உன்னதப்பாட்டு 5 : 13
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



உன்னதப்பாட்டு 5 : 13

"அவர் கன்னங்கள் கந்தவர்க்கப்பாத்திகளைப்போலவும், வாசனையுள்ள புஷ்பங்களைப்போலவுமிருக்கிறது ; அவர் உதடுகள் லீலிபுஷ்பங்களைப் போன்றது, வாசனையுள்ள வெள்ளைப்போளம் அதிலிருந்து வடிகிறது.”

இந்த வசனம் இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த பிரசனத்தையும், அவர் உதடுகளில் இருந்து  பிறக்கும் பரிசுத்த வார்த்தையையும், அருள் நிறைந்த வார்த்தையையும் வெளிப்படுத்துகிறது.

கந்தவர்க்கங்களைக் கொண்டு வாசனை தைலங்களை தயார் செய்வார்கள். யாத் 30 : 34 -ல்   சுத்த வெள்ளைப்போளமும், குங்கிலியமும், அல்பான் பிசினுமாகிய கந்தவர்க்கம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இயேசு கிறிஸ்துவின் கன்னங்கள் வாசனைத்திரவியமாகிய கந்தவர்க்கத்திற்கு ஒப்பிடப்படுகிறது; இந்த கந்த வர்க்கங்களைக் கொண்டு பரிசுத்த தைலம் செய்யப்பட வேண்டுமென்று கர்த்தர் கட்டளையிட்டதை யாத் 30 : 35,36 ல் பார்க்க முடிகிறது. இது  இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த பிரசன்னத்தைக் குறிக்கிறது. அவருடைய முகத்தின் பிரசன்னத்தால் நமக்கு சமாதானம் கிடைக்கிறது. (எண் 6 : 26). அதுபோல் எல்லா மனிதருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகிறது (தீத்து 2 : 11).

இயேசு கிறிஸ்துவின் கன்னங்கள் வாசனை புஷ்பங்களைப் போல் இருக்கிறதென்று வசனம் குறிப்பிடுகிறது. அவை பார்ப்பதற்கு இன்பமும், மனதிற்கு மகிழ்ச்சியையும், வாசனை வீசுகிறதாயும், எப்பொழுதுமே இருக்கிறது. அதுப்போல இயேசு கிறிஸ்துவின் பிரசன்னம் நமக்குள் ஒரு ஐக்கியத்தையும், ஒரு மன மகிழ்ச்சியையும், பரிசுத்தத்தையும், சமாதானத்தையும், மனிதகுலத்திற்குக் கொடுக்கிறது.

"அவர் உதடுகள் லீலிபுஷ்பங்களைப் போன்றது, வாசனையுள்ள வெள்ளைப்போளம் அதிலிருந்து வடிகிறது.”  பொதுவாக லீலிபுஷ்பம் அழகு, தூய்மை, மாற்றம் மற்றும் மறுபிறப்பு இவற்றைக் குறிக்கும். மேலும் இயேசு கிறிஸ்துவின் உதடு, லீலிபுஷ்பத்தோடு ஒப்பிடப்படுகிறது. இந்த பகுதி இயேசு கிறிஸ்துவின் வாயிலிருந்து பிறக்கும் ஜீவனுள்ள வார்த்தையை குறிப்பிடுகிறது. யாத் 30 : 23-29 -ல் வெள்ளைப்போளம் பரிசுத்தத்தைக் காட்டுகிறது. இது கவிதை நடையில் சொல்லப்பட்டிருப்பதால், இயேசு கிறிஸ்துவின் உதடுகளில் இருந்து பரிசுத்தம் வெளிப்படுவதை வாசனையுள்ள வெள்ளைப்போளம் அதிலிருந்து வடிகிறது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் சங்கீதம் 45:2 ,ல் உம்முடைய உதடுகளில் அருள் பொழிகிறது என்று கூறப்பட்டிருக்கிறது.

அன்பானவர்களே! இயேசு கிறிஸ்துவின் கன்னங்களும், உதடுகளும் பரிசுத்தத்தை வெளிப்படுத்துகிறது. 1பேதுரு 1 : 16-ல் "நான் பரிசுத்தர் ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே.” என்று சொல்லியிருப்பது போல, அவர் முற்றிலும் பரிசுத்தராய் இருக்கிறார் என்பதை  இவ்வசனம் குறிப்பிடுகிறது.

நீங்கள் அவருடைய பரிசுத்தத்தை விரும்புகிறீர்களா?

குறிப்பு வசனம்: ஏசா 50: 6, சங் 4: 6, சங் 89: 15




  :   19 Likes

  :   81 Views