உன்னதப்பாட்டு 5 : 6
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



உன்னதப்பாட்டு 5 : 6

"என் நேசருக்குக் கதவைத் திறந்தேன்; என் நேசரோ இல்லை, போய்விட்டார்; அவர் சொன்ன வார்த்தையால், என் ஆத்துமா சோர்ந்துபோயிற்று. அவரைத் தேடினேன், அவரைக் காணவில்லை; அவரைக் கூப்பிட்டேன், அவர் எனக்கு மறுஉத்தரவு கொடுக்கவில்லை.”

"என் நேசருக்குக் கதவைத் திறந்தேன்" என்பது சபை இப்பொழுது கர்த்தருக்கு தன்னுடைய ஆத்துமாவில்  இடம் கொடுக்க ஆயத்தமாகுகிறது.

"என் நேசரோ இல்லை, போய்விட்டார்” இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகையில் சபை எடுத்துக் கொள்ளப்பட்டது; இது தெரியாத கைவிடப்பட்ட சபை அவரைத் தேடுகிறார்கள்; ஆனால் அவரைக் கண்டு கொள்ள முடியவில்லை, அவர் போய்விட்டார். "கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள். அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்.” (ஏசா 55 : 6)  என்ற வசனத்தின் படி, கர்த்தரைக் காண முடியாத ஒரு காலம் வரும்; அதுதான் சபை கைவிடப்பட போகிற காலம்.  நாம் இன்று ஒவ்வொருவருமே கர்த்தரைக் கண்டடையத்தக்க ஒரு நல்ல சமயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனவே இந்தக் காலத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

"அவர் சொன்ன வார்த்தையால் என் ஆத்துமா சோர்ந்துபோயிற்று.” கைவிடப்பட்ட சபை, இப்பொழுது கர்த்தருடைய வார்த்தையை நினைவுக்கூர்ந்து பார்க்கிறது; அவர் சொன்ன வார்த்தையால் ஆத்துமா சோர்ந்து போயிற்று; அப்படி அவர் என்ன சொன்னார்? என்று பார்ப்போம். இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்றும், ஆகையால் விழிப்போடும், ஆயத்தமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்று (1தெச 5 : 2, மத் 24: 42-44) சொல்லப்பட்டிருக்கிறது. இப்பொழுது வேதத்திலே சொல்லப்பட்டிருக்கிற சபை எடுத்துக்கொள்ளப்படுதலை நினைத்து, அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், அவர்கள் கைவிடப்பட்டதை நினைத்து, நினைத்து அவர்கள் ஆத்துமா சோர்ந்து போயிற்றுஎன்று சொல்கின்றனர். இந்த வார்த்தை கிருபையின் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற நமக்கு எச்சரிக்கையாக கொடுக்க பட்டிருக்கிறது.

"அவரைத் தேடினேன், அவரைக் காணவில்லை; அவரைக் கூப்பிட்டேன், அவர் எனக்கு மறுஉத்தரவு கொடுக்கவில்லை.” என்பது சபை எப்படியாவது அவரிடம் சேர்ந்து விட வேண்டுமென்று வாஞ்சிக்கிறதை காண்பிக்கிறது. அவரைத் தேடிப் பார்க்கிறார்கள்.அவரை அவர்களால் காணமுடியவில்லை, ஜெபத்திலே காத்திருக்கிறார்கள்; எந்த பதிலும் கிடைக்கவில்லை, அவர்களுக்கு மறு உத்தரவும் கொடுக்கப்படவில்லை.(ஓசியா 5 : 6,15, நீதி 1 : 28, எரேமியா 11:11) ஆகையால் மறு உத்தரவு கிடைக்கிற இந்த நாட்களை நாம் பயன்படுத்திக் கொள்வோம் மறு உத்தரவு கிடைக்காத நாட்கள் வரும் என்பதை ஆண்டவர் நமக்கு இன்று உணர்த்துகிறார் நாம் எச்சரிக்கையாக செயல்படுவோம்.

அன்பானவர்களே! கிருபையின் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற நாம், இந்த நாட்களை பயன்படுத்திக் கொள்வோம் கர்த்தரிடம் கிட்டிச் சேர்கிற அருமையான நல்ல நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் சபை எடுத்துக் கொள்ளப்பட்டப் பிறகு, தேடினாலும் அவரைக் காண முடியாது. ஒரு இருண்ட காலம் வரப்போகிறது, இதை ஆண்டவர் நமக்கு வேத வசனத்தின் மூலம் எச்சரிக்கையாக நமக்கு சொல்லுகிறார். அவருடைய மணவாட்டியாக நாம் ஆயத்தமாவோம்.

நீங்கள் காலத்தை உணர்கிறீர்களா?

குறிப்பு வசனம்:  சங் 30: 7, ஏசா 50: 2, வெளி 3: 19-20,  ஓசி 5: 6-7.




  :   30 Likes

  :   92 Views