"திரும்பிவா, திரும்பிவா, சூலமித்தியே! நாங்கள் உன்னைப் பார்க்கும்படிக்கு, திரும்பிவா, திரும்பிவா.
சூலமித்தியில் நீங்கள் என்னத்தைப் பார்க்கிறீர்கள்? அவள் இரண்டு சேனையின் கூட்டத்துக்குச் சமானமானவள்.”
"சூலமித்தியே!” என்பது சபையைக் குறிக்கிறது. சாலொமோனுக்கு புதிய ஏற்பாட்டு காரியங்கள் தீர்க்கதரிசனமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. பழைய ஏற்பாட்டு நாட்களில் இயேசு கிறிஸ்துவின் பெயரும், அவரை விசுவாசிக்கும் விசுவாசிகளும் வெளிப்படையாக இல்லை. எனவே சாலொமோன் அந்நாட்களில் சபைக்கு சூலமித்தியாள் என்றும், இயேசு கிறிஸ்துவுக்கு சாலொமோன் என்று பெயர் கொண்டு ஆவியானவர் எழுதப்பன்னினார்.
மேலும் வேதத்தில் சூனேம் என்ற ஊர் இருந்தது 1 இராஜா 1 : 3-ல் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த ஊரை சேர்ந்தவரை இங்கே சாலொமோன் சபையின் கதாப்பாத்திரத்திற்கு சூனேமத்தியாள் என்ற பெயர் கொடுத்திருக்கலாம் என்றும் வரலாற்று ஆசிரியர்களால் சொல்லப்படுகிறது. எப்படி இருந்தாலும் இது இயேசு கிறிஸ்துவுக்கும், சபைக்குமான ஐக்கியத்தைக் கூறுகிறது என்பதில் உறுதியாக இருந்து இந்தப் புத்தகத்தை தியானிப்போம்.
இங்கே "நாங்கள்” என்று கூறப்பட்டுள்ளது. பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் மூவரையும் குறிக்கும். மேலும் லூக் 15 : 10 -ல் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாக சந்தோஷம் உண்டாகிறது என்று பார்க்கிறோம். சபையே என் ஆத்துமா உன்னைத் தேடி வந்திருக்கிறது. நீ (சபை) முழுமையாகத் திரும்பி வா(உலகத்தின் பார்வையிலிருந்து) எரே 3 : 7-ல் இஸ்ரவேலை பாவத்திலிருந்து திரும்பி வா என்று அழைக்கின்றதைப் பார்க்க முடிகிறது. எரே 3 : 14-ல் சீர்கெட்ட பிள்ளைகளே திரும்புங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
சூலமித்தியில் நீங்கள் என்னத்தைப் பார்க்கிறீர்கள்? அவள் இரண்டு சேனையின் கூட்டத்துக்குச் சமானமானவள். அதாவது, பழைய ஏற்பாட்டு இஸ்ரவேல் ஜனக் கூட்டத்தையும், புதிய ஏற்பாட்டு ஆவிக்குரிய இஸ்ரவேல் ஜனக் கூட்டத்தையும் சேர்ந்த இரு சேனை கூட்டத்திற்கும் சமமானவள் மணவாட்டி என்பதை வேதம் இங்கே குறிப்பிடுகிறது (எபிரேயர் 6:18). தன்னுடைய சத்தத்திற்கு செவிகொடுத்து மனந்திரும்பிய சபையின் தொகை இரண்டு சேனை கூட்டத்திற்கு சமமாக இருக்கிறது என்று கூறுகிறார். சேனை என்பது ஒரு பெருங்கூட்டத்தைக் குறிக்கும். வெளி 19 : 1-ல் திரளான ஜனக்கூட்டம் இருக்கிறதைப் பார்க்க முடிகிறது.
அன்பானவர்களே! இன்று இயேசு கிறிஸ்து, நம்மைப் பார்க்க அவருடைய ஆத்துமா வாஞ்சையாக வருகிறது. அவருடைய ஜனங்களாக இருந்தும் அவரை முழுமையாக ஏற்றுக் கொள்ளாமல் பின்வாங்கிப் போன கிறிஸ்தவர்களை, அவர் திரும்பி வா என்று ஆவலோடு அழைக்கிறார். இன்று அவருடைய இந்த சத்தத்திற்கு செவி கொடுத்தால் அவருடைய மணவாட்டியாகும் பாக்கியம் நமக்குக் கிடைக்கும், இல்லையென்றால் சபை கைவிடப்பட்ட நிலைமையில் இருக்கும். இன்றே உணர்வடைந்து அவரிடம் திரும்பி வாருங்கள். அவர் நம்மை ஏற்றுக்கொள்ள அவருடைய ஆத்துமா நம்மேல் வாஞ்சையாக இருக்கிறது.
நீங்கள் இந்த சேனைக் கூட்டத்தில் இருக்கிறீர்களா?
குறிப்பு வசனம்: எரே 3: 12-15, ஓசியா 14: 1-4, லூக் 15:10
Write a public review