சபை பேசுவது
"நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப் போலவும், உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும்; நேசம் மரணத்தைப்போல் வலிது; நேச வைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது; அதின் தழல் அக்கினித்தழலும் அதின் ஜுவாலை கடும் ஜுவாலையுமாயிருக்கிறது.”
"நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப் போலவும், உமது புயத்தின்மேல் முத்திரையைப் போலவும் வைத்துக்கொள்ளும்” எபேசியார் 1:13 இல் "நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்." என்று கூறப்பட்டிருக்கிறது. இவ்வாறு வசனத்தைக் கேட்டு, இரட்சிப்பை பெற்ற மணவாட்டி சபை பரிசுத்த ஆவியானவருக்குள் முத்திரை போடப்படுகிறார்கள்.
இந்த மணவாட்டி நித்தியத்தில் அவரோடு கூட இருக்கும் பொழுது, பிதாவின் நாமமும், கிறிஸ்துவின் நாமமும் அவர்கள் நெற்றியில் எழுதப்படும். அதாவது முத்திரை போடப்படும் என்று வெளி 14: 1 ,வெளி 22:4 இல் சொல்லப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட மிகப்பெரியதான உன்னதமான இந்த ஆசீர்வாதத்திற்காக மணவாட்டியாகிய ஸ்த்ரி, என் பெயரை உங்களது இருதயத்தில் எழுதும் என்பதாக கூறுகிறார். அதாவது மணவாட்டியின் பெயர் மணவாளனாகிய கிறிஸ்துவின் இருதயத்தில் எழுதப்பட வேண்டும். அவரது வார்த்தை நமது இருதயத்தில் இருக்க வேண்டும். யோவான் 15:7 இல் "நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்." என்று வேதம் கூறுகிறது.
கிறிஸ்துவின் புயம் என்பது ஆளுகையும் அரவணைப்பையும் குறிக்கிறது. ஏசாயா 40: 10,11 இல் கர்த்தர் தமது புயத்தில் அரசாளுவார் என்றும் தனது ஜனங்களை புயத்தினால் சேர்த்து தமது மடியிலே சுமந்து நடத்துவார் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
"நேசம் மரணத்தைப்போல் வலிது;” நீங்கள் எங்கள் மேல் வைத்த அன்பு, நாங்கள் உங்கள் மேல் வைத்த அன்பு மிகவும் வலிமை வாய்ந்தது என்பதை சபை இங்கே வெளிப்படுத்துகிறது. அந்த நேசத்தின் வலிமையினால், சபை கிறிஸ்துவினால் இரட்சிப்பை பெற்று, கிறிஸ்துவின் மனவாட்டியாக இருப்பதை கூறுகிறது.
"நேச வைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது; அதின் தழல் அக்கினித்தழலும் அதின் ஜுவாலை கடும் ஜுவாலையுமாயிருக்கிறது” இயேசு கிறிஸ்துவை நேசிப்பதினால், இந்த உலகத்தில் வருகிற உபத்திரவத்தை வெளிக்காட்டுகிறது. இதற்கு வேத வசனம் பதில் சொல்கிறது "உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்.” (யோவான் 16 : 33) என்றார். அதேபோல் 2 தீமோத்தேயு 3 : 12 இல் "அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்." என்று சொல்லப்படுகிறது. கிறிஸ்துவை உண்மையாய் ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் சில துன்பங்களும், சில உபத்திரவங்களும் பாதாளத்தை போலவும், பயங்கரமான அக்னி தழல் போலவும், கடும் ஜூவாலை போலவும் இருக்கிறது. வேதத்திலே நாம் அப்போஸ்தலருடைய வாழ்க்கையும், சீசர்களுடைய வாழ்க்கையும் பார்க்கும் பொழுது, அவர்கள் அனேக உபத்திரங்கள் மத்தியிலும், வைராக்கியமாக கிறிஸ்துவுக்காக நின்று ஜெயம் பெற்றதை நாம் பார்க்கிறோம். மனித கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது, இது சில நேரம் கடினமாக தோன்றலாம். ஆனால், வேதம் சொல்லுகிறது . "அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்." என்று ரோமர் 8 : 28 இல் பார்க்கிறோம். இன்று உண்மையாக கிறிஸ்துவை நீங்கள் நேசிப்பவர்களாக இருந்தால், உங்கள் வாழ்வில் சில உபத்திரவங்கள் இருந்தால் அதை நன்மைக்கே என்று எடுத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் கிறிஸ்துவின் இருதயத்தில் முத்திரையாக இருக்கிறீர்களா?
குறிப்பு வசனம்: யாத் 28 : 9-12, ஏசா 49 : 16, ஆகாய் 2 : 23, 2 கொரி 1 : 22
Write a public review