“ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தேவனாகிய கர்த்தாவே” (1 ராஜாக்கள் 18:36).
“ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தேவனாகிய கர்த்தாவே” என்று எலியா தன் ஜெபத்தைத் தொடங்கினான். கர்த்தர் இவர்களோடு உடன்படிக்கை செய்திருந்தார். இவர்களுக்கு அளித்த உடன்படிக்கை மற்றும் வாக்குறுதி ஆகியவற்றின் அடிப்படையிலேயே அவர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஆகவே எலியா தேவனை உடன்படிக்கையின் கர்த்தராகவும் வாக்குறுதியின் தேவனாகவும் அழைத்தான். இதன் மூலமாக அவன் தேவனை வாக்குமாறாதவராகவும் பொய்யுரையாதவராகவும் கண்டான்.
கல்தேய தேசத்தில் விக்கிரக ஆராதனை செய்துகொண்டிருந்த ஆபிரகாமை அழைத்து, தம்மை வெளிப்படுத்தி, அவனை மெய்யான தேவனை வணங்குகிறவனாக ஆக்கியிருந்தார். இப்பொழுது அவனுக்கு வாக்குப்பண்ணப்பட்ட இந்தத் தேசத்தில், மக்கள் மீண்டும் விக்கிரக ஆராதனையில் மூழ்கிவிட்டார்கள். எனவே ஆபிரகாமின் வழித்தோன்றல்களாகிய இந்த மக்களை மறுபடியும் கர்த்தரைத் தொழுதுகொள்ளச் செய்ய வேண்டியது அவசியம். ஆகவே எலியா, ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தேவனாகிய கர்த்தாவே என்று அழைத்தது மிகவும் பொருத்தமான அடைமொழி வார்த்தையாகும்.
நாம் இன்றைக்கு நித்திய உடன்படிக்கையின்கீழாக இருக்கிறோம் (எபிரெயர் 13:20). மேலும், “நமக்கு முன் வைக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும்படி அடைக்கலமாய் ஓடிவந்த நமக்கு இரண்டு மாறாத விசேஷங்களினால் நிறைந்த ஆறுதலுண்டாகும்படிக்கு எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் அப்படிச் செய்தார்” (எபிரெயர் 6:18) என்று எபிரெயர் நிருபத்தின் ஆக்கியோன் கூறுகிறார். ஆபிரகாமுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி மற்றும் ஆணை ஆகியவற்றைக் காட்டிலும் மேலான வாக்குறுதியையும், ஆணையையும் பொய்யுரையாத தேவனால் நாம் பெற்றிருக்கிறோம்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக ஜெபத்தைக் குறித்த புதிய கண்ணோட்டத்தை நாம் பெற்றிருக்கிறோம். ஆண்டவர் தம்முடைய சீடர்களுக்கு ஜெபம்பண்ணக் கற்றுக்கொடுத்த போது, “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே”(மத்தேயு 6:9) என்று தொடங்கினார். இஸ்ரவேலின் முற்பிதாக்களாகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களுடன் தேவனை அடையாளப்படுத்துவதைப் பார்க்கிலும், அதிகமாக நெருக்கத்தை நாம் அவருடன் பெற்றிருக்கிறோம். அவர் நமக்குத் தந்தையாகவும், நாம் அவருடைய பிள்ளைகளாகவும் இருக்கிறோம். எனவே எலியாவைக் காட்டிலும் நாம் அதிக எளிதான முறையில் நம்முடைய பரம தந்தையை அணுக முடியும்.
மேலும், “நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும் படியாக, அதைச் செய்வேன். என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்” (யோவான் 14:13,14) என்று வாக்குப்பண்ணியிருக்கிறார். நம்முடைய ஜெபங்களுக்கான பதிலைப் பெற்றுக்கொள்வதற்கு நம் ஆண்டவர் மத்தியஸ்தராகச் செயல்படுகிறார். ஆகவே எலியாவைப் போல, ஜெபத்திற்கு முன்பாக செய்ய வேண்டிய ஆயத்தங்களைச் செய்வோம். அதாவது அவருடைய சித்தத்தை நாடுவோம், நம்முடைய இருதயங்களைப் பக்குவப்படுத்துவோம். அப்பொழுது நாம் கேட்கிற காரியங்களைக் குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக பெற்றுக்கொள்வோம்.
Write a public review