உன்னதப்பாட்டு 1 : 6
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



உன்னதப்பாட்டு 1 : 6

"நான் கறுப்பாயிருக்கிறேன் என்று பாராதேயுங்கள்; வெய்யில் என்மேற்பட்டது; என் தாயின் பிள்ளைகள் என்மேல் கோபமாயிருந்து, என்னைத் திராட்சத் தோட்டங்களுக்குக் காவற்காரியாக வைத்தார்கள்;என் சொந்தத் திராட்சத் தோட்டத்தையோ நான் காக்கவில்லை.”

இந்த வசனம், உன் 1 : 5 ஆம் வசனத்தின் தொடராகவும் அதன் விளக்கமாகவும் இருக்கிறது. புறஜாதிலிருந்து இரட்சிக்கப்பட்ட சபை சொல்லுகிறதாவது,  நாங்கள் புறஜாதிதான், கறுப்பாக தான் இருக்கிறோம், எங்களை அந்நியர்கள் என்று பாராதேயுங்கள், ஏனென்றால் ஒரு காலத்தில் நாங்கள் அந்நியர்கள் அல்ல, நாங்களும் தோட்டத்தின் சொந்தக்காரர்களாக இருந்தோம். 

அதாவது இதை நாம் மூன்று எடுத்துக்காட்டுகளுடன் பார்க்கலாம். 

1)  காயீனும், ஆபேலும் தேவன் சிருஷ்டித்த ஆதாம்  ஏவாளின் பிள்ளைகள் என்பதை நாம் அறிவோம். முதலாவதாக, இவர்கள் தோட்டத்தின் சொந்தக்காரர்கள்; ஆனால் காயீன் ஆபேலைக் கொன்ற பிறகு, ஏதேனில் இருந்த பண்படுத்தப்பட்ட இடத்தை விட்டு வெளியேற்றப்படுகிறான். இதற்கு ஆதாரமாக, "இன்று என்னை இந்தத் தேசத்திலிருந்து துரத்திவிடுகிறீர்; நான் உமது சமுகத்துக்கு விலகி மறைந்து, பூமியில் நிலையற்று  அலைகிறவனாயிருப்பேன்"   (ஆதி 4 : 14)  என்றும், "அப்படியே காயீன் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, ஏதேனுக்குக் கிழக்கான நோத் என்னும் தேசத்தில் குடியிருந்தான்."  (ஆதி 4 : 16) என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு வசனங்களும் காயீன் ஏதேனிலிருந்த இடத்தை விட்டு வெளியேறுவதையும் தேவ சமூகத்தை விட்டு விலகுவதையும் காண்பிக்கிறது. இவ்வாறு காயீனும் அவனுடைய சந்ததியாரும் அந்நியர்கள் ஆகிறார்கள். தேவ சந்நிதியை விட்டு விலகுவதால், பரிசுத்தத்தையும் தேவ பிரசன்னத்தையும் இழந்து போகிறார்கள்.  

தேவன் காயீனுக்கு கொடுக்கிற தண்டனை, ஏதேனில் இருந்து வெளியேறுவது மட்டுமின்றி, "நீ சபிக்கப்பட்டிருப்பாய்” (ஆதி. 4 :11) "நீ பூமியில் நிலையற்று அலைகிறவனாய்  இருப்பாய்”  (ஆதி. 4 : 12) என்ற இந்த இரண்டு தண்டனைகளை கர்த்தர் கொடுக்கிறார். இவ்விரண்டையும் புரிந்துகொள்ளுகிற காயீன், "பூமியில் நிலையற்று  அலைகிறவனாயிருப்பான் "(ஆதி 4 : 14) என்று சொல்லுகிறார்.  இவ்வாறு அலைகிறவர்கள் மேல் வெயில்படுகிறது. இதைதான்  "வெய்யில் என்மேல்பட்டது" என்று சொல்லப்பட்டிருக்கிறது. தேவ பிரசன்னத்திலிருந்து வெளியேறினதாலும் வெயில் பட்டதினாலும் கறுப்பாயிருக்கிறோம் கறுப்பாய் பார்க்கப்படுகிறோம் என்பதாகும். 

"என் தாயின் பிள்ளைகள் என்மேல் கோபமாயிருந்து” என்றால் ஆதாமின் மற்ற பிள்ளைகள், காயீன் ஆபேலுக்கு செய்ததைக் குறித்து கேட்கும்பொழுது கோபம் கொள்வார்கள்.  "என்னைத் திராட்சத்தோட்டங்களுக்குக் காவற்காரியாக வைத்தார்கள்; என் சொந்தத் திராட்சத்தோட்டத்தையோ நான் காக்கவில்லை.” ஒரு காலத்தில், ஏதேனில் இருந்த நிலத்தை பண்படுத்தியவன் காயீன். அதை தான் உன்னதப்பாட்டில் அங்கு என்னை தோட்டங்களுக்கு காவல்காரியாக வைத்தார்கள் என்று சொல்லுகிறார். ஆனால் ஆபேலைக் கொன்ற போது அந்த தோட்டத்தையோ நான் காக்கவில்லை என்று சொல்லுகிறார். அந்த தோட்டத்தில் இருந்த ஆபேலைக் கொன்றதினால், அதில் இருந்த ஒரு நபரை இழந்துவிட்டதால், அந்த தோட்டத்தைக் காக்கவில்லை என்றும், தன் மனம் என்ற தோட்டத்தை பரிசுத்தமாய் காக்காமல் கோபத்துக்கும், எரிச்சலுக்கும் வழி கொடுத்து ஆபேலைக் கொன்ற பாவத்தில் விழுந்து விடுகிறதினால் அங்கிருந்து காயீன் துரத்தப்பட்டு, அந்நியனாக புறஜாதியாக மாறிவிட்டான் என்பதை நாம் பார்க்கிறோம் .

