“உன் சந்ததியை அழித்துப்போட்டு, ஆகாபுக்கு சுவரில் நீர்விடும் ஒரு நாயாகிலும் இராதபடிக்கு இஸ்ரவேலில் அடைபட்டவனையும் விடுபட்டவனையும் சங்கரித்து (1 ராஜாக்கள் 21: 21).
உன் சந்ததியை அழித்துப்போட்டு, ஆகாபுக்கு சுவரில் நீர்விடும் ஒரு நாயாகிலும் இராதபடிக்கு இஸ்ரவேலில் அடைபட்டவனையும் விடுபட்டவனையும் சங்கரிக்கப்படும் என்பது இஸ்ரவேல் மக்களுக்கு குறிப்பாக ஆகாபுக்கு எதிரான மிகக் கடுமையான தீர்ப்பாகும். குறிப்பாக ராஜா என்னும் பதவிக்கு எதிரானது. “சுவரில் நீர்விடும் ஒரு நாயாகிலும் இராதபடிக்கு” என்பது ஒரு பழமொழி. அவனுக்குப் பிறகு அவனுடைய அரியனையில் அமர ஆண் வாரிசு இராதபடிக்கு அழிக்கப்படுவார்கள் என்பது பொருள். (ஆண் நாய்கள் மட்டுமே சுவரின்மீது காலைத் தூக்கி சிறுநீர் கழிக்கும்). ஆகாபின் வம்சத்துக்கு ஒரு முடிவு உண்டாக்கப்படும், அவனது வம்சம் இனி தொடராதபடிக்கு சுவர் கட்டி அடைக்கப்படுவதுபோல அடைக்கப்படும். “நீதிமானுடைய பேர் புகழ்பெற்று விளங்கும்; துன்மார்க்கனுடைய பேரோ அழிந்துபோகும்” என்று ஏற்கெனவே சாலொமோன் அரசன் எச்சரித்துவிட்டுச் சென்றிருக்கிறார் (நீதிமொழிகள் 10:7).
ஆகாப் – யேசபேல் தம்பதியினரின் பாவம் அந்தக் குடும்பத்திற்கு மட்டுமின்றி, முழு இஸ்ரவேல் நாட்டிற்கும் ஒரு கடுமையான தண்டனை வரக் காரணமாக அமைந்துவிட்டது. இஸ்ரவேலில் அடிமைகளாயிருந்தாலும் அல்லது விடுதலை பெற்ற மனிதராக இருந்தாலும் (அடைபட்டவனையும் விடுபட்டவனையும்) அவர்கள் அனைவரும் கொல்லப்படுவார்கள் என்று எலியா உரைத்தான். பொதுவாக மனிதர் பாவம் செய்யும்போதோ அல்லது குற்றச் செயல்களில் ஈடுபடும்போதோ அவை தன்னை மட்டுமின்றி, தன் குடும்பத்தையும் சுற்றத்தாரையும் பாதிக்கும் என்று சிந்தித்துப் பார்ப்பதில்லை. இந்தக் காலகட்டத்திலும் இதுவே உண்மையாயிருக்கிறது.
பல ஆண்டுகளாக அவன் தேவனுக்கு விரோதமான காரியங்களில் ஈடுபட்டு வந்தான். அவன் மனந்திரும்புவதற்கு எத்தனையோ வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. இப்பொழுது அறுவடையின் காலம். தேவனுடைய தெய்வீக நியாயத்தீர்ப்பு தாமதமாக வரலாம், ஆனால் அது கடுமையாக வரும் என்பதை நாம் யோசித்து நடக்க வேண்டும். “என்னைப் பகைக்கிறவர்களைக்குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்” (யாத்திராகமம் 20:5) என்று தேவன் உரைத்திருக்கிறார்.
ஆகாப் நாபோத்தின் தோட்டத்தை அபகரிக்க உதவி செய்தது மட்டுமின்றி, அவனும் அவனுடைய குமாரரும் கொலை செய்யப்படுவதற்குக் காரணமாக விளங்கினான். தோட்டத்தின்மீதுள்ள இவனது இச்சை, அந்தத் தோட்டத்தின்மீது எவரும் உரிமை கொண்டாதபடிக்கு அவனது வாரிசுகளை அழித்துப் போட்டது. இப்பொழுது அவ்வண்ணமாகவே, ஆகாபின் ராஜ்யபாரத்தையும், அரசாட்சியையும் உரிமைபாராட்டுவதற்கு வாரிசுகள் இல்லாதபடிக்கு அழிக்கப்படுவார்கள் என்ற தண்டனையை அவன் பெற்றான். மனிதன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். இதுவே தெய்வீக நியதி.
கிருபையும் ஞானமும் நிறைந்த தேவன் ஆதாம் தொடங்கி, கிறிஸ்து வரைக்கும் ஒரு தேவபக்தியுள்ள சந்ததியைப் பாதுகாத்து வந்திருக்கிறார். வழிவழியாக காக்கப்பட்டு வந்த அந்தச் சந்ததியில் கிறிஸ்து பிறந்தார். ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்டு அந்தச் சந்ததி கிறிஸ்துவே என்று பவுல் கூறுகிறார். அந்த சந்ததியாகிய கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலமாக பாவச் சந்ததியினர் நித்திய வாழ்வைப் பெறுகிறார்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, நாமும் நமது குடும்பமும் இரட்சிக்கப்பட்டு, அழியாத நித்திய வாழ்வைச் சுதந்தரித்துக்கொள்வோம்
Write a public review