"திராட்சரசத்தால் என்னைத் தேற்றுங்கள், கிச்சிலிப்பழங்களால் என்னை ஆற்றுங்கள்; நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன்.”
இதற்கு முந்தைய வசனங்களைப் பார்க்கும்பொழுது இயேசு கிறிஸ்து தன்னுடைய மகிமையினால் சபையை அலங்கரிக்கிறார். மேலும் அவருடைய அளவற்ற அன்பினால் தகுதியுள்ள வஸ்திரம் நமக்கு அணிவித்து இயேசு ராஜாவின் விருந்துக்கு நம்மை அழைத்துக் கொண்டுபோகிறார். எனவே சபை ஆனந்த இன்பத்தில் ஆச்சரியமாக சொல்லுகின்ற வார்த்தை தான் இந்த வசனம். தகுதியே இல்லாத நம்மை அவர் அழைத்து, அவருடைய கிருபையினாலே இரட்சித்து அவருடைய நீதியின் சால்வையை நமக்கு கொடுத்திருக்கிறார். இதை நினைத்து அவருக்கு எப்பொழுதும் நன்றி உள்ளவர்களாகவும், துதி செலுத்துகிறவர்களாகவும் இருக்க வேண்டும். அவர் நமக்குக் கொடுத்த உன்னத ஆசீர்வாதத்தை நினைத்து, அந்த சந்தோஷத்தை வெளிப்படுத்துகிற ஆச்சரியமான ஒரு வார்த்தையாகும். இது வேதனையோடு சொல்லுகிற வார்தையோ அல்லது சோகமான வார்தைகளோ அல்ல. இது கர்த்தரால் கிடைத்த சந்தோஷத்தை வெளிப்படுத்துகிற ஒரு வார்த்தையாகும்.
"திராட்சரசத்தால் என்னைத் தேற்றுங்கள், கிச்சிலிப்பழங்களால் என்னை ஆற்றுங்கள்". இந்த வசனத்தில் திராட்சரசம் என்பது உலர் திராட்சையை குறிக்கிறது. 1 நாளா 12:40 ,ல் இது மகிழ்ச்சியின் வெளிப்பாடாக சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் ஆவிக்குரிய அர்த்தத்தில் கர்த்தருடைய வார்த்தையோடு இதை நாம் ஓப்பிடலாம். கிச்சிலி மரம் என்பது இயேசு கிறிஸ்துவை குறிக்கும். கிச்சிலிப்பழம் என்பது இயேசு கிறிஸ்துவினால் வெளிப்படும் இரட்சிப்பின் கனியை காட்டுகிறது.
சபை கூறுகிறது, இரட்சிப்பின் கனியை ஒவ்வொரு நாளும் வாழ்க்கையில் பெற்று, கர்த்தருடைய வார்த்தையை கொண்டு, பரிசுத்த ஆவியானவரால் தேற்றப்பட்டு நாங்கள் மகிழ்ச்சியை அடைந்திருக்கிறோம் என்பதாக கூறுகிறார்கள். கிறிஸ்து தனது புதிய ஏற்பாட்டு சபையைத் தேற்றரவாளனாகிய பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு ஆற்றி தேற்றுகிறார் (யோவான் 14 : 16, யோவான் 16 : 13). தேவனோடு இருக்கும் இந்த பாக்கியம் சபையாகிய எங்களுக்கு கிடைத்திருக்கிறது. ஆகையால் எங்கள் மகிழ்ச்சிக்கும், பூரிப்புக்கும் அளவேயில்லை. ஆவி, ஆத்மா, சரீரம் இம்மூன்றுமே தேவனுடைய நேசத்தால் ஆற்றி, தேற்றி என் நேசருடைய அன்பிற்கு தகுதியுள்ளவர்களாக மாற்றப்பட்டிருக்கிறது. தேவனுடைய நேசத்தால் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் இது.
நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன். சந்தோஷத்தை வெளிப்படுத்துகிற ஆச்சரியமான ஒரு வார்த்தையாகும். இதை எப்படி புரிந்து கொள்வது என்றால்,
(1) யோசேப்பு உயிரோடிருக்கிறான், அவன் எகிப்து தேசத்துக்கெல்லாம் அதிபதியாயிருக்கிறான் என்று அவனுக்கு அறிவித்தார்கள். அவன் இருதயம் மூர்ச்சை அடைந்தது; அவன் அவர்களை நம்பவில்லை (ஆதி 45:26). இந்த வசனத்தில் யாக்கோபுக்கு கொடுக்கப்பட்ட ஒரு இன்ப அதிர்ச்சி, நம்பமுடியாத அந்த சந்தோஷத்தை எதிர்மறையாக சித்தரித்து இருக்கிறது. அதே போல் தான் இயேசு கிறிஸ்து நமக்கு கொடுத்திருக்கிற இந்த உன்னத ஆசீர்வாதத்தை நினைத்து மகிழ்ச்சியில் சொல்லப்பட்டிருக்கிறது.
(2) 1 இராஜா 10: 4, 5-ல் சேபாவின் ராஜஸ்திரீ கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கும் நடை மண்டபத்தையும் கண்டபோது அவள் ஆச்சரியத்தால் பிரமை கொண்டாள். இப்படிப்பட்ட பிரமிப்புக்குரிய நம்பமுடியாத ஒரு அனுபவத்தை சபை கிறிஸ்துவில் கண்டு ஆச்சரியப்படுகிறது.
கிறிஸ்துவில் களிகூறுகிறீர்களா?
குறிப்பு வசனம்: சங் 4: 7, சங் 104: 15
Write a public review