உன்னதப்பாட்டு 8 : 11
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



உன்னதப்பாட்டு 8 : 11

"பாகால் ஆமோனிலே சாலொமோனுக்கு ஒரு திராட்சத்தோட்டம் உண்டாயிருந்தது, அந்தத் தோட்டத்தைக் காவலாளிகள் வசத்திலே அதின் பலனுக்காக, ஒவ்வொருவன் ஆயிரம் வெள்ளிக்காசு கொண்டுவரும்படி விட்டார்.”

உன்னதப்பாட்டு புத்தகத்திலே சாலமோன் இயேசு கிறிஸ்துவிற்கு அடையாளமானவர் ( தன் விளக்கம் விளக்கக் கட்டுரையில் உள்ளது). "பாகால் ஆமோன்” எருசலேமுக்கு வெளியே இருக்கிற இடம் என்று சொல்லப்படுகிறது.

"சாலொமோனுக்கு ஒரு திராட்சத்தோட்டம் உண்டாயிருந்தது”   அதாவது, பிதா தான் தோட்டக்காரர் என்று யோவான் 15 : 11 -ல் வேதம் கூறுகிறது. ஆனால் இந்த வசனத்தில் இயேசு கிறிஸ்துவுக்கு (சாலொமோன்) ஒரு தோட்டம் உண்டாயிருந்தது என்று சொல்லப்பட்டிருக்கிறது. எப்படியெனில், யோவான் 17 : 6 -ல் இயேசு கிறிஸ்து பிதாவைப் பார்த்து, உம்முடைய ஜனங்களை எனக்குத் தந்தீர் என்று கூறுகிறார். மேலும் யோவான் 17 : 10 -ல் இயேசு கிறிஸ்து சொல்லுகிறதாவது, உம்முடையவைகள் யாவும் என்னுடையவைகள் என்று கூறுகிறார். இந்த வசனத்தின் அடிப்படையில் பார்க்கும் போது பிதாவினுடைய திராட்சத்தோட்டம் இப்பொழுது இயேசு கிறிஸ்துவுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

எருசலேமுக்கு வெளியே ஆண்டவர் ஒரு தோட்டத்தை வைத்தார், இது உலகத்திலுள்ள கிறிஸ்துவின் சபையைக் குறிக்கிறது. அப்போஸ்தலர்களால் உலகமுழுவதும் சென்று சுவிசேஷம் அறிவிக்கப்பட்டு சபைகள் உருவாக்கப்பட்டது. இன்று உலகம் முழுவதும் பல சபைகளும் அதற்கு மேய்ப்பர்களும் உள்ளனர். தனது சபையாகிய தோட்டத்தை காவலாளிகள் வசத்திலே அதின் பலனுக்காக, ஒவ்வொருவனும் ஆயிரம் வெள்ளிக்காசு கொண்டுவரும்படி விட்டார்.  இயேசு கிறிஸ்து பிதா தனக்கு கொடுத்த திராட்சத்தோட்டத்தை அவரால் மீட்கப்பட்ட ஜனங்களுக்கு கொடுக்கிறார். யோவான் 17 : 18 -ல் பிதா  கிறிஸ்துவை உலகத்தில் அனுப்பினதுப் போல இயேசு கிறிஸ்துவும் தனது ஜனங்களை உலகத்திலே மேய்ப்பராக, ஊழியராக தனது தோட்டத்திற்கு காவலாளியாக வைக்கிறார். 

"காவலாளிகள்” என்பது சபை ஊழியர்களைக் குறிக்கிறது (எசே 3 : 17, 38 : 7). இங்கே ஆண்டவர் விரும்புகிறது, என்னவென்றால் சபை வளர்கிற ஆசீர்வாதமான ஒரு மரமாக காணப்பட வேண்டும். அதுபோல் கனி கொடுக்கிற ஒரு திராட்சத்தோட்டமாக சபை இருக்க வேண்டும் என்கிறதைத் தான் அவர் விரும்புகிறார். இந்த வசனம் கூறுகிறது என்னவென்றால், ஆண்டவர் திராட்சைத் தோட்டமாகிய சபையை உருவாக்கி, அதில் சபை மேய்ப்பராகிய காவலாளிகளை வைத்து அவர்களிடம் மந்தையை ஒப்படைத்திருக்கிறார். அந்த மந்தையில் உள்ள ஒவ்வொருவருமே பலன் கொடுக்க வேண்டும். அதாவது ஆயிரம் வெள்ளிக்காசு கொண்டு வரும்படி விட்டார் என்று சொல்லப்படுகிறது. அதாவது தாலந்தை ஒவ்வொருவருமே தம்முடைய  வாழ்க்கையிலே கூட்டுகிறவர்களாக இருக்க வேண்டும் என்பதாக ஆண்டவர் இங்கே கூறுகிறார். ஒவ்வொருவருக்கும் ஆண்டவர் ஏதோ ஒரு தாலந்து கொடுத்திருக்கிறார், அதற்கு அவர் ஒரு நாள் நம்மிடம் நிச்சயமாக கணக்குக் கேட்பார் (மத் 25 : 14-30). 

இந்த வசனத்திலிருந்து நமக்குத் தெரிகிறது என்னவென்றால், இதைப் படிக்கிற சபை மேய்ப்பர் யாராக இருந்தாலும், தயவு செய்து இந்த வசனத்தில் கவனம் செலுத்துங்கள். அதற்கான பலனை ஆண்டவர் கண்டிப்பாக ஒவ்வொரு மேய்ப்பரிடமும் கேட்பார் என்பதை இந்த வசனம் நமக்கு வலியுறுத்துகிறது. அதேபோல சபை விசுவாசிகளிடமும் அவர் கொடுத்த தாலந்திற்கு கணக்கு கேட்பார். சபை ஆயிரம் ஆயிரமாக ஆத்துமாக்களால் நிரப்பப்பட வேண்டும். சபை ஆத்தும ஆதாயத்திற்காக கரிசனையோடு செயல்பட வேண்டும்  என்பதை  இவ்வசனம் போதிக்கிறது.

இதைக் குறித்து நியாயத்தீர்ப்பிலே கணக்குக் கேட்பார் என்ற பயம் உங்களுக்கு இருக்கிறதா?

குறிப்பு வசனம் :  பிரசங்கி  2 : 4-5, ஏசா 5 : 1-5, ஏசா 27 : 2,3, மத் 21 : 33-43, மாற் 12 : 1-9,  லூக் 20 : 9-16  




  :   27 Likes

  :   88 Views