உன்னதப்பாட்டு 1 : 4
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



உன்னதப்பாட்டு 1 : 4

"என்னை இழுத்துக்கொள்ளும், உமக்குப் பின்னே ஓடி வருவோம்; ராஜா என்னைத் தமது அறைகளில் அழைத்துக் கொண்டுவந்தார்; நாங்கள் உமக்குள் களிகூர்ந்து மகிழுவோம்; திராட்சரசத்தைப் பார்க்கிலும் உமது நேசத்தை நினைப்போம்; உத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள்.”

என்னை இழுத்துக்கொள்ளும், உமக்குப் பின்னே ஓடி வருவோம்  என்ற முதல் வாக்கியத்திற்கு "கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு."  (எபே 2 : 8) என்ற வசனம் விளக்குகிறது. பிதாவினுடய கிருபையை நாம் பெற்றால் மட்டுமே அவருடையவராக நாம் மாற முடியும். அதாவது இந்த தெய்வீக அன்பை அடையக்கூடிய நிலைமையில் மனிதனாகிய நாம் இல்லை என்றும், அது நமக்கு மிகவும் உயரமான தூரத்தில் இருப்பதால், அதை நாம் பெற்றுக்கொள்ள முடியாது என்பதையும், நம்முடைய பாவங்களும் எண்ணங்களும் தேவனிடத்தில் போவதற்கு கிட்டிச் சேர்வதற்குத் தடையாய் இருக்கிறது என்றும் நாம் உணர்ந்திருக்கிறோம். இந்த நிலைமையில் இருந்து என்னை இழுத்துக் கொள்ளும் கர்த்தாவே என்று கெஞ்சிக் கேட்கும்போது, தேவ கிருபையினாலே தேவன் இழுத்துக்கொண்டு இரட்சிக்கப்பட்டப் பிறகு அவருடைய சீடர்களாக மாறுகிறோம். "என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்." (யோவான் 6 : 44) என்று இயேசுவானவர் சொல்லுகிறார். தேவன் இழுத்துக்கொள்ளாவிட்டால், நாம் மீட்கப்பட மாட்டோம், நமக்கு மீட்பும் கிடையாது. தேவனுக்கு சித்தமானவர்களை மட்டும் அவர் இழுத்துக்கொள்கிறார். எப்படி இழுத்துக் கொள்கிறார்? அவருடைய அன்பின் கயிறுகளால் இழுக்கிறார். ஓசியா 11: 4-ல்  "மனுஷரைக் கட்டி இழுக்கிற அன்பின் கயிறுகளால் நான் அவர்களை இழுத்தேன்" என்று சொல்லப்பட்டிருக்கிறது.

நீங்கள் தேவ பிள்ளைகளாகிற ஆச்சரியமான அனுபவத்தை இதுவரை பெறவில்லை என்றால், நீங்கள் மணவாளனாகிய இயேசுவைப் பார்த்து, ஆண்டவரே என்னை இழுத்துக் கொள்ளும் என்று கேளுங்கள். நீங்கள் தேவனுடைய பிள்ளைகளாய் இருந்தால், பெலவீனத்திலும் தொடந்து ஓடுகிறவர்களாக இருக்க வேண்டும். "ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது.” (மத் 26 : 41) என்று சொல்லியிருப்பதுப் போல, நம் ஆவி உற்சாகமாய் தான் ருக்கிறது; ஆனால் மாம்சம் வேறுவிதமாக ருக்கிறது. நாம் அவர் பின்னே ஓட விரும்புகிறோம், ஆனால் அதற்குரியபெலன் இல்லை, அந்த பெலனை அவரே நமக்கு தர வேண்டும். தேவனே, நான் உம் பின்னே ஓடுவதற்கான வல்லமையையும், பெலனையும் தர வேண்டுகிறேன் என்று கேளுங்கள். என்னை ஒவ்வொரு நாளும் புதுப்பித்து இழுத்துக் கொள்ளும் என்று சொல்லுங்கள். நீங்கள் சென்றடைய முடியாத இடத்திற்கு உங்களை அவர் இழுத்துக் கொள்ளுவார். நீங்கள் நினைத்தாலும் முயற்சித்தாலும் செல்ல முடியாத        இடம் அது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.  நாம் உதவியற்ற நிலையில் இருப்பதால் அவ்வாறு கேட்கிறோம்.

