உன்னதப்பாட்டு 1 : 11
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



உன்னதப்பாட்டு 1 : 11

"வெள்ளிப் பொட்டுகளுள்ள பொன் ஆபரணங்களை உனக்குப் பண்ணுவோம்.”

இந்த வசனம் முந்தின வசனத்தினுடைய தொடர்ச்சியாகும். இந்த வசனங்களில் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் ஆகிய மூன்று தன்மைகளுடைய ஒரே கர்த்தர் பேசுகிற வசனம்.  ஏனென்றால் இந்த வசனத்திலே கடைசி வார்த்தை சொல்கிறது "உனக்கு பண்ணுவோம்” என்று பன்மையில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வசனம் எசேக் 16 : 13 -ல் சொல்லப்பட்டிருக்கிற "கர்த்தருடைய வார்த்தையின் வெளிப்பாடு." 

மேலும் "வெள்ளியும் என்னுடையது, பொன்னும் என்னுடையது என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்”  (ஆகாய் 2 : 8). வெள்ளியும் பொன்னும் கர்த்தருடைய வேத வசனத்திற்கு ஒப்பிடப்படுகிறது (சங் 19 : 9,10), (சங் 12 : 6). அதேப்போல் சபை பொன்னுக்கு ஒப்பிடப்பட்டிருக்கிறது (வெளி 1 : 20).  மேலும் சங் 45 : 9,13,15 -ல் சபையாகிய இராஜகுமாரி தங்கம் அணிந்தவளாய் இராஜாவாகிய இயேசு கிறிஸ்துவின் வலது பாரிசத்தில் நிற்கிறாள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனங்கள் மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவினால் இரட்சிப்பைப் பெற்ற பிறகு, அவர்கள் ஆவிக்குரிய பரிசுகளைப் பெறுவதை (தங்கம் அணிந்தவள் என்று கூறப்பட்டிருக்கிறது) இந்த வசனம் குறிப்பிடுகிறது.

பொன் ஆபரணங்களை, சபை பெற்றிருக்கிறதை இரட்சிப்புக்கும், நீதிக்கும் வேதம் ஒப்பிடுகிறது. ஏசா 61 : 10 -ல் "கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழுகிறேன்; என் தேவனுக்குள் என் ஆத்துமா களிகூர்ந்திருக்கிறது; மணவாளன் ஆபரணங்களினால் தன்னை அலங்கரித்துக் கொள்ளுகிறதற்கும், மணவாட்டி நகைகளினால் தன்னைச் சிங்காரித்துக்கொள்ளுகிறதற்கும் ஒப்பாக, அவர் இரட்சிப்பின் வஸ்திரங்களை எனக்கு உடுத்தி, நீதியின் சால்வையை எனக்குத் தரித்தார்.” சபையில் கர்த்தருடைய வார்த்தை நிறைவாக இருப்பதையும் அதனால் இரட்சிக்கப்பட்டவர்கள் தன்னுடைய இரட்சிப்பை ஒவ்வொரு நாளும் பாதுகாத்துக்கொள்வதும், நீதிமானாக்கப்படுவதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இயேசு கிறிஸ்து சபையைப் பார்த்து சொல்லுகிறார், என்னுடைய வார்த்தையாகிய மன்னாவை நான் உங்களுக்கு அனுதினமும் தருகிறேன், என்னுடைய இரட்சிப்பை உங்களுக்கு நான் தருகிறேன், என்னால் நீதிமானாக்கப்பட்டிருக்கிறீர்கள். இந்த ஆசீர்வாதத்தை முழுமையாகப் பெற்ற சபையே! நீ உண்மையிலேயே பாக்கியவான், நீ உண்மையிலேயே ரூபவதி, நீ என் பார்வையில் உண்மையிலேயே அழகுள்ளவள் என்று இயேசு கிறிஸ்து கூறுகிறார். கர்த்தருடைய வார்த்தை, இரட்சிப்பு, நீதி வைகள் பொன் ஆபரணங்கள் மூலம் வர்ணித்துப் பாடுகிற பாடலாகும். 

இயேசு கிறிஸ்துவிடமிருந்து ஆவிக்குரிய பரிசுகளைப் பெற்று இருக்கிறீர்களா?

குறிப்பு வசனம் : சங் 45: 9,13,14, சங் 149: 4, ஏசா 61: 10, எரே 2:32




  :   24 Likes

  :   97 Views