பிரியமானவர்களே! நாம் வேலை செய்து கொண்டு ஊழியம் செய்யலாமா? ஆம் தாராளமாக செய்யலாம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் வேலைசெய்துகொண்டு ஊழியம் செய்கிறவர்களை சிலர் அற்பமாக எண்ணுகிறார்கள். ஊழியம் என்பது கர்த்தருடைய அழைப்பை பொறுத்து உள்ளது .அவர் சிலரை முழுநேர ஊழியராகவும் , சிலரை பகுதிநேர ஊழியராகவும் ஏற்படுத்துகிறார் .
உதாரணத்திற்கு ( அப்போஸ்தலர் 18:1-4) நாம் பவுலை எடுத்துக்கொள்வோம் அவர் கூடாரம் பண்ணுகிற தொழிலை செய்துகொண்டே "ஓய்வுநாள்தோரும் ஜெபஆலயத்திலே சம்பாஷணைபண்ணி, யூதருக்கும் கிரேக்கருக்கும் புத்திசொன்னான்" என்பதை பார்க்கிறோம். யாருக்கு என்ன வேலை கொடுப்பது அவர்களை எவ்வாறு ஊழியத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதை கர்த்தர் நன்கு அறிவார்.
ஆனால் சிலர் இவற்றை புரிந்துகொள்ளாமல் ஒரு ஊழியக்காரன் என்பவன் தன்னுடைய தனிப்பட்ட வேலைகளை செய்யாமல் முழு நேர வேலையாக கர்த்தருக்கு மட்டுமே ஊழியம் செய்ய வேண்டும் என்று கூறிக்கொண்டு திரிகிறார்கள். அவ்வாறு செய்கிறவர்கள் மட்டுமே உண்மையான ஊழியக்காரன் என்று தனக்குத்தானே புகழாரம் சூட்டிக்கொண்டு மற்றவர்களை குறை கூறிக்கொண்டும் சுற்றி வருகிறார்கள்.
யோவான் 3:1ஆம் வசனத்தில் " யூதருக்குள்ளே அதிகாரியான " நிக்கொதேமு என்றும் அதனை தொடர்ந்து வசனம் 10-இல் இயேசு அவனை நோக்கி "நீ இஸ்ரவேலில் போதகனாயிருந்தும் " இவைகளை அறியாமலிருக்கிறாயா என்று கேள்வி எழுப்பியுள்ளதையும் நாம் காணலாம் .இந்த வசனத்தை நீங்கள் கூர்ந்து கவனித்தீர்களானால் ஒரு "அதிகாரி -போதகராக " அவரது பணிகளை செய்துகொண்டே ஊழியம் செய்துள்ளார் என்பது நமக்கு நன்கு விளங்கும் .
கர்த்தருக்குள் பிரியமானவர்களே! நாமும் ஏதேனும் ஒரு வேலையை செய்துக்கொண்டோ ,அல்லது ஒரு நிறுவனத்தை நடத்திக்கொண்டோ கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து உண்மையுள்ளவர்களாக அவருடைய ஆலோசனைகளை கேட்டு அதன்படி ஊழியம் செய்யலாம் . ஜீவனுள்ள தேவனுடைய சுவிசேஷ வெளிச்சத்தை பரவ செய்யலாம் . ஆமென்!
Write a public review