"உன் நேசம் எவ்வளவு இன்பமாயிருக்கிறது; என் சகோதரியே!என் மணவாளியே! திராட்சரசத்தைப்பார்க்கிலும் உன் நேசம் எவ்வளவுமதுரமாயிருக்கிறது! சகல கந்தவர்க்கங்களைப்பார்க்கிலும் உன் பரிமளதைலங்கள் எவ்வளவு வாசனையாயிருக்கிறது!”
"உன் நேசம் எவ்வளவு இன்பமாயிருக்கிறது; என் சகோதரியே! என் மணவாளியே!” முந்தைய வசனம் கூறியது போல, சபை கிறிஸ்து மீது கொண்டுள்ள அன்பு எவ்வளவு இன்பமாய் இருக்கிறது என்று குறிப்பிடுவதை நாம் பார்க்க முடிகிறது. மத்தேயு 22: 37,38 -ல் "இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக இது முதலாம் பிரதான கற்பனை. “ என்று சபைக்கு கொடுத்திருக்கிற இந்த கட்டளையின்படி, சபை கிறிஸ்துவில் அன்பு கூறுவதை, உன் நேசம் எவ்வளவு இன்பமாய் இருக்கிறது என்று மணவாளனாகிய இயேசு கிறிஸ்து இங்கே கூறுகிறார்.
யோவான் 21 : 15-17-ம் வசனம் வரை நாம் பார்க்கும் போது, மூன்று முறை பேதுருவைப் பார்த்து ஆண்டவர் இந்த கேள்வியைக் கேட்கிறார் "என்னில் நீ அன்பாய் இருக்கிறாயா”, அப்படி கேட்கும் வரை பேதுருவுடைய வாழ்க்கை ஒரு பெரிய சாதிக்கிற அளவுக்கு ஆண்டவரோடு இல்லை. ஆனால் அதன் பிறகு பேதுரு ஆண்டவருக்காக வைராக்கியமாக நின்று, தன் சிலுவையைத் தூக்கி அவர் பின்பாக சென்று, கிறிஸ்துவுக்காக மரித்து, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மீது இருந்த அன்பை நிரூபித்து காட்டியதைப் பார்க்க முடிகிறது. இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை உணர்ந்து, அவர் பின்பாக சிலுவையை எடுத்துக் கொண்டு போகிற சீஷர்களைக் குறித்து அவர் சொல்லுகிற வார்த்தைத்தான், உன் நேசம் எவ்வளவு இன்பமாயிருக்கிறது என்று சந்தோஷத்தோடு இதைக் கூறுகிறார். அதே நேரத்தில் என் சகோதரியே! என் மணவாளியே! என்று நாம் முந்தைய வசனத்திலே பார்த்ததுப்போல மூத்த சகோதரனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு நாம் சகோதரிகளாகவும், பரலோக திட்டத்தின்படி மணவாளனாகிய இயேசுகிறிஸ்துவுக்கு நாம் மனவாளியாகவும் இருப்பதை இந்த வாக்கியம் குறிப்பிடுகிறது.
"திராட்சரசத்தைப்பார்க்கிலும் உன் நேசம் எவ்வளவு மதுரமாயிருக்கிறது! சகல கந்தவர்க்கங்களைப்பார்க்கிலும் உன் பரிமளதைலங்கள் எவ்வளவு வாசனையாயிருக்கிறது!” திராட்சரசத்தைக் குறித்து அநேக காரியங்கள் வேதத்தில் கூறப்பட்டிருக்கிறது. பலி, விருந்து, ஆசீர்வாதம், தியாகம், மகிழ்ச்சியைக் கொடுக்கிற போஜனம், இன்னும் அநேகம். மேலும் இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள திராட்சைரசம் என்பது மேற்கூறிய காரியங்களைக் குறிப்பிட்டாலும் நாம் இங்கே பலியோடு ஒப்பிடுகிறோம் (யாத் 29 : 40-42, எண் 15 : 7-10). ஏனென்றால் இந்த வசனம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பேசுவது, அவருக்கு நாம் கொடுக்கும் (பழைய ஏற்பாட்டில்) திராட்சைரசம் பலியைக் குறிப்பிடுகிறது. இந்த வசனம் தீர்க்கதரிசனமாக கூறுவது என்னவென்றால், 2 தீமேத்தேயு 4: 6 - ல் சொல்லப் பட்டிருப்பதை போல சபை கிறிஸ்துவுக்காக தன்னை பானபலியாக வார்த்தெடுக்கப்படுவதை குறிப்பிடுகிறது. அதாவது கிறிஸ்துவின் சரீரமாகிய சபைக்காக எல்லாவற்றையும் அர்ப்பணிக்கிறோம் என்பதை குறிக்கும். இதை தான் இயேசு கிறிஸ்து திராட்சரசத்தைப்பார்க்கிலும் உன் நேசம் எவ்வளவு மதுரமாயிருக்கிறது என்று குறிப்பிடுகிறார்.