"பின்னே ஓடிவருவோம்” என்பது இயேசு கிறிஸ்துவுக்கு பின்செல்வது அதாவது சீஷர்களாக கிறிஸ்து காண்பிக்கும் வழியில் பின்செல்லுதலைக் குறிக்கிறது. சபை ஆண்டவரை நோக்கி, ஆண்டவரே உம்முடைய கிருபையினாலே நீர் என்னை இழுத்துக்கொள்ளும். நாங்கள் உம் பின்னே சீஷர்களாக ஓடிவருவோம் என்பதாகச் சொல்லுகிறது. அது மட்டுமன்றி,   "இயேசு கிறிஸ்து எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.”  (லூக் 9: 23) என்று சொல்லியிருக்கிறார். தேவன் ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கத்தை வைத்திருக்கிறார்.  கிறிஸ்துவின் சீஷனாகவும், சீசியாகவும் மாற விரும்புகிறவர்கள் அந்த நோக்கத்தை அறிந்து அதனுடன் கூட வருகிற பாடுகளை உணர்ந்து, தேவ சித்தத்தின்படி முன் செல்ல வேண்டும். தேவனுடைய சித்தத்தை செய்கிறவர்களை எதிர்த்து சாத்தான் போராடுவான். எத்தனை பாடுகள் நம் வழியே வந்தாலும், தேவனை நோக்கி ஓடுவோம் என்றும், கிறிஸ்து  நமக்கு தந்த கடமையாகிய சிலுவையை எடுத்துக்கொண்டு ஓடுவோம் என்றும், திடனாய் அவருடைய வழியில் எந்த சூழ்நிலையிலும் அவரைப்  பின்பற்றுவோம் என்றும், சபை எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகும் (வெளி 14 : 4) பின்பற்றுவோம் என்றும் சபை (மணவாட்டி) சொல்வதாக இந்த  வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

"இராஜா என்னைத் தமது அறைகளில் அழைத்துக் கொண்டுவந்தார்” என்று வாசிக்கிறோம். அவருடைய சீஷர்களாக மாறினப் பிறகு அவருடைய பிள்ளைகளாகிய நமக்கு, இயேசு ராஜாவினுடைய சுதந்திரப்பங்கு நமக்கு உண்டு. ஆகவே நாம் அவரால் அவருடைய அறைகளில் அதாவது அறைகள் என்று சொல்லும்பொழுது அவரது கூடாரத்திற்குள் நாம் போக அனுமதிக்கப் படுகிறது மட்டுமன்றி, அவரே நம்மை அழைத்துக்கொண்டு போகிறார். அதாவது அவருக்குள் நாம் இணைக்கப்படுகிறோம் என்ற பொருளை இது கொடுக்கிறது. அவருடைய பிரசன்னம் நிறைந்த அவருடைய கூடாரத்தை பற்றிய தகவல் இரகசியமாகவே இருக்கிறது. "உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்.” (சங் 91 : 1) தேவனுடைய நிழலில் தங்குகிறவர்களாகவும் அவருடைய பாதுகாப்பில் இருக்கிறவர்களாகவும் இருப்போம். இப்படி அவருடைய நிழலில் நாம் தங்குகிறப்பொழுது நமக்கு அடைக்கலமும், கோட்டையுமாக இருக்கிறார். நாம் சபையிலே சடங்காச்சாரங்களை விட்டு விட்டு, தேவனிடத்தில் தனிப்பட்ட உறவு கொண்டு, உண்மையான மகிழ்ச்சியைப்  பெற்றுக் கொள்வோமானால், தேவன் நம்முடன் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறார் என்றும் நாம் தேவனுடன் எவ்வளவு நெருக்கமாய் இருக்கிறோம் என்றும் தெரிந்துக்கொள்ள முடியும். இந்த விதமான உறவு விசுவாசிகளுக்குள்ளே இருக்கிறதா என்ற கேள்வி எழும்ப வேண்டியது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.

தேவனோடு உள்ள நெருங்கின உறவு பெலப்படும்போது, "நாங்கள் உமக்குள் களிகூர்ந்து” உம் பிரசனத்தைப் பார்த்தும் உணர்ந்தும் உம்முடைய நேசத்தையும் புரிந்து சபையாக உமக்குள் களிகூறுகிறோம். அவரால் இழுக்கப்பட்டு அவருடைய கூடாரத்திற்குள், செட்டைக்குள் நாம் செல்லுகின்றபொழுது நமக்குள் ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சி எப்பொழுதுமே உண்டாகும். இப்படியாக சபை அவருடைய ரட்சிப்பிலும் , அவருடைய சாட்சிகளின் வழிகளிலும் களிகூருகிறதை நாம் பார்க்கிறோம். (சங்கீதம் 13: 5 நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய ரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்.   சங்கீதம் 119:14. திரளான செல்வத்தில் களிகூருவதுபோல, நான் உமது சாட்சிகளின் வழியில் களிகூருகிறேன்.)

