"உமது பரிமளதைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள்; உமது நாமம் ஊற்றுண்ட பரிமளதைலபாயிருக்கிறது, ஆகையால் கன்னியர்கள் உம்மை நேசிக்கிறார்கள்."
"பரிமளதைலம்" என்பது ஒரு வாசனை திரவியம், இயேசு கிறிஸ்து பூமியிலே தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்தப்பொழுது, அதாவது அவருடைய பிறப்பைக் கொண்டாடிய சாஸ்திரிகள் "தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும்"( மத் 2 : 11)- கொடுத்ததாகப் பார்க்கிறோம். அவர் மரிக்கும்போதும் "அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம்பண்ணும் முறைமையின்படியே அதைச் சுகந்தவர்க்கங்களுடனே சீலைகளில் சுற்றிக் கட்டி." (யோவான் 19 : 40) அடக்கம் பண்ணினார்கள் என்று பார்க்கிறோம். துவக்கம், முடிவு மட்டுமின்றி பூமியில் அவரது வாழ்க்கையின் ஆரம்பம் முதல் முடிவு வரை வாசனை வீசுகிறவராய் இருந்தார் என்று பார்க்கலாம்.
மேலும் அவருடைய "பரிமளதைலங்கள்" என்பது அபிஷேகத்தைக் குறிக்கிறது. யாத் 30 : 23,24,25 -ல் பார்க்கும்பொழுது அங்கே தேவன் மோசேயின் மூலம் ஒரு அபிஷேகத் தைலத்தை உண்டுப்பண்ணும் முறைமையை கட்டளையிடுகிறார். அதிலே அவர்கள் வெள்ளைப்போளம், சுகந்த கருவாப்பட்டை, வசம்பு, இலவங்கப்பட்டை ஒலிவ எண்ணெய் இப்படி சேர்த்து (யாத் 30 : 25) -ம் வசனத்தில் "பரிமள தைலக்காரன் செய்வதுபோல, கூட்டப்பட்ட பரிமளதைலமாகிய சுத்தமான அபிஷேக தைலத்தை உண்டுபண்ணுவாயாக: அது பரிசுத்த அபிஷேக தைலமாயிருக்கக்கடவது" என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த அபிஷேகத்தைலத்தின் முதல் அத்தியாவசியமான பொருள் இந்த வெள்ளைப்போளம் இந்தப் பரிமளத்தைலம் புதிய ஏற்பாட்டில் அபிஷேகத்தை மட்டுமின்றி பரிசுத்தத்தையும் (யாத் 30 : 34-37) குறிக்கிறது. நம்மிடத்தில் இருக்கும் அந்த அபிஷேகத்தின் வாசனை நம்பிடத்திலிருந்து புறப்பட்டு அருகில் இருப்பவர்களுக்கும் வீசி அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு நன்மை கிடைக்கவும், தேவனுடைய வழியைக் காட்டவும் துவங்குகிறது. இது நமக்குள் இருந்து புறப்படுகிறதை நம்மால் உணர முடியும்.
"உமது நாமம் ஊற்றுண்ட பரிமள தைலமாயிருக்கிறது". உமது நாமம் என்பது வேதப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிற இயேசு கிறிஸ்துவின் பெயர்கள் ஆகும். அதாவது நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து "இம்மானுவேல்" (மத் 1:23) என்றும் அவர் "பரிசுத்தர்" (வெளி 3 7) என்றும், "இரட்சகர்" (யோவான்) என்றும் அநேக நாமங்களால் வேத புத்தகத்தில் அழைக்கப்பட்டிருக்கிறார். வெளி 19:13 ல் "அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே " என்று சொல்லப்பட்டிருக்கிறது. நம் ஜெபம் இயேசுவின் நாமத்தினாலே பிதாவினிடத்தில் சென்றடைகிறது. இந்த உலகத்தில் நமது எதிராளியாகிய சாத்தானை இயேசுவின் நாமத்தினாலே விரட்டுகிறோம். அதேபோல் யோவான் 1:12-ல் அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அவருடைய நாமமாகிய தேவ வார்த்தையின் வல்லமை ஊற்றைப்போல சுரந்து மனிதருடைய வாழ்விலே விசுவாசம், நம்பிக்கைக் கொடுத்து தேவனிடத்தில் பெலப்படுத்துகிறது. இவ்வாறு நாம் அவருடைய நாமங்களைச் சொல்லி துதிக்கின்றப் பொழுது ஊற்றுண்ட பரிமள தைலம் போன்ற தெய்வீக வாசனை வீசத்துவங்குகிறது (2 கொரி 2:14).ஊற்று என்பது ஒரு வற்றாத ஜீவ நீரூற்றைக் குறிக்கிறது. அவ்வாறு தேவ வார்த்தை வற்றாமல் வாசனை வீசிக்கொண்டிருக்கிறது.
"ஆகையால் கன்னியர்கள் உம்மை நேசிக்கிறார்கள்". இயேசு கிறிஸ்துவின் நாமத்தை ருசிபார்த்த ஜனங்கள், அபிஷேகத்தை பெற்றவர்கள், அவருடைய நாமத்தினாலே ஒவ்வொரு நாளும் வாழ்வில் வெற்றியை பெற்று, வாசனை வீசிக் கொண்டிருக்கிறவர்கள் அவரை நேசிக்கிறார்கள். கன்னியர்கள் என்பது சபையை குறிப்பிடுகின்றது. (எரேமியா 31 : 4 )-இல் இஸ்ரவேல் என்னும் கன்னிகையே என்று கர்த்தர் தமது ஜனத்தை பார்த்து கூறுகிறார். இன்று நாம் ஆவிக்குரிய இஸ்ரவேலர்கள். எனவே கன்னிகை என்பது இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட ஜனங்களை குறிக்கிறது.
சபை சொல்லுகிறதாவது, உமது அபிஷேகம் எங்களுக்கு மிகவும் இன்பமான வாசனையாக சந்தோஷத்தைக் கொடுக்கிறது. மேலும் உமது நாமத்தினாலே வெற்றியுள்ள வாழ்க்கை வாழ்கிறோம், அது ஊற்றுண்ட பரிமளதைலத்தைப் போல இருக்கிறது. "உம்முடைய வார்த்தை என் மனமகிழ்ச்சி" என்று சங்கீதத்தில் சொல்லப்பட்டிருக்கிறதுப் போல சபைக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. எனவே தேவபிள்ளைகள் (கன்னியர்கள்) உம்மை நேசிக்கிறார்கள் என்கிறார்கள்.
இயேசுவின் மேல் உங்கள் அன்பு இன்று எப்படி இருக்கிறது?
குறிப்பு வசனம் : யாத் 30: 23-38, சங் 45: 7,8, நீதி 27: 9
Write a public review