"உன் சிரசு கர்மேல் மலையைப்போலிருக்கிறது; உன் தலைமயிர் இரத்தாம்பரமயமாயிருக்கிறது; ராஜா நடைக்காவணங்களில் மயங்கிநிற்கிறார்.”
"உன் சிரசு கர்மேல் மலையைப்போலிருக்கிறது” கர்மேல் மலை மத்திய இஸ்ரவேலின் கடலில் இருந்து தென்கிழக்கு நோக்கி நீளும் வடக்கு இஸ்ரவேலில் உள்ள ஒரு கடலோர மலைத்தொடர் ஆகும். ஆகாப் எலியாவைக் கண்ட போது "இஸ்ரவேலைக் கலங்கப் பண்ணுகிறவன் நீயல்லவா” என்றான். எலியா பாகால் தொழுகைக்கு சவால் விட்டான்; உண்மை தேவனை நிரூபிக்க கர்மேல் மலையில் போட்டி ஆயத்தமாக்கப்பட்டது. பாகால் தீர்க்கதரிசிகள் 400 பேர் காளைகளை வெட்டி பலிபீடத்தில் வைத்து பாகாலை அழைத்தார்கள். பயனில்லை எலியா காளைகளை வெட்டி பலிபீடத்தில் வைத்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான். அக்கினி வானத்திலிருந்து இறங்கி பலியைப் பட்சித்தது. அக்கினியால் பதிலளிக்கிற கர்த்தரே, மெய்யான தேவன் என்று ஜனங்கள் கூறினார்கள் (1 இராஜா 18 : 17 - 39). மேலும் இந்த கர்மேல் மலை ஒரு செழிப்பான பகுதியாக இஸ்ரவேல் தேசத்தில் இருந்து கொண்டிருக்கிறது.
இயேசு கிறிஸ்து சபையைப் பார்த்து சொல்லுகிறதாவது, செழிப்பாக இருக்கிற இந்த கர்மேல் மலைப்போல், உன் சிரசு (தலை) ஆசீர்வாதமாகவும் (நீதி 10 : 6), செழிப்பாகவும் இருக்குமென்று, எலியாவின் நாட்களில் அக்கினி இறங்கினதுப்போல், இன்று பரிசுத்த ஆவியானவர் சபையில் பொழிந்தருளுவதையும் கூறுகிறார். அதேபோல் சபையாகிய கிறிஸ்தவர்கள் அபிஷேகம் பண்ணப்படுவதையும் குறிக்கிறது (லேவி 8 : 12).
"உன் தலைமயிர் இரத்தாம்பரமயமாயிருக்கிறது” இரத்தாம்பரம் என்பது சிவப்பு கலந்த ஊதா நிறம் ஆகும். இந்த இடத்தில் இரத்தாம்பரம் இராஜாக்கள், பிரபுக்கள் வசதியானவர்கள் பயன் படுத்துவதைக் குறிக்கிறது (தானி 5 : 29, எஸ்தர் 8 : 15, லூக் 16 : 19). இயேசு கிறிஸ்து சபையைப் பார்த்து, என்னுடைய பார்வையில் நீங்கள் ராஜாக்கள், பிரபுக்கள் மற்றும் ஐசுவரியவான்கள் போன்று ஒரு சிறப்பான அங்கீகாரம் பெற்றிருக்கிறீர்கள் என்று கூறுகிறார். மேலும் தலைமயிர் கர்த்தருக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட நசரேயர்களையும், பரிசுத்தத்தையும் குறிக்கும். அதேபோல் எனக்கென்று அர்ப்பணிப்போடு, பரிசுத்தமாக வாழ்கிற நீங்கள் இன்று என்னால் அங்கீகாரம் பெற்றவர்களாக இருக்கிறீர்கள் என்று கிறிஸ்து கூறுகிறார். மேலும் இரத்தம் பரம் என்பது ஒரு விலைமதிக்க முடியாததை குறிக்கிறது. இங்கே தலை மயிர் என்பது பரிசுத்தத்தை குறிப்பிடுகிறது. அதாவது சபையினுடைய பரிசுத்தம் விலையேற பெற்றது என்று மணவாளன் இங்கே கூறுகிறார்.
"ராஜா நடைக்காவணங்களில் மயங்கிநிற்கிறார்” பொதுவாக ராஜாக்கள் அரண்மனைகளில் நடப்பதற்கு முற்றம் என்கிற ஒரு பகுதி இருக்கும். அதைத்தான் நடைக் காவணங்கள் என்கிறோம். இயேசு கிறிஸ்து தன்னுடைய ஸ்தானத்திலிருந்து சபையை ஆச்சரியத்தோடும், சந்தோஷத்தோடும், அன்போடும் பார்க்கிற இந்த விஷயத்தை தான் இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. சங்கீதம் 45: 11 ,ல் "அப்பொழுது ராஜா உன் அழகில் பிரியப்படுவார்" என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதைதான் கவிதை நடையில் மயங்கி நிற்கிறார் என்று கூறப்படுகிறது. வெளி 2 : 1 ,ல் இயேசு கிறிஸ்து ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவிக் கொண்டிருக்கிறவராக வேதம் குறிப்பிடுகிறது. இங்கே குத்துவிளக்கு என்பது சபையைக் குறிப்பிடுகிறது (வெளி 1 : 20). இயேசுகிறிஸ்து சபையாகிய நம் மத்தியில் இன்றும் உலாவுகிறவராக இருந்து கொண்டிருக்கிறார். கிருபையின் காலத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிற சபையாராகிய நாம் உண்மையிலே பாக்கியவான்கள். கிறிஸ்து நம் மத்தியிலே இன்றைக்கும் வாசம் செய்கிறவராக, உலாவுகிறவராக, நம்மை ஆராய்ந்து பார்க்கிறவராக, நமக்கு ஒரு ராஜாவாக இருந்து நமது எல்லாக் காரியங்களிலும் அவர் நம்மை ஆட்சி செய்கிறவராக நமக்குள் இருந்து, நம் மத்தியில் நம்மோடு வாசம் செய்கிறவராக இருக்கிறார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
ஆவிக்குரிய ஆசீர்வாதம் மற்றும் கிறிஸ்துவால் உயர்த்தப்பட்டவர்களாக இருக்கிறீர்களா?
குறிப்பு வசனம்: ஏசா 35 : 12, கொலோ 1 : 18, சங் 23 : 5, ஆதி. 49 : 26, லேவி 8 : 12
Write a public review