"திராட்சரசத்தைப் பார்க்கிலும் உமது நேசத்தை நினைப்போம்”  இதை நாம் முதலாம் வசனத்தில் பார்த்தோம். அநேகர்  தேவனை மறந்து மதுவை அதிகம் நேசிப்பதைப் பார்க்கிறோம். தங்களுடைய வேலையைச் செய்ய தன்னுடைய வாழ்க்கையில் வருகின்ற பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு மதுபானம் மிகவும் அவசியம் என்று நினைக்கிறார்கள். மதுபானத்தைக் குடிப்பதின் மூலம் அவர்களது பிரச்சனைகளைக் குறைத்து விடலாம் அல்லது சமாளித்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். அதற்கு மாறாக அவர்களது பிரச்சனைகளை அவர்களே அதிகரித்துக் கொள்ளுகிறார்கள். தேவனுடைய பிள்ளைகளுக்கோ மதுவின்மேல் அல்ல, தேவனுடைய நேசத்தின் மேல் நம்பிக்கை இருக்க வேண்டும். தேவன் நம்மை நேசிக்கிறார் என்ற எண்ணம் எப்போழுதும் அவர்களுடைய  மனதில் இருக்க வேண்டும்.

தேவனுடைய அன்பு "கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்பு கூர்ந்தது போல, நீங்களும் அன்பிலே நடந்து கொள்ளுங்கள்." (எபே 5 : 2) என்று வழிகாட்டுகிறார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையிலே அறையப்பட்டு, ஒப்புக்கொடுக்கப்பட்டு நமக்காக அவர் காட்டின அன்பு, அந்த நேசம், இந்த உலகம் கொடுக்கின்ற அந்த மகிழ்ச்சியைவிட  மிகப்பெரிய ஒரு சந்தோஷத்தை நமக்கு கொடுக்கிறது. அதை நாம் ஒவ்வொரு நாளும் நினைத்து நன்றி கூறுகிறவர்களாக இருக்க வேண்டும். இதைத்தான் திராட்சரசத்தைப் பார்க்கிலும் உமது நேசத்தை நினைப்போம் என்று சொல்லப்படுகிறது. 

"உத்தமர்கள் உம்மை நேசிக்கின்றார்கள்.”  முந்தின வசனத்தில் கன்னியர்கள் உம்மை நேசிக்கிறார்கள் என்று பார்த்தோம். இந்த வசனத்தில் உத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. யார் உத்தமர்கள்?  கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிறவர்கள் (சங்கீதம் 119: 1), நீடிய சாந்தமுள்ளவன், தன் மனதை அடக்குகிறவன்  உத்தமன் (நீதிமொழிகள் 16:32), பொறுமையுள்ளவன் உத்தமன் (பிரசங்கி 7:8), கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்.(2 கொரிந்தியர் 10:18) இவர்கள் தான் உத்தமர்கள் என்று வேதம் கூறுகிறது.

 நமக்கு கொடுக்கப்பட்டுள்ள பரிசுத்த ஆவியானவரின் அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டு இருக்கிறது. தேவ அன்பை ருசித்தவர்கள் தேவனை நேசிக்கிறார்கள். நீதிமான்கள் அவராலே மீட்கப்பட்டு அவருடைய பிள்ளைகளாக அவருடைய கூடாரத்திற்குள் வசித்துக் கொண்டிருக்கின்ற ஒவ்வொரு நீதிமானும் இயேசுவின் சிலுவை மரணத்தை நினைத்து அந்த சிலுவையின் ஆசீர்வாதத்தைப் பெற்று நாம் பாவத்திற்கு மரித்து நீதிக்கு உயிர்த்தெழுந்திருக்கிற ஒவ்வொரு நீதிமான்களும் ஒவ்வொரு நாளும் மணவாளனாகிய கிறிஸ்துவை நேசிக்கின்றவர்களாக இந்தப் பூமியிலே காணப்பட வேண்டும்.

இன்று நீங்கள் இயேசு கிறிஸ்துவின் அன்பை அனுபவிக்கிறீர்களா?

குறிப்பு வசனம் : சங் 73: 28, எரேமியா 31: 3, ஓசியா 11: 4, யோவான் 6: 37,44, யோவான்12: 32




  :   31 Likes

  :   102 Views