உன்னதப்பாட்டு 5 : 15
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



உன்னதப்பாட்டு 5 : 15

"அவர் கால்கள் பசும்பொன் ஆதாரங்களின்மேல் நிற்கிற வெள்ளைக்கல் தூண்களைப்போலிருக்கிறது; அவர் ரூபம் லீபனோனைப்போலவும் கேதுருக்களைப்போலவும் சிறப்பாயிருக்கிறது.” 

இயேசு கிறிஸ்து சபையின் மத்தியில் உலாவுவதையும், கிறிஸ்து மகிமை பொருந்திவராக சிறந்து விளங்குவதையும் இந்த வசனம் கூறுகிறது. 

"அவர் கால்கள் பசும்பொன் ஆதாரங்களின்மேல் நிற்கிற வெள்ளைக்கல் தூண்களைப்போலிருக்கிறது” பசும்பொன் என்பது, கிறிஸ்து பொன் விளக்காகிய சபையின் மத்தியில் நிற்பதை வர்ணிக்கிறது வெளி 1:12,13 , வெளி 2:1. கிறிஸ்து சபை என்கிற பொன் குத்து விளக்குகளின் மத்தியிலே உலாவுவதை, அவரது கால்கள் பசும்பொன் ஆதாரங்கள் மேல் இருக்கிறதாக வர்ணிக்கப்படுகிறது.

மேலும் ஆவிக்குரிய விதத்தில் பார்க்கும் போது இயேசு கிறிஸ்து கிராமங்கள் தோறும் பட்டணங்கள் தோறும் நடந்து ராஜ்யத்திற்குரிய சுவிசேஷத்தை அறிவித்தார் என்று (லூக் 8 : 1)ல் உள்ளது. அதினால் இன்று அநேக ஜனங்கள் இருளிலிருந்து வெளிச்சத்திற்கு வந்திருக்கிறார்கள். அவருடைய கால்கள் இந்த பூமியிலே நடந்து மனுக்குலத்திற்கு அன்பு, சமாதானம், இரக்கம், மன்னிப்பு, இரட்சிப்பு, கிருபை என்னும் புதிய பாதையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. யோபு சொன்னதுபோல நாமும் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி அவருடைய நெறியைவிட்டு சாயாமல் அதைக் கைக்கொள்ளுவோம் (யோபு 23 : 11). 

"அவர் ரூபம் லீபனோனைப்போலவும் கேதுருக்களைப்போலவும் சிறப்பாயிருக்கிறது” உண்மையில் சாலொமோன் பாடல் எழுதப்பட்டப்போது லீபனோன் இஸ்ரவேலின் வடக்கு எல்லையாகவும், வாக்குறுதியளிக்கப்பட்ட நிலத்தின் ஒரு பகுதியாகவும் இருந்தது. (உபா 11 : 24, யோசுவா 1 : 4). சாலொமோனின் ஆட்சியின் போது லீபனோன் சாலொமோனின் ஆதிக்கத்தின் ஒரு பகுதியாக இருந்தது (2 நாளா 8 : 6) என்றாலும், ஈராம் மன்னர் அங்கு ஆட்சி செய்தார் மற்றும் சாலொமோனின் பெரிய ஆலயத்தை நிர்மாணிப்பதற்காக கேதுரு மரங்களையும் வழங்கினார். (1 ,ராஜா 5: 10). 

ஏசா 35 : 2-ல் "லீபனோனின் மகிமை" பற்றி பேசுகிறது, மற்றும் ஏசா 60 : 13-ல் "லீபனோனின் மகிமை”  உங்களுக்கு வரும் என்று கர்த்தர் அறிவிக்கிறார். லீபனோன் மகிமை நிறைந்த இடமாக வேதம் கூறுகிறது. சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தை கட்டுவதற்கு லீபனோனிலிருந்து கேதுரு மரங்களை கொண்டு வந்தார். இன்று சபையில் உலாவி கொண்டிருக்கிற இயேசு கிறிஸ்து மகிமை நிறைந்தவராக காணப்படுகிறார். லீபனோனின் கேதுரு மரம் உயரமாகவும் கம்பீரமாகவும் இருக்கும். அதேப்போல் கிறிஸ்துவினுடைய ரூபம் உயரமாகவும், நேர்மையாகவும், கம்பீரமாகவும், சிறப்பானதாகவும் இருக்கும் என்பதை இவ்வசனம் விளக்குகிறது.

இயேசு கிறிஸ்துவின் மகிமையை இவற்றை உணர்கிறீர்களா?

குறிப்பு வசனம்:  வெளி 1 : 15, சங் 75 : 2, 3, வெளி 3 : 12





  :   14 Likes

  :   75 Views