உன்னதப்பாட்டு 5 : 14
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



உன்னதப்பாட்டு 5 : 14

"அவர் கரங்கள் படிகப்பச்சை பதித்த பொன்வளையல்களைப் போலிருக்கிறது; அவர் அங்கம் இந்திரநீல இரத்தினங்கள் இழைத்த பிரகாசமான யானைத் தந்தத்தைப் போலிருக்கிறது.”

இயேசு கிறிஸ்துவினால் மனு குலத்திற்கு உண்டாகும் இரட்சிப்பையும்,  அதனால் அவரோடு சரீரத்தில் நாம் இணைக்கப்படுவதையும், அவரே ஆலயமாக இருப்பதையும் இந்த வசனம் கூறுகிறது.

அவர் கரங்கள் படிகப்பச்சை பதித்த பொன்வளையல்களைப் போலிருக்கிறது;

அப்போஸ்தலர் 11: 21 ,ல் "கர்த்தருடைய கரம் அவர்களோடே இருந்தது; அநேக ஜனங்கள் விசுவாசிகளாகி, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள்." என்று கூறுகிறது.  ஜனங்கள் விசுவாசியானார்கள் என்றால் இரட்சிப்படைந்தவர்கள் என்று அர்த்தம். அதேபோல்  சங்கீதம்  20: 6 ல் "தமது வலதுகரம் செய்யும் இரட்சிப்பின் வல்லமைகளைக் காண்பித்து.." என்று கூறுகிறது. அதாவது இயேசு கிறிஸ்துவின் கரம் இரட்சிப்பு கொடுக்கிறதை இந்த வசனங்கள் குறிப்பிடுகின்றன.

இது ஜனங்களின் பார்வையில் படுகப்பச்சை பதித்த பொன் வளையல்களைப் போலிருக்கிறது என்று கூறப்படுகிறது. படுகப்பச்சை என்பது மஞ்சள் மற்றும் பச்சை நிறத்தை உடைய ஒரு விலை உயர்ந்த கற்கள். அதாவது கிறிஸ்துவின் கரத்தினால் உண்டாகும் இரட்சிப்பும், கேடகமும் எங்களுக்கு விலை உயர்ந்த ஆபரணமாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. 

இன்று வாழும் நமக்கு, இயேசு கிறிஸ்துவின் கரம் உண்மையிலேயே மிகவும் அழகானதாக இருக்கிறது; ஏனென்றால் அந்தக் கரத்தில் தான் நமக்காக அவர் காயங்களை ஏற்றுக்கொண்டார்; ஆணிகள் பாய்ந்த கரங்கள் தான் இன்று நம்மைப் இரட்சித்து, பாதுகாத்து, ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறது. அவருடைய கரம் பராக்கிரமும், வல்லமையும்  உள்ள, சிருஷ்டிப்பின் கரம் மற்றும் மனிதனை உருவாக்கிய கரம் ஆகும். 

"அவர் அங்கம் இந்திரநீல இரத்தினங்கள் இழைத்த பிரகாசமான யானைத் தந்தத்தைப் போலிருக்கிறது.”

அங்கம் என்பது சரீரத்தை குறிக்கிறது. கிறிஸ்துவின் சரிரத்தை வேதம் சபை என்று சொல்கிறது (யோவான் 2: 21). கிறிஸ்துவின் சபையாகிய மணவாட்டி அவருடைய மாமிசத்திலும், எலும்பிலும் இணைக்கப்பட்டு மணவாளனும், மணவாட்டியும் ஒரே சரிரமாக  இருக்கிறார்கள்  என்பதாக கூறப்படுகிறது. கிறிஸ்துவின் சரீரமாகிய ஆலயம் எபேசியர் 1 : 23 , 4 : 12 ,ல் மணவாட்டியாகிய சபையோடு தொடர்புபடுத்தப்படுகிறது.

மேலும் இந்த ஆலயமாகிய கிறிஸ்துவின் சரீரம், மனவாட்டியாகி சபை, இந்த இரண்டும் எதை குறிப்பிடுகிறது என்றால், பரலோகத்தில் தேவனிடத்தில் இருந்து ஒரு நகரம் இறங்கி பூமியிலே வந்து அமருகிறது. அந்த நகரத்தின் அஸ்திபாரங்கள்  சகல ரத்தினங்களால் அலங்கரிக்கப்படுகிறது (வெளி 21: 19,20).  அதிலே இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்திர நீல ரத்தினங்கள் மற்றும் படிகப் பச்சையும் கூறப்பட்டிருக்கிறது. அந்த நகரத்திலும் சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம் (வெளி 21: 22).

கிறிஸ்துவின் சரீரமாகிய ஆலயம் (சபை) விலை மதிக்க முடியாத ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட மகிமை பொருந்தியது. இப்படி அலங்கரித்துக் கொள்வதுதான் ஏசாயா 61:10 ல் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த அலங்காரம் யானை தந்தத்தை போல் உறுதியாக இருக்கிறது என்று கூறப்படுகிறது.

இயேசு கிறிஸ்துவாகிய சரீரமாகிய வலிமையான அஸ்திபாரம் உங்கள் வாழ்வில் முழுமையாக இருக்கிறதா?

குறிப்பு வசனம்:  யாத் 15: 6, சங் 31: 5, சங் 139: 10, சங் 145: 16




  :   23 Likes

  :   80 Views