"கர்த்தர் தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் காப்பாற்றி, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவிக்கிறார்" (சங்கீதம் 97:10).
எபெத்மெலேக்
தம் சித்தத்தைச் செய்பவர்களுக்கு கர்த்தர் பலன் அளிக்கிறார். வேதத்தில் நாம் அதிகம் அறிந்திராத, தேவபக்தியுள்ள எத்தியோப்பியனாகிய "எபெத்மெலேக்" நல்லதோர் உதாரணம். எபெத்மெலேக், (யூதாவை ஆண்ட உண்மையற்ற) சிதேக்கியா ராஜாவின் குடும்பத்திற்கு வேலைசெய்தவரும், தீர்க்கன் எரேமியாவின் காலத்தில் வாழ்ந்தவரும் ஆவார். யூதாவின் பிரபுக்கள் எரேமியா தீர்க்கதரிசியைத் தேசத்துரோகி எனப் பொய்க்குற்றஞ்சாட்டி, பட்டினியினால் சாகும்படி தண்ணீரில்லாத கிணற்றில் அவரைப் போட்டுவிட்டதை எபெத்மெலேக் அறிந்தார். (எரேமியா 38:1-7)
எரேமியா அறிவித்துவந்த தீர்க்கதரிசன செய்தியின் காரணமாக மற்றவர்கள் அவரைக் கடுமையாய் பகைப்பதை அறிந்த எபெத்மெலேக், தன் உயிரையே பணயம் வைத்து ராஜாவிடம் கெஞ்சினார். தன் தைரியத்தை ஒன்றுதிரட்டி அவர் இவ்வாறு சொன்னார்: "ராஜாவாகிய என் ஆண்டவனே, இந்தப் புருஷர் எரேமியா தீர்க்கதரிசியைத் துரவிலே போட்டுச் செய்தது எல்லாம் தகாத செய்கையாயிருக்கிறது; அவன் இருக்கிற இடத்திலே பட்டினியினால் சாவானே இனி நகரத்திலே அப்பமில்லை என்றான்".
அப்பொழுது ராஜா எபெத்மெலேக் என்னும் எத்தியோப்பியனை நோக்கி: " நீ இவ்விடத்திலிருந்து முப்பது மனுஷரை உன்னுடனே கூட்டிக்கொண்டுபோய், எரேமியா தீர்க்கதரிசி சாகாததற்குமுன்னே அவனைத் துரவிலிருந்து தூக்கிவிடு என்று கட்டளையிட்டான்".
(எரேமியா 38:9-10) பின்னர் ராஜாவின் கட்டளைப்படி, எபெத்மெலேக் 30 பேரைத் தன்னுடனே கூட்டிக்கொண்டுபோய், கடவுளின் தீர்க்கதரிசியை மீட்டார்.
ஒருவேளை எபெத்மெலேக்கிற்குப் பயமாக இருந்திருக்கலாம், ஆனால் அந்தப் பயத்தைச் சமாளிக்க அவருடைய விசுவாசம் அவருக்குக் கைகொடுத்தது. அந்த விசுவாசத்தைச் செயலில் காட்டினதை தேவன் கவனித்தார். அதற்கு அவர் எப்படிப் பலன் அளித்தார்? எபெத்மெலேக்கிடம் அவர் எரேமியாவின் மூலமாய்க் கூறினதாவது: "இதோ, என்னுடைய வார்த்தைகளை இந்த நகரத்தின்மேல் நன்மையாக அல்ல, தீமையாகவே வரப்பண்ணுவேன்; . . . ஆனால் அந்நாளிலே உன்னைத் தப்புவிப்பேன், . . . நீ பயப்படுகிற மனுஷரின் கையிலே ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை. உன்னை நிச்சயமாக விடுவிப்பேன், . . . நீ என்னை நம்பினபடியினால் உன் பிராணன் உனக்குக் கிடைத்த கொள்ளைப்பொருளைப்போல இருக்கு[ம்].\" (எரேமியா 39:16-18) தாம் சொன்னபடியே தேவனாகிய கர்த்தர் எபெத்மெலேக்கை விடுவித்தார். எரேமியாவையும் அவர் விடுவித்தார். யாரிடமிருந்து? முதலில் யூதாவின் பொல்லாத பிரபுக்களிடமிருந்தும், பின்பு எருசலேமைத் தரைமட்டமாக்கிய பாபிலோனியரிடமிருந்தும் விடுவித்தார். தேவபிள்ளைகளைக் காப்பாற்றும்படி உதவிசெய்யும் ஒவ்வொருவரும் அப்படியே விடுவிக்கப்படுவார்கள்.. குமாரனாகிய இயேசு உங்களை விடுவிக்கிறவர்.
[கர்த்தர்] தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் காப்பாற்றி, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவிக்கிறார்" (சங்கீதம் 97:10) ஆமென்.
Write a public review