்குப் பிரியமானவளும் இருக்கிறாள்.” முள்ளுகள் என்பது பொல்லாத மனிதர்கள் மற்றும் சாத்தானால் நமக்கு வரும் பாடுகளைக் குறிக்கிறது (2சாமு 23 : 6). பாடுகள், வேதனைகள், உபத்திரவங்கள், சோதனைகள் போன்ற முள்ளுகளுக்கு மத்தியிலும் கர்த்தருக்குப் பிரியமாய் வாழ்கின்ற அவருடைய பிள்ளைகள் அநேகம் பேர்கள் இங்கே உண்டு என்பதைக் குறிப்பிடுகிறார். அவர்கள் உள்ளும், புறமும் அழகுள்ளவர்களாகவும், தேவனுக்குப் பிரியமுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதையும் காண்பிப்பதாக இருக்கிறது.

பவுலுடைய வாழ்க்கையைப் பார்க்கும் பொழுது, "என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது. என்னை நான் உயர்த்தாதபடிக்கு அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது.” ( 2 கொரி 12 : 7) என்கிறார். பவுல் தன்னுடைய வாழ்வில் தனக்கு கொடுக்கப்பட்ட முள்ளைக் குறித்து இந்த வேதப் பகுதியில் அவர் விளக்குகிறதைப் பார்க்க முடிகிறது. அதேபோல் அவர் அநேக உபத்திரவங்களின் மத்தியில் ஊழியம் செய்ததையும், கிறிஸ்துவின் நிமித்தம் அவர் படுகிறப்பாடுகளைக் குறித்தும், இயேசு கிறிஸ்துவே அவரைக் குறித்து (அப் 9 : 16) - ல் சாட்சி கொடுத்திருக்கிறார்.

அன்பானவர்களே! பாடுகள் உபத்திரவங்கள் மத்தியிலும் நாம் கர்த்தருக்குள் சந்தோஷமாக இருந்து அவருடைய சித்தத்தை செய்து முடிக்கிறவர்களாக அழைக்கப்பட்டிருக்கிறோம் (யோவான் 16 : 33). சில உபதேசங்கள் இன்று கிறிஸ்தவர்களுக்கு பாடுகள் இல்லை என்று பொய்யாக போதிக்கப்படுகிறது. பொய்யான உபதேசத்திற்கு விலகி இருப்போம். கிறிஸ்துவுக்காக வைராக்கியமாக வாழ்ந்த எல்லா பரிசுத்தவான்களும் பாடுகளைச் சகித்து கிறிஸ்துவை மகிமைப்படுத்தினார்கள். ஆகையால் நமக்கும் உபத்திரவங்கள் உண்டு, எனவே தான் கடைசிவரை நிலைத்து இருப்பவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பான் என்று வேதம் கூறுகிறது. அன்பானவர்களே! நாம் கிறிஸ்துவில் ஒவ்வொரு நாளும் நிலைத்திருப்போம்.

நீங்கள் முள்ளுகளுக்கு மத்தியில் லீலிபுஷ்பமாக இருக்கிறீர்களா?

குறிப்பு வசனம்: ஏசா 55: 13, ஓசியா 14: 4, பிலி 2: 15,16, 1பேதுரு 2: 12




  :   22 Likes

  :   100 Views