உன்னதப்பாட்டு 2 : 14
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



உன்னதப்பாட்டு 2 : 14

 "கன்மலையின் வெடிப்புகளிலும் சிகரங்களின் மறைவிடங்களிலும் தங்குகிற என் புறாவே! உன் முகரூபத்தை எனக்குக் காண்பி, உன் சத்தத்தை நான் கேட்கட்டும்; உன் சத்தம் இன்பமும், உன் முகரூபம் அழகுமாயிருக்கிறது என்றார்.”

“கன்மலையின் வெடிப்புகளிலும் சிகரங்களின் மறைவிடங்களிலும் தங்குகிற என் புறாவே!” - புறா கூடு கட்டும் வழக்கமான இடம் அல்லது பாதுகாப்புக்காக ஓய்வு பெறும் இடம் கன்மலை பகுதி (எரே 48 : 28), மேலும் கன்மலை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை குறிக்கும். சிகரம் என்பது கண்மலையோடு தொடர்புடையது அதாவது மலையின் உச்சி பகுதியை குறிக்கும். இவ்வளவு நாள் மறைவிடங்களிலிருந்து அதிகத் துன்பங்கள் மத்தியிலும், கஷ்டத்தின் மத்தியிலும், கிறிஸ்துவுக்காக ஊழியம் செய்து, கிறிஸ்துவை சார்ந்து, கிறிஸ்துவுக்காக சாட்சியாக வாழ்ந்து, இப்பொழுது மணவாளன் இயேசு கிறிஸ்துவிடம் சென்ற சபையை பார்த்து இயேசு கிறிஸ்து கூறுவதாகும், கிறிஸ்து சபையை எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுவித்து (2கொரி 5:2,4), எல்லா ஒடுக்கத்திலிருந்தும் (வெளி 3:10), நெருக்கத்திலிருந்தும் விடுதலையாக்கி, மனிதனின் ஆத்துமாவை மரணத்தின் பிடியிலிருந்தும், பாவத்தின் பிடியிலிருந்தும் விடுதலையாக்குகிறார் (1கொரி 15 : 51-66). உலக வாழ்வில் இருந்து விடுதலைப் பெற்ற மணவாட்டியாகிய சபை பரிசுத்தமும், நீதியுமுள்ளவர்களாய் இப்பொழுது இயேசு கிறிஸ்துவுக்கு முன்பாக நின்று கொண்டிருக்கிறார்கள்.

இப்பொழுது இயேசு கிறிஸ்து சபையைப் பார்த்து சொல்லுகிறார் "உன் முகரூபத்தை எனக்குக் காண்பி,  உன் சத்தத்தை நான் கேட்கட்டும்; உன் சத்தம் இன்பமும், உன் முகரூபம் அழகுமாயிருக்கிறது என்றார்.” நம்முடைய சத்தம் அவருக்கு இன்பமாக இருக்கிறது. நாம் அவரைப் போல மறுரூபமடைவதால் நாமும் அழகாக்கப்படுகிறோம். இந்த மிகப்பெரிய ஆசீர்வாதத்தை நாம் பெற்றுக்கொள்ள அவரைப் போல நாம் மாற்றப்படுகிறோம் (1யோவான் 3 : 2). இந்த  உன்னதமான  அனுபவத்தை நாம்  பெற்றுக் கொள்ள நம்மை அர்ப்பணித்து கிறிஸ்துவுக்குள் பரிசுத்தமாக வாழ்வோம்.

இது சபை எடுத்துக் கொள்ளப்படும் பொழுது நடக்கிற நிகழ்வு. இதன் மூலம் இன்றும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சபையாகிய நம்மில் அவர் எவ்வளவு அன்பாக இருக்கிறார் என்று பார்க்க முடிகிறது. இன்றும் நமது சத்தத்தைக் கேட்க அவர் வாஞ்சையோடு இருக்கிறார். மேலும் நாம் முழுமையாக நமது முகத்தைக் காட்டவும் அவர் நமது முகத்தைப் பார்க்கவும் வாஞ்சையோடு இருக்கிறார் இதை அறிந்து நாம் இன்றே நம் சத்தத்தை அவருக்கு நேராக உயர்த்துவோம். நமது முகத்தை உலகத்திற்கு அல்ல அவருக்கு முழுமையாக நாம் காட்டுவோம் வாருங்கள்.

நம் பாடுகள் எல்லாம் மறைந்து கிறிஸ்துவால் புகழப்படுவோம் என்ற விசுவாசம் இருக்கிறதா?

குறிப்பு வசனம்:  சங் 68: 13, எசேக் 7: 16




  :   26 Likes

  :   115 Views