2) "மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகின" (ஆதி. 6:5) போது  "நோவாவுக்கோ கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது.”  (ஆதி   6 : 8) என்பதைப் பார்க்கிறோம். இவர்களிலிருந்து யார் அந்நியர்களாக்கப்பட்டார்கள் என்று பார்க்கும்பொழுது, முதலாவதாக, கிருபை கிடைத்த நோவாவின் மகனாகிய காம் சபிக்கப்பட்டதால், அவருடைய சந்ததி அடிமைகளாகவும் புறஜாதியாகவும் மாறினார்கள். "கானானுக்குத் தகப்பனாகிய காம்" (ஆதி 9 : 22)  செய்த தவறினால், காமின் தகப்பனாகிய நோவா, "கானான் சபிக்கப்பட்டவன்” (ஆதி 9 : 25) என்றும், "சேமுக்கும் யாப்பேத்துக்கும் கானான் அடிமையாயிருப்பான்” (ஆதி 9 : 26-27) என்றும் சபிக்கிறார். இவ்வாறாக, காமின் வம்சத்தார் புறஜாதியாரானது மட்டுமன்றி, அடிமைகளாகவும் ஆகிறார்கள். இங்கு "தன் சகோதரரிடத்தில் அடிமைகளுக்கு அடிமையாயிருப்பான்” (ஆதி 9 : 25) என்றும் சபிக்கிறார். அடிமைகள் மட்டும் அல்ல, அடிமைகளுக்கு அடிமை என்று சொல்கிறார். காமின் தவறு, தண்டனையாக அவருடைய சந்ததியை, அடிமைகளுக்கு அடிமைகளாக்குகிறது. இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை மற்றும் ஒரு மிகப்பெரிய பாடம் என்னவென்றால், நம் சந்ததி சபிக்கப்படாதபடிக்கு நம் செயல்கள் இருக்க நாம் ஜாக்கிரதையாய் இருப்போம் இருக்க வேண்டும்.

காம், சேமைப்போலவும், யாப்பேத்தைப்போலவும், சரிசம நிலையில் நோவாவின் தோட்டத்தில் முதலில் சொந்தக்காரனாக இருந்தான். ஆனால், தன்னுடைய செயல்களை காத்துக் கொள்ளாததினால், காமை சபிக்கவில்லை என்றாலும் அவர் மகனும் அவன் சந்ததியும் சபிக்கப்படுகிறார்கள். அந்த சம பங்கை இழந்து விடுகிறதைப் பார்க்கிறோம். ஆகையால் அவரின் சந்ததி அந்நியர்களாகவும், தனக்கென்று  இருந்த தோட்டத்தைக் காக்காமல் போனவர்களாகவும் இருக்கிறார்கள்.

3) தேவன் ஆபிரகாமை அழைக்கும்பொழுது, "ஜனங்கள் பூமியின் மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள்”  (ஆதி 11 : 4)  "தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடமாட்டாது என்று" (ஆதி 11 : 6) மனிதர்கள் அப்படி நினைக்க "கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்” (ஆதி 11 : 8)  என்று பார்க்கிறோம். அப்பொழுது ஆபிரகாமையும் (ஆதி 12 : 1-5) அவர் சந்நிதியிலிருந்து  ஸ்ரவேலின் 12 கோத்திரங்களையும் தேவன் தெரிந்து கொண்டார். அவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் புறஜாதிகள் ஆனார்கள்.

இந்த சந்ததியிலிருந்து வந்த புறஜாதியார் சொல்கிறார்கள், அதாவது ஒரு காலத்தில் நம்முடைய முன்னோர்கள் புறஜாதியாக இல்லாமல், தேவ தோட்டத்தின் பிள்ளைகளாக இருந்தார்கள் என்பதை ந்த வசனம் தீர்க்கத்தரிசனமாக சொல்கின்றது. தங்கள் முன்னோர்கள் தங்கள் தோட்டத்தைக் காக்கத் தவறினதால், அவர்களது சந்ததிகள் அனைவரும் புறஜாதிகளானார்கள்.  புறஜாதியாக மாறினதினால், இன்று இந்த உலகத்தில் அனேக புறஜாதிகளைப் பார்க்கிறோம். நாங்களும் அப்படிப்பட்ட புறஜாதிகள் தான். அதாவது சொந்த தோட்டத்திற்குரிய உரிமையை நாங்கள் இழந்து விட்டோம். முன்பு நாங்கள் பாலைவன வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தோம். ஆனால் இன்று இயேசு கிறிஸ்துவின் கிருபையினாலும், அவர் சிந்தின  இரத்தத்தினாலும் நாங்கள் இரட்சிக்கப்பட்டு தேவனுடைய பிரசன்னத்தில் இழுக்கப்பட்டிருக்கிறோம். கறுப்பாக இருந்தாலும் அல்லது புறஜாதியாக இருந்தாலும், அவரால் அழகாக மாற்றப்பட்டு இரட்சிப்பு அடைந்திருக்கிறோம் என்று சபை மகிழ்ச்சியாக சொல்கிறது.

நீங்கள் இயேசு கிறிஸ்துவால் பெற்ற இரட்சிப்பை உங்கள் வாழ்வில் காத்துக்கொள்கிறீர்களா?

குறிப்பு வசனம் : ரூத் 1: 19-21, மத் 18: 10,  யோபு 30: 30, எரே 8: 20-21,  புலம்பல் 4: 8




  :   25 Likes

  :   98 Views