உன்னதப்பாட்டு 4 : 15
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



உன்னதப்பாட்டு 4 : 15

"தோட்டங்களுக்கு நீரூற்றும், ஜீவத்தண்ணீரின் துரவும், லீபனோனிலிருந்து ஓடிவரும் வாய்க்கால்களும் உண்டாயிருக்கிறது.”

இதன் முந்தைய வசனமாகிய 12-வது வசனத்தில் ஆத்துமாவைத் தோட்டமாகவும் அது கிறிஸ்துவினால் பாதுகாக்கப்படுவதையும் பின்பு 13, 14-வது வசனத்தில் தோட்டத்தில் மரம், செடி இருப்பதும் அதாவது ஆத்துமாவில் கனிகொடுப்பதும் சொல்லப்பட்டிருந்தது. இந்த வசனத்தில் தோட்டத்திலுள்ள மரம், செடிகள் கனி கொடுக்க வேண்டுமானால், அதற்கு நல்ல நீர்வளம் தேவை, அதாவது நமது ஆத்துமாவுக்கு தேவையான ஜீவ தண்ணீர் இயேசு கிறிஸ்துவினால் கொடுக்கப்படுவதை இந்த வசனம் வெளிப்படுத்துகிறது. 

"தோட்டங்களுக்கு நீரூற்றும்”  இங்கே தோட்டங்களுக்கு நீரூற்று என்பது சபையின் ஆத்தும போஷிப்பைக் குறிக்கிறது. இன்று சபைக்கு இயேசு கிறிஸ்து நித்திய நீரூற்றாய் இருப்பார் என்பதைத் தீர்க்கதரிசனமாக ஏசாயா 49 : 10-ல் சொல்லப்பட்டிருந்தது. தீர்க்கதரிசனங்களை நிறைவேற்ற வந்தேன் என்று இயேசு கிறிஸ்துவும் சொல்லியிருக்கிறார். அது நிறைவேறும் படி யோவான் 4 : 14 -ல் இயேசு கிறிஸ்துவே சொல்கிறார் நான் கொடுக்கும் தண்ணீர் தாகமுண்டாகாது என்பதாக. அது ஒரு மனிதனுக்குள் நித்திய ஜீவ காலமாய் ஊறுகின்ற நீரூற்றாயிருக்கும். இன்று சபையாகிய கிறிஸ்தவர்களின் ஆத்துமா இவ்வாறு கிறிஸ்துவால் போஷிக்கப்படுகிறது. 

"ஜீவத்தண்ணீரின் துரவும்” இன்று இயேசு கிறிஸ்து சபைக்கு ஜீவத்தண்ணீர் துரவாகவும் இருக்கிறார். எரே 2 : 13 -ல் கர்த்தர் தன்னை ஜீவத்தண்ணீர் ஊற்று என்று கூறுகிறார் சகரி 14 : 8 -ல் அந்த ஜீவத்தண்ணீர் தேசங்கள் முழுவதும் செல்வதை வேதம் குறிப்பிடுகிறது. அதேபோல் இன்று இயேசு கிறிஸ்து சபைக்கு ஜீவத்தண்ணீராக இருந்து சபையின் ஆத்துமாவை செழிப்பூட்டுகிறதை யோவான் 4 : 10 -ல் குறிப்பிடுகிறார். இதுவும் தீர்க்கதரிசனம் நிறைவேறுதலை வெளிப் படுத்துகிறது. இன்று சபை விசுவாசத்தின் வழியாய் ரட்சிப்பின் கிணற்றிலிருந்து மகிழ்ச்சியோடு ஜீவத்தண்ணீரை எடுத்து கொணடு; இருக்கிறார்கள் (ஏசாயா 12:3). சபையாகிய கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து அவரிடம் கிட்டிச்சேருகிறப்பொழுது நம் உள்ளத்தில் ஜீவத்தண்ணீர் தருகிறவராக  இருக்கிறார். "வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.” (யோவான் 7 : 38).

"லீபனோனிலிருந்து ஓடிவரும் வாய்க்கால்களும் உண்டாயிருக்கிறது.” தேவன் உலகத்தை உண்டாக்கி ஏதேன் எனும் தோட்டத்தை உண்டாக்கினார். ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி அங்கிருந்து பிரிந்தது. அதின் ஒன்றின் பெயர் ஐபிராத்து (ஆதி 2 : 10,14). பின் லீபனோன் தொடங்கி ஐபிராத்து நதியான பெரிய நதி வரை இஸ்ரவேலருக்கு எல்லையாக கொடுக்கப்பட்டது (யோசுவா 1 : 4). இதை தேவனாகிய கர்த்தர் தாம் உண்டாக்கினார். மேலும் 2இராஜா 3 : 16,17 -ல் கர்த்தர் எலியா மூலம் ஒரு வாய்க்கால்களை வெட்டச் சொல்கிறார். ஏனென்றால் யூதா, இஸ்ரவேல், ஏதோம் ராஜாக்காளின் மிருக ஜீவன்கள் போஷிக்கப்படுவதற்கு வாய்க்கால்கள் இயேசு கிறிஸ்துவினால் சபைக்கு கிடைக்கும் ஆத்தும ஆசீர்வாதத்தையும், மகிழ்ச்சியையும் குறிக்கிறது. (சங் 46 : 4).

அன்பானவர்களே! இயேசு கிறிஸ்து சபையாகிய தனது ஜனங்களின் ஆத்துமாவில் ஜீவ நீரூற்றாகவும், ஜீவத்தண்ணீராகவும், ஜீவ நீரோடையாகவும் இருக்கிறார் என்பதை இந்த வசனம் குறிப்பிடுகிறது.

இந்த போஷிப்பு உங்கள் ஆத்துமாவிற்கு கிடைக்கிறதா?

குறிப்பு வசனம்: வெளி 7: 17, நீதி 5: 16, ஏசா 30: 25




  :   26 Likes

  :   86 Views