உன்னதப்பாட்டு 4 : 13,14
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



உன்னதப்பாட்டு 4 : 13,14

"உன் தோட்டம் மாதளஞ்செடிகளும் அருமையான கனிமரங்களும் மருதோன்றிச் செடிகளும் நளதச்செடிகளும்”

"நளதமும் குங்குமமும் வசம்பும் லவங்கமும் சகலவித தூபவர்க்க மரங்களும் வெள்ளைப்போளச்செடிகளும் சந்தன விருட்சங்களும் சகலவித கந்தவர்க்கச்செடிகளுமுள்ள சிங்காரவனமாயிருக்கிறது.”

இதற்கு முந்தைய வசனத்தில் சபையாகிய கிறிஸ்தவர்களைத் தோட்டம் என்று பார்த்தோம். இந்த வசனத்தில் உன் தோட்டம் என்று ஆரம்பிக்கிறது. அதாவது இது சபையாகிய கிறிஸ்தவர்களைக் குறிப்பிடுகிறது. இந்த வசனத்தில் மொத்தம் பன்னிரண்டு வகையான மரம் செடிகள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது கிறிஸ்துவின் மணவாட்டிகள் ஒவ்வொருவரும் பன்னிரண்டு வகையான கனிகளைக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அதே நேரத்தில் ஒவ்வொருவரும் விதவிதமான தாலந்துகள் பெற்று சபையாகிய தோட்டத்தை செழிப்பூட்டுகிறவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் இந்த வசனம் கூறுகிறது. 

12 வகையான கனிகள்

 ஒன்பது கனி - ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், (கலாத் 5 : 22) சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. (கலாத் 5 : 23). 

மூன்று கனி 

உதடுகளின் கனி - ஆகையால் அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம். (எபி 13 : 15). 

நீதியின் கனி - தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி (பிலி 1 : 10) என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இரட்சிப்பின் கனி - வானங்களே உயர இருந்து சொரியுங்கள்; ஆகாயமண்டலங்கள் நீதியைப்பொழியக்கடவது; பூமி திறவுண்டு இரட்சிப்பின் கனியைத்தந்து நீதியுங்கூட விளைவதாக் கர்த்தராகிய நான் இவைகளை உண்டாக்குகிறேன். (ஏசா 45 : 8).  

மேலும் இது வெளி 22 : 2-ல் சொல்லப்பட்டிருக்கிற பன்னிரண்டு விதமான கனிதரும் ஜீவவிருட்சத்தின் தீர்க்கதரிசன வெளிப்பாட்டு வசனமாக இருக்கிறது. இந்த வசனத்தை பொதுவான அர்த்தத்தில் பார்க்கும் பொழுது 12 கோத்திரங்கள் கொண்டு ஆண்டவர் இஸ்ரவேல் தேசத்தை உருவாக்கினது மற்றும் 12 சீஷர்களை கொண்டு தனது ஊழியத்தை ஆரம்பித்து  இன்று உலகம் முழுவதும் அனேக சீஷர்களை ஆண்டவர் உருவாக்கியிருக்கிறதுக்கு ஒப்பிடப்படுகிறது.

அன்பானவர்களே! இயேசு கிறிஸ்து சபையைப் பார்த்து சொல்கிறார் உங்கள் ஆத்தும தோட்டத்தில் என்னால் கொடுக்கப்படுகிற ஆவியின் கனி காணப்படுகிறது மேலும் நித்திய வாழ்வில் ஜீவ விருட்சத்தின் கனியையும் பெறுவீர்கள் என்று கூறுகிறார். 

உங்கள் ஆத்தும தோட்டத்தில் ஆவிக்குரிய கனிகள் இருக்கிறா?

குறிப்பு வசனம் : பிரசங்கி 2: 5 யோவான் 15: 1-3




  :   26 Likes

  :   88 Views