உன்னதப்பாட்டு 1:2
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



உன்னதப்பாட்டு 1:2

"அவர் தமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவாராக. உமது நேசம் திராட்சரசத்தைப் பார்க்கிலும் இன்பமானது."

இந்த வசனத்தை நாம் அறிந்து கொள்வதற்கு முதலாவதாக இதில் இருக்கும் இரண்டு வாக்கியங்களையும் பிரித்து, முதலில்  "அவர் தமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவாராக" என்பதைப் பார்ப்போம். அவர் வாயின் முத்தங்கள் என்பது இயேசு கிறிஸ்துவின் உணர்வு பூர்வமான  வார்த்தையைக் குறிக்கிறது. பொதுவாக முத்தம் என்பது அன்பின் வெளியீடு. தன் மணவாட்டியோடு உள்ள அன்பின் வெளிப்பாட்டை இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மணவாளனாகிய  இயேசு கிறிஸ்து  தன் மணவாட்டியாகிய திருச்சபையோடுக் கூடிய அந்த அன்பின் வெளியீடு அவருடைய வார்த்தையின் வடிவில் உதடுகளின் வழியாக வெளிப்படுகிறது. அதை கவிதை மொழியில் சொல்லும்பொழுது முத்தமாக அவருடைய வார்த்தையை வெளிப்படுத்தி மெருகேற்றியுள்ளார் சாலொமோன்.

சபை சொல்லுகிறதாவது, இயேசுவே உம்மால் எங்களுக்கு கிடைத்த ஆசிவாதம் உம்முடைய வார்த்தையாகிய முத்தம் அந்த வார்த்தை, "அது மையினாலல்ல, ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினாலும்; கற்பலகைகளிலல்ல, இருதயங்களாகிய சதையான பலகைகளிலேயும் எழுதப்பட்டிருக்கிறது." (2கொரி 3 : 3) என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதன்படி அவர் வார்