"கந்தவர்க்கம்” அவர் நம்மிலிருந்து வீச வேண்டிய பரிமளதைல வாசனையை எதிர்பார்க்கிறார். பரிமளதைலங்கள் என்பது அபிஷேகத்தைக் குறிக்கின்றது. யாத் 30 : 23, 24, 25 -ல் பார்க்கும்பொழுது அங்கே தேவன் மோசேயின் மூலம் ஒரு கட்டளைக் கொடுக்கின்றார். அதிலே அவர்கள் வெள்ளைப்போளமாக தைலம், ஒலிவ மர எண்ணெய், இலவங்கப்பட்டை இப்படி சேர்த்து யாத் 30 : 25-ம் வசனம் சொல்லுகிறதாவது "பரிமள தைலக்காரன் செய்வதுபோல, கூட்டப்பட்ட பரிமளதைலமாகிய சுத்தமான அபிஷேக தைலத்தை உண்டுபண்ணுவாயாக அது பரிசுத்த அபிஷேக தைலமாயிருக்கக்கடவது.” இந்த பரிமளதைலம் புதிய ஏற்பாட்டில் அபிஷேகத்தைக் குறிக்கின்றது. நம்மிடத்தில் இருக்கும் அந்த அபிஷேகம் என்கின்ற வாசனை நம்மிடத்திலிருந்து புறப்பட்டு, நம் அருகில் இருப்பவர்களுக்கும் அந்த வாசனையைக் கொடுக்கின்றது. அபிஷேகம் பெற்ற மனிதர்களின் மூலமாக மற்றவர்களுடைய வாழ்க்கையில் ஒரு நன்மை அந்த அபிஷேகத்தின் மூலம் கிடைக்கின்றது என்பதை ,து குறிப்பிடுகின்றது. மேலும் நாம் எல்லா இடங்களிலும் கர்த்தரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்த முடியும் (2கொரி 2 : 14) என்பதையும் வேதம் நமக்கு குறிப்பிடுகிறது.
இயேசு கிறிஸ்துவின் மீதான அன்பும், கீழ்ப்படிதலும் தூபத்தை விட கிறிஸ்துவுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. கிறிஸ்து தனது சபையின் மீது தனது சொந்த நீதியைக் கொடுத்து, தனது மணவாட்டியை பரிசுத்தமாக்கி அவர் அதில் மகிழ்ச்சியடைந்தார். வேதம் சொல்கிறது அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது என்று (1யோவான் 4 : 7) லும், எல்லாவற்றையும் விட அன்பே பெரியது என்று 1கொரி 13 : 13 லும் பார்க்கிறோம்.
அன்பானவர்களே! இன்று நம்மிடம் இயேசு கிறிஸ்து எதிர்பார்க்கிறது என்னவென்றால் நாம் உண்மையாக மனப்பூர்வமாக அவரில் அன்பு கூறுகிறோமா? அதுமட்டுமல்லாமல் கர்த்தரை அறிகிற அறிவில் வாழ்கிறோமா? என்றுதான். ஒருவேளை நம் வாழ்வில் தேவனிடத்தில் அன்பு கூறுவதில் குறைவு இருக்குமானால் இன்று மனம் திரும்பி தேவனிடத்தில் அன்பு கூறுங்கள்.
நீங்கள் தேவனிடத்தில் அன்பு கூறுகிறீர்களா?
குறிப்பு வசனம் : உன் 1: 3, உன் 3: 6, மத்தேயு 26: 6-12,ஓசியா 6: 6,சங் 40: 6, எபேசியர் 5: 2
Write a public review