உன்னதப்பாட்டு 2 : 4
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



உன்னதப்பாட்டு 2 : 4

"என்னை விருந்துசாலைக்கு அழைத்துக்கொண்டுபோனார்; என்மேல் பறந்த அவருடைய கொடி நேசமே.”

விருந்து சாலை என்பது இனி வரவிருக்கும் காரியத்தை குறிக்கிறது (ஏசாயா 25:6) மேலும் இது ஆட்டுக்குட்டியானவருடைய கல்யாண விருந்தையும் குறிக்கும் (வெளி 19:9). அந்த விருந்து சாலைக்குள் பிரவேசிக்க வேண்டுமானால் மணவாளனால் தெரிந்து கொள்ள பட வேண்டும். கிறிஸ்து தன்னை முன் குறித்து தெரிந்து கொண்டு அழைத்து விருந்து சாலைக்குள் கொண்டு சென்றார் என்பதாக சபை கூறுகிறது. அழைத்துக் கொண்டு போனார் என்பது கடந்த காலத்தை குறிக்கிறது. இதை எப்படி நாம் அறிந்து கொள்வது? தெரிந்து  கொள்ளப்பட்ட சபை, ஏற்கனவே ஆவிக்குரியப்பிரகாரமாக கிறிஸ்துவுடன் இணைந்து  விருந்து சாலைக்குள் பிரவேசித்திருக்கிற நிச்சயத்தை பெற்றிருக்கிறார்.

ராஜாக்கள் தாங்கள் ஏற்பாடு செய்யும் விருந்துக்கு பிரபுக்கள், சேனைத் தலைவர்கள் உயர் பதவியிலிருக்கும் நபர்கள் ஆகியோரைத் தான் விருந்துக்கு அழைப்பார்கள். அதேபோல் இயேசு கிறிஸ்து விருந்து சாலைக்கு நம்மை அழைத்துக் கொண்டு போகிறார் என்றால், தெரிந்துக் கொள்ளப்பட்ட கிறிஸ்தவர்கள் அவருக்கு மிகவும் முக்கியமானவர்கள்.  பொதுவாக நாம் விருந்துக்கு செல்லுகின்ற பொழுது நல்ல வஸ்திரம் அணிந்து தான் செல்வோம். அதேபோல் ராஜாவாகிய இயேசு கிறிஸ்துவின் விருந்துக்கு செல்வதற்கு சபையாகிய கிறிஸ்தவர்கள் ஆவிக்குரிய வஸ்திரம் அணிந்து தகுதியுடையவர்களாக இருக்க வேண்டும். தகுதி இல்லாத வஸ்திரம் அணிந்த கிறிஸ்தவர்கள் விருந்தில் அனுமதிக்கப்படமாட்டார்கள் (மத் 22 : 11,12).

எப்படிப்பட்ட தகுதியுள்ள வஸ்திரம் நமக்குள் காணப்பட வேண்டும்?

1. இரட்சிப்பின் வஸ்திரம் - ஏசாயா 61 : 10

2. நீதியின் வஸ்திரம் - ஏசாயா 61 : 10

3. துதியின் வஸ்திரம் - ஏசாயா 61 : 03

ஆகியவை நமக்குள் காணப்படவேண்டும்.

கிறிஸ்தவர்களாகிய நாம் இப்படிப்பட்ட வஸ்திரம் அணிந்த தகுதியோடு இருக்கிறோமா என்று நம்மை நாமே சோதனை செய்து பார்ப்போம். இல்லையென்றால் ஆயத்தப் படுவோம். வேதத்திலே தன்னுடைய  இளைய மகன் மனம் திரும்பி தன்னிடத்தில் வந்த பொழுது அவனுக்கு உயர்ந்த வஸ்திரத்தை அணிந்து அழகு பார்த்த தகப்பனைப் போல (லூக் 15 : 21,22), இயேசு கிறிஸ்து ன்று நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒருவேளை நம்மில் குறைவுண்டு என்று நாம் உணர்ந்து அவரிடம் இன்று மனம் திரும்புவோமானால், கிறிஸ்து நமக்கு அதே போல உயர்ந்த வஸ்திரத்தை அணிவித்து நம்மை விருந்துக்கு அழைத்து செல்பவராக இருக்கிறார்.

"என்மேல் பறந்த அவருடைய கொடி நேசமே”   இயேசு கிறிஸ்து நமக்கு கொடியாக இருப்பதையும்,  நம் மேல் அவர் வைக்கும் அன்பும், மகிமையும் ஏசாயா 11 : 10 ,ல் சொல்லப்பட்டிருக்கிறது. நேசம் என்கிற கொடியை சபையாகிய என்னை நோக்கி  காண்பிப்பதன் மூலம் நான் அவரிடம் வரும்படி அழைக்கப்பட்டு ஊக்குவிக்கப்படுகிறேன். இயேசு கிறிஸ்துவின் அன்பினாலே, நாம் இந்த தகுதியைப்பெற்று விருந்துசாலைக்கு செல்லும் பாக்கியத்தைப் பெறுகிறோம். 

நீங்கள் விருந்துசாலைக்கு போகும் நம்பிக்கை உள்ளதா?

குறிப்பு வசனம்: சங் 23 : 5, சங் 65 : 4, ஏசாயா 25 : 6, லூக் 14 : 17





  :   28 Likes

  :   103 Views