"வாரும் என் நேசரே! வயல்வெளியில் போய், கிராமங்களில் தங்குவோம்.”
சபை, கிறிஸ்துவின் உதவியோடு ஆத்துமா ஆதாயம் செய்வதை குறிக்கிற வசனம் இது. கிறிஸ்தவர்கள் தங்களை ஊழியத்திற்காக அர்ப்பணித்து இயேசுவை சார்ந்து இருக்கிற பகுதியாகும்.
வாரும் என் நேசரே! கிறிஸ்துவின் பிரசன்னத்திற்குப் பிறகு, சபைக்கு கிறிஸ்து மீது கொண்ட தீவிரமான அன்பின் வெளிப்பாடாகும். மேலும் அவர் இல்லாமல் நாம் எதுவும் செய்ய முடியாது என்பதை சபையாகிய கிறிஸ்தவர்கள் அறிந்து இருக்கிறார்கள். "என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.” என்று (யோவான் 15 : 5) இல் சொல்லியிருக்கிறது. ஊழியத்திற்கு தயாரான சபை இயேசு கிறிஸ்துவை தன்னோடிருந்து செயல்பட அழைக்கிறது.
"வயல் வெளியில் போய் கிராமங்களில் தங்குவோம்.” கிராமங்கள் வயல்வெளிகள் உள்ள விளைச்சல் நிறைந்த பகுதியாக இருக்கும். சகாரியா 10: 1 இல் "பின்மாரிகாலத்து மழையைக் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொள்ளுங்கள்; அப்பொழுது கர்த்தர் மின்னல்களை உண்டாக்கி, வயல்வெளியில் அவரவருக்குப் பயிருண்டாக அவர்களுக்கு மழையைக் கட்டளையிடுவார்." என்று சொல்லப்பட்டிருக்கிறது. இது எதை குறிப்பிடுகிறது என்றால், வயல்வெளியில் பயன் உண்டாக்கத்தக்க மழை உண்டாக்கப்படும். அதாவது வயல்வெளிகள் விளைச்சல்களை உண்டாக்கும் என்பது பொருள். மேலும் ஏசாயா 32: 15,16 ,ல் "உன்னதத்திலிருந்து நம்மேல் ஆவி ஊற்றப்படுமட்டும் அப்படியே இருக்கும்; அப்பொழுது வனாந்தரம் செழிப்பான வயல்வெளியாகும்; செழிப்பான வயல்வெளி காடாக எண்ணப்படும். வனாந்தரத்திலே நியாயம் வாசமாயிருக்கும், செழிப்பான வயல்வெளியிலே நீதி தங்கித்தரிக்கும்." என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது சபையாகிய ஜனங்கள் மேல் உன்னதத்திலிருந்து கர்த்தருடைய ஆவியானவர் ஊற்றப்படும் பொழுது, வனாந்தரம் போல் காணப்படுகிற வாழ்க்கை செழிப்பான வயல் வெளியாகும் என்று வசனம் கூறுகிறது. பொதுவாக வயல்வெளி என்பது செழிப்பானது. செழிப்பு என்றால் விளைச்சல் உள்ளது என்று பொருள். மேலும் சங்கீதம் 144:13 இல் "எங்கள் களஞ்சியங்கள் சகலவித வஸ்துக்களையும் கொடுக்கத்தக்கதாய் நிரம்பியிருக்கும்; எங்கள் கிராமங்களில் எங்கள் ஆடுகள் ஆயிரம் பதினாயிரமாய்ப் பலுகும்." என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது விளைவின் பயன்களை எல்லாம் களஞ்சியங்களில் சேர்க்கத்தான் "வாரும் என் நேசரே! வயல் வெளியில் போய் கிராமங்களில் தங்குவோம்.” என்று சபை கூறுகிறது.
அன்பானவர்களே! இன்று இயேசு கிறிஸ்துவால் மீட்கப்பட்டு, ஆவிக்குரிய கனிகளை நாம் பெற்று அவருக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒவ்வொரு கிறிஸ்தவர்களையும் அவர் தன்னுடைய ஊழியத்திற்கு அழைக்கிறார். இன்று நம் எல்லோரையுமே அவர் ஆசாரிய கூட்டங்களாக அழைத்து இருக்கிறார். இன்று அதை உணர்ந்து சபைகள் சொல்ல வேண்டியது என்னவென்றால், ஆண்டவரே எங்களோடுக் கூட வாரும் எங்களுக்கு வழி காட்டும், உம்முடைய ஆலோசனையின் படி எங்களை நடத்தி, நீர் செய்ய வேண்டியதை எங்களைக் கொண்டு செய்யுங்கள் என்று நம்மை அர்ப்பணித்து அவருடைய அழைப்புக்குக் கீழ்ப்படிய வேண்டும். அறுவடை மிகுதியாக இருக்கிறது, வேலையாட்கள் மிகக்குறைவாக தான் இருக்கிறார்கள். இதைப் படிக்கிற நாம் கிறிஸ்துவின் பணிக்கு அர்ப்பணித்து கிறிஸ்துவின் ஊழியத்தை செய்வோம். இங்கே சொல்லப்பட்டிருக்கிற கிராமங்கள் மட்டுமல்ல, இன்று நாம் உலகம் முழுவதும் ஆண்டவர் நம்மை சுவிசேஷம் சொல்ல அழைத்திருக்கிறார். உலகம் முழுவதும் சென்று சுவிசேஷத்தை அறிவிப்போம். அவருடைய கிருபையினாலும் அவருடைய வழிநடத்துதலினாலும் அதைச் செய்வோம்.
நீங்கள் கிறிஸ்துவுக்கு உங்களை அர்ப்பணித்து ஊழியம் செய்கிறீர்களா?
குறிப்பு வசனம்: சகரி 10 : 1, ஏசா 32 : 16, மீகா 3 : 12, மத் 9 : 35, மாற்கு 8 : 27, அப் 8 : 25
Write a public review