தீய காரியங்களுக்கு விலகியிருப்போம்
 /   Blog /  Created by Kingslin R Last updated Tue, 01-Apr-2025



தீய காரியங்களுக்கு விலகியிருப்போம்

 “அப்பொழுது அவன் மனைவியாகிய யேசபேல் அவனை நோக்கி: நீர் இப்போது இஸ்ரவேலின்மேல் ராஜ்யபாரம்பண்ணுகிறவர் அல்லவா? நீர் எழுந்து போஜனம்பண்ணி மனமகிழ்ச்சியாயிரும்; யெஸ்ரயேலனாகிய நாபோத்தின் திராட்சத்தோட்டத்தை நான் உமக்குக் கொடுப்பேன் என்று சொன்னாள்” (1 ராஜாக்கள் 21:7).

ஆகாபின் மனைவி யேசபேல், “நீர் ஏன் சாப்பிடாமல் இருக்கிறீர்?” என்று கேட்டதற்கு, நான் நாபோத்திடம், “உன் திராட்சத்தோட்டத்தை எனக்கு விலைக்கிரயமாய்க்கொடு; அல்லது உனக்கு ராசியானால் அதற்குப் பதிலாக வேறே திராட்சத்தோட்டத்தை உனக்குத் தருவேன் என்றேன். அதற்கு அவன்: என் திராட்சத்தோட்டத்தை உமக்குக் கொடுக்கமாட்டேன்” (1 ராஜாக்கள் 21: 6) என்று சொன்னான் என்றான். இந்தக் காரியத்தில் நாபோத் எந்தவிதத்திலும் தவறு செய்யவில்லை. ஆயினும், ஆகாப் நாபோத்தின்மீது ஒரு குற்றச்சாட்டைச் சுமத்தினான். மிகவும் நேர்மையுடனும், சட்டப்பூர்வமாகவும் நடந்துகொண்ட ஒரு மனிதனை மிகவும்  மோசமானவனாகச்  சித்தரித்தான். பிறர் சொத்துக்கு ஆசைப்பட்டவன் இந்த ஆகாப். ஆனால் குற்றம் முழுவதையும் நாபோத்தின்மீது சாற்றினான். அவன் கீழ்ப்படியாமையுடனும், பிடிவாதத்துடனும் செயல்படுவதுபோல் ஒரு தோற்றத்தை உண்டுபண்ணினான். இந்தக் காலத்திலும் ஒருவரது பேச்சு இவ்வாறாகவே குற்றமாகவே திரிக்கப்பட்டு, வேண்டுமென்றே பழி சுமத்தப்படுகிறது.

ஆகாபின் நாவிலிருந்து வெளிப்பட்ட நெருப்புக்கு எண்ணெய் ஊற்றி மேலும் அதை எரியச் செய்தாள் அவன் மனைவி யேசபேல். “நீர் இப்போது இஸ்ரவேலின்மேல் ராஜ்யபாரம்பண்ணுகிறவர் அல்லவா?” (1 ராஜாக்கள் 21: 7) என்று கூறி அவனுடைய உணர்வுகளைத் தூண்டிவிட்டாள். “துன்பப்படுகிற தன் கணவனுக்கு ஆறுதல் கூறுவதுபோல் நடித்து, அவனது பெருமையையும், இச்சையையும் ஊதிப் பெரிதாக்கினாள், அவனது சட்டவிரோத ஆசைக்குப் பெருந்தீனி போட்டாள், அவனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்த உற்சாகப்படுத்தினாள், பிறரது உரிமைகளைப் புறக்கணித்து கடவுளின் சட்டத்தையும் மீறும்படி தூண்டினாள்” என்று யேசபேலின் செயலைக் குறித்து திருவாளர் மேத்யூ ஹென்றி விவரிக்கிறார்.

“நீர் எழுந்து போஜனம்பண்ணி மனமகிழ்ச்சியாயிரும்; யெஸ்ரயேலனாகிய நாபோத்தின் திராட்சத் தோட்டத்தை நான் உமக்குக் கொடுப்பேன் என்று சொன்னாள்” (1 ராஜாக்கள் 21:7). வேதப் புத்தகத்தில் திராட்சை ரசம் மகிழ்ச்சிக்கு அடையாளமாகச் சொல்லப்பட்டுள்ளது. “இந்த உலகத்தில் விசுவாசிகளும் மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டும், ஆனால் அது கர்த்தருக்குள்ளும், தூய்மையான முறையிலுமே பெறப்பட வேண்டும்” என்று திருவாளர் வில்லியம் மெக்டொனால்டு கூறுகிறார். “பாவம் குறுகிய கால சந்தோஷத்தையும் நீண்டகால துக்கத்தையும் தரக்கூடியது” என்று பொதுவாகச் சொல்லப்படுவதுண்டு. யேசபேல் தவறான வாக்குறுதியின்பேரில் தன் கணவனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்து, அவனது நீண்ட காலத் துக்கத்துக்கு வழிவகுத்தாள்.

மேலும் கணவனின் அதிகாரத்தைத் தன் கையில் எடுத்துக்கொண்டாள். அரண்மனையில் இதுவரையிலும் மறைமுகமாக அல்லது வெளியே தெரியாவண்ணம் ஆதிக்கம் செலுத்தி வந்த அவளது அதிகாரம் இப்போது வெளிச்சத்திற்கு வந்தது. பாகாலின் வழிபாட்டால் பாவத்தின் ஆளுகையிலும், அந்தகார இருளின் ஆதிக்கத்தாலும் ஆட்கொள்ளப்பட்டிருந்த அவளது இருதயத்தின் நினைவுகளின் தோற்றம் பொல்லாத வடிவத்தில் இப்பொழுது வெளிப்பட்டது. வெளிச்சத்தின் பிள்ளைகளாகிய நாம் மிகவும் கவனமாயிருப்போம், நமது அதிகாரத்தையும், நம்மையும் தவறான வழியில் பயன்படுத்த அனுமதிக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருப்போம்.




  :   3 Likes

  :   16 Views