"லீபனோனிலிருந்து என்னோடே வா, என் மணவாளியே! லீபனோனிலிருந்து என்னோடே வா. அமனாவின் கொடுமுடியிலிருந்தும், சேனீர் எர்மோனின் கொடுமுடியிலிருந்தும், சிங்கங்களின் தாபரங்களிலிருந்தும், சிவிங்கிகளின் மலைகளிலிருந்தும் கீழே பார்.”
"லீபனோனிலிருந்து என்னோடே வா, என் மணவாளியே! லீபனோனிலிருந்து என்னோடே வா.” சங் 45 : 10-11 ,ல் காணப்படுகின்ற அழைப்பை போல், கிறிஸ்து சபைக்கு கொடுக்கும் அன்பான அழைப்பைக் கவனியுங்கள்.இந்த வசனத்தில் லீபனோன் என்பது உலகத்தைக் குறிக்கிறது. அதாவது கிறிஸ்துவில் பெலப்படாத ஜனங்களைக் குறிக்கிறது. கிறிஸ்து உலகத்திலிருந்து வெளியேறும்படி தனது சபைக்கு அழைப்பு விடுக்கிறார். அதாவது உலக வாழ்க்கையிலிருந்து நீ தேவனுடைய இராஜ்ஜியத்துக்கு வா என்பதை ஆண்டவர் இங்கே குறிப்பிடுகின்றார்.
லீபனோன் என்பது இஸ்ரவேல் ஜனங்களுக்கு தேவனால் கொடுக்கப்பட்ட ஏவியருடைய இடம் என்று உபாகமம் 3: 25, 11: 24 இல் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் இந்த புறஜாதியராகிய ஏவியர்கள் லீபனோனிலே தேவனால் வைக்கப்பட்டிருந்தார்கள். ஏனென்றால் இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுடைய கட்டளைக்கு கீழ்படிகிறார்களா இல்லையா என்பதை சோதிப்பதற்கு என்று நியாயாதிபதிகள் 3:1-8 ,ல் சொல்லப்பட்டிருக்கிறது.
இங்கே மணவாளன் தன்னுடைய மனவாட்டியாகிய சபையை புறஜாதியாராகிய அந்த ஏவியர்கள் இருக்கிற லீபனோனிலிருந்து என்னோடு வா என்று அழைக்கிறார். அதாவது புறஜாதியாருடைய குணாதிசயங்கள், தன்மைகள், கர்த்தருக்கு விரோதமான செயலிலிருந்து, என் மணவாட்டியே! நீ என்னை பின்தொடர்ந்து வா என்பதாக இந்த வசனம் குறிப்பிடுகிறது.
"அமனாவின் கொடுமுடியிலிருந்தும், சேனீர் எர்மோனின் கொடுமுடியிலிருந்தும், சிங்கங்களின் தாபரங்களிலிருந்தும், சிவிங்கிகளின் மலைகளிலிருந்தும் கீழே பார்” என்று ஆண்டவர் கூறுகின்றார். ஆமனா என்பது 2இராஜா 5 : 12 -ல் எபிரேய மொழியில் ஆப்னா என்று கூறப்பட்டுள்ளது, தமஸ்குவுக்கு அருகில் உள்ள மலை, அங்கே இருந்து புறப்படும் நீரூற்று Abanah , சேனீர் என்பது ஒரு சிகரம் (உபா 3 : 9 மற்றும் 1நாளா 5 : 23 ). இந்த இரண்டு பகுதிகளும் நீர்வளம் உள்ள மலைப் பிரதேசத்தைக் குறிக்கிறது.
இந்த மலைகள் இனிமையானதாகத் தோன்றின, ஆனால் அவற்றில் சிங்கக் குகைகள் மற்றும் சிவிங்கிகள் உள்ளன. இப்போது சபை சிங்கங்களுக்கு மத்தியில் வசிக்கிறது (சங் 57 : 4). இப்படி பொல்லாத உலகத்தில் பொல்லாத ஜனங்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிற ஜனங்களை இயேசுகிறிஸ்து தன்னுடைய மணவாட்டியாக அழைக்கிறார்.
"அமனாவின் கொடுமுடியிலிருந்து” என்ற வாக்கியத்தைப் பார்க்கும் பொழுது இஸ்ரவேலின் செழிப்பு மிகவும் அழகாகத் தெரியும். . "சேனீர் எர்மோன்” என்பது ஒரு அழகான மலையின் கொடுமுடி. மேலும் சிங்கங்களின் தாபரங்களும், சிவிங்கிகளின் மலையும் ஒரு ஆபத்தான இடத்தைக் குறிக்கிறது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்கு சொல்லுகிறது என்னவென்றால், உலகத்தின் கொடுமுடியிலிருந்து (உச்சியிலிருந்து) பார்க்கும்பொழுதுதான் இஸ்ரவேலின் செழிப்பு அதாவது சேனீர், எர்மோன், அமனா கொடுமுடியில் இருந்து பார்க்கும்பொழுதுதான் இஸ்ரவேலின் அழகு இன்னும் அழகாகத் தெரிகின்றது. அதேபோல் ஆபத்தான இடத்தில் இருக்கும்பொழுது தான் என்னுடைய பாதுகாப்பும், சமாதானமும் உனக்குத் தெரியும். மேலும் இயேசு கிறிஸ்து சபையைப் பார்த்து கூறுவது என்னவென்றால், நீங்கள் இந்த உலகத்தின் பார்வையிலிருந்து, உலகத்தின் இச்சையிலிருந்து விலகி என்னுடைய சத்தியத்திற்கு கீழ்ப்படிந்து தேவனுடைய இராஜ்ஜியத்தைப் பார்க்க ஆசைப்படும் போதுதான் அதனுடைய அருமை உங்களுக்குத் தெரியும், அதாவது நீதி 9 : 6 -ல் சொல்லப்பட்டிருப்பது போல பேதைமையை விட்டு விலகி புத்தியின் வழியிலே நடக்க வேண்டும் என்பதை இந்த வசனத்தின் மூலம் நமக்கு அவர் சொல்லிக் கொடுக்கிறார்.
நீங்கள் தேவ இராஜ்ஜியத்தை பார்க்க ஆசைப்படுகிறீர்களா?
குறிப்பு வசனம் : சங் 45 : 10-11, நீதி 9 : 6, லூக் 9 : 57, யோவான் 12 : 26
Write a public review