உன்னதப்பாட்டு 1 : 7
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



உன்னதப்பாட்டு 1 : 7

"என் ஆத்தும நேசரே! உமது மந்தையை எங்கே மேய்த்து, அதை மத்தியானத்தில் எங்கே மடக்குகிறீர்? எனக்குச் சொல்லும்; உமது தோழரின் மந்தைகள் அருகே அலைந்து திரிகிறவளைப்போல நான் இருக்கவேண்டியதென்ன?”

சபை இயேசு கிறிஸ்துவைப் பார்த்து, "என் ஆத்தும நேசரே!” என்று நம்மை உண்மையாய் நேசித்து தம்மைத்தாமே சிலுவையில் தந்த மணவாளனாகிய இயேசுவை நோக்கிச் சொல்லுகிறதான ஒரு காரியம். இயேசு கிறிஸ்து ஒரு "நல்ல மேய்ப்பன்" என்று யோவான் 10 : 14, சங்கீதம் 23 : 1 -2 -ல் பார்க்கிறோம். 

மேய்ப்பனுக்கு மந்தை உண்டு. "உமது மந்தையை எங்கே மேய்த்து,” என்ற இந்த வசனத்தின் கேள்விக்கு பதில் சங்கீதம் 23:2 ,ல்  "அவர் என்னை புல்லுள்ள இடங்களில் மேய்த்து" என்று சொல்லப்பட்டிருக்கிறது. கிறிஸ்துவின் மந்தை எந்த புல்லை மேய்கிறது?  சங்கீதம் 37:3 ,ல்  சொல்லப்பட்டிருக்கிற சத்தியத்தை மேய்ந்துகொள்கிற மந்தைதான் சபை. 

இரட்சிக்கப்பட்ட புறஜாதியார் இயேசுவினிடத்தில் கேட்கிறது என்னவென்றால், என் ஆத்தும நேசரே உமது  மந்தையாகிய சபையை அதை மத்தியானத்தில் எங்கே மடக்குகிறீர்? எனக்குச் சொல்லும் என்ற கேள்வியை வைக்கிறார்கள் இதற்குப் பதில் சங்கீதம் 23: 2 ,ல்  அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார். என்று வசனம் குறிப்பிடுகிறது. மத்தியானம் என்பது வெகுவான வெயிலைக் குறிக்கிறது. அதாவது கடினமான சூழ்நிலையைக் குறிப்பிடுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் எப்படி மந்தையை மேய்க்கிறார், வழிநடத்துகிறார் என்பதாக அமைகிறது. ஏசாயா 25 : 4 -ல் "வெயிலுக்கு நிழலாக இருக்கிறார்" என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது, பாடுகள் எல்லோருக்கும் உண்டு. அதை அனுதினமும் மேற்கொள்ள வேண்டும். இந்த வசனத்தில், வெயில் அல்லது  மத்தியான சூட்டை இவ்வுலகத்தின் பாடுகள் என்று குறிப்பிடலாம். வெயிலில் அலைந்து திரிகிறவர்களுக்குத்தான் நிழலின் அருமைத் தெரியும். அதேபோல் கொடூரமானவர்களின் தீய செயலில் சிக்கி பாடுபடுகிற எளியவர்களுக்குத்தான், தேவனின் அன்பு  "பெலனும் , திடனும் , அடைக்கலமும் , நிழலுமாய்"(ஏசாயா 25 : 4) இருக்கிறதையும்  அவர்களின் பாடுகளிலிருந்து தேவனின் அன்பு வழிகாட்டுகிறது என்றும் புரிந்து ருசிக்க முடியும். 

 "உமது தோழரின் மந்தைகள் அருகே அலைந்து திரிகிறவளைப்போல நான் இருக்கவேண்டியதென்ன?” தோழர் என்பது பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்களைக் குறிக்கும். இதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டுமானால், யோவான் 3 : 29 -ல் தான் இயேசு கிறிஸ்துவின் (மணவாளன்) தோழன் என்று யோவானே தன்னைக் குறிப்பிடுகிறார். அதாவது, இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்திற்கு முன்பு இருந்த பரிசுத்தவான்கள் இயேசுவின் தோழர்கள். இஸ்ரவேலர்கள் இன்றும் இயேசுவை எல்லோரும் அறியவில்லை. அவர் இஸ்ரவேலில் பிறந்து, ஊழியம் செய்த பின்பும் கூட அவரை அவர்களால் அறிய முடியவில்லை.  இன்றும் கிறிஸ்தவர்களாக அநேக பேர் இருந்தும் சத்தியத்தை அறிகிற அறிவிலும், கிறிஸ்துவை அறிகிற அறிவிலும் வளர முடியாமல் அநேகம் பேர் இருக்கிறார்கள். இப்பொழுது சபைக்கு எழும்புகிற கேள்வி என்னவென்றால் இஸ்ரவேலரை போல் உம்மை நாங்கள் கண்டுபிடிக்க முடியாதவர்களை போல இருக்க வேண்டியதென்ன? அதாவது மார்க்கம் தப்பி அலைகிற நட்சத்திரம் போல் நாங்கள் அலைய வேண்டியதென்ன? என்பதாக  கேள்வியை முன் வைக்கிறார்கள். இந்தக் கேள்வி சபையான கிறிஸ்தவர்களுக்கு யேசு கிறிஸ்துவின் மேல் இருக்கும் அன்பையும், எப்படியாவது அவரை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவலையும் வெளிக்காட்டுகிறது. 

விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும் (ரோமர்10:17),


உங்களுக்குள் இப்படிப்பட்ட கேள்வி இருக்கிறதா?

குறிப்பு வசனம் : சங் 116: 1, ஏசாயா 5: 1,   உன் 2: 3





  :   27 Likes

  :   87 Views