உன்னதப்பாட்டு 7 : 8
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



உன்னதப்பாட்டு 7 : 8

"நான் பனைமரத்திலேறி, அதின் மடல்களைப் பிடிப்பேன் என்றேன்; இப்பொழுதும் உன் ஸ்தனங்கள் திராட்சக்குலைகள் போலவும், உன் மூக்கின் வாசனை கிச்சிலிப்பழங்கள் போலவும் இருக்கிறது.”

"நான் பனைமரத்திலேறி, அதின் மடல்களைப் பிடிப்பேன் என்றேன்”.  முந்தைய வசனத்தில் சபையைப் பனைமரத்திற்கு கிறிஸ்து ஒப்பிட்டிருந்தார். பனைமரத்தைப்போல் இருக்கிற சபை கொடுக்கிற பலனை அறிந்து கொள்வதற்கு இந்த வசனத்தில் கூறுகிறது என்னவென்றால், நான் பனைமரத்திலேறி, அதின் மடல்களைப் பிடிப்பேன். அதாவது, பனைமரம் நீதியைக் குறிக்கிறது; மடல்கள் நீதியின் கனியைக் குறிக்கிறது. இயேசு கிறிஸ்து சபையைப் பார்த்துக் கூறுகிறார்; சபையே நீ என்னால் இரட்சிக்கப்பட்டு நீதிமானாக்கப்பட்டு இருக்கிறாய்; அந்த நீதியினால்; உனக்குள் காணப்படுகின்ற கனியுள்ள வாழ்க்கையை நான் அனுபவிக்கிறேன் (பிலி 1 : 10). இயேசு கிறிஸ்து இந்த சபையைப் பார்த்து சொல்கிறார், நீதியாகிய பனைமரத்தின் மேலேறி, அதன் நீதியின் கனியாகிய மடலைப் பிடிப்பேன் என்று மனமகிழ்ச்சியோடு கூறுகிற ஒரு வார்த்தையாகும்.

"இப்பொழுதும் உன் ஸ்தனங்கள் திராட்சக்குலைகள்போலவும்” இங்கே இந்த வார்த்தை இப்பொழுதும் என்று தொடங்குகிறது. இதன் அர்த்தம் என்னவென்றால், முன்பும் உன் ஸ்தனங்கள் திராட்சக்குலைகள் போல் இருந்தது. இப்பொழுதும் திராட்சகுலைகள் போல் இருக்கிறது (ஸ்தனம் என்பது என்ன என்று முந்தைய வசனத்தில் பார்த்தோம்). அதாவது, எப்பொழுதும்  சபை கிறிஸ்துவுக்குள் நிலைத்து நிற்பதை இந்த பகுதி விளக்கிக் காட்டுகிறது.

"உன் மூக்கின் வாசனை கிச்சிலிப்பழங்கள் போலவும் இருக்கிறது”  மூக்கு என்பது நல்ல மற்றும் கெட்ட வாசனையை உணரக் கூடியது. அதேபோல் இந்த உலகத்திலே பரிசுத்தம் மற்றும் பாவம் என்ற இரண்டு காரியங்கள் இருக்கிறது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மிடம் பரிசுத்தமுள்ள வாசனையை எதிர்பார்க்கிறார். கர்த்தருக்குப் பயப்படுதலே அவருக்கு உகந்த வாசனை என்று ஏசா 11 : 3 -ல் பார்க்கிறோம். "கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்.” அதேபோல் உன் 3 : 6 -ல் சொல்லப்பட்டிருக்கிற இரட்சிப்பின் வாசனை, ஜெபத்தின் வாசனை, ராஜரீக வாசனையை ஆண்டவர் இன்று நம்மில் எதிர்பார்க்கிறார். இஸ்ரவேலிலே கிச்சிலிப்பழம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பழம் என்பது நமக்குத் தெரியும். அந்தப் பழத்திற்கு இந்த ஆவிக்குரிய வாசனையை ஒப்பிட்டு முக்கியத்துவப் படுத்துகிறார்.

அன்பானவர்களே! அவருடைய நீதியினால் நாம் கொடுக்கின்ற கனியுள்ள வாழ்க்கையை, இயேசு கிறிஸ்து இங்கே கூறுகிறார். இன்று நாம் நீதிமான்களாக்கப் பட்டிருக்கிறோமா? நம்முடைய வாழ்வில் நாம் கனி கொடுக்கிறோமா? அதேப்போல் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து சபையிடம் எதிர்பார்க்கிற அன்பும் விசுவாசமும் இன்று நமக்குள் இருக்கிறதா? கர்த்தருக்குப் பயப்படுகிற உகந்த வாசனை நம்மிடம் இருக்கிறதா? என்று சிந்தித்துப் பார்ப்போம்.

நீதியின் கனி உங்கள் வாழ்வில் காணப்படுகிறதா?

குறிப்பு வசனம்: எரே 32 : 41




  :   24 Likes

  :   93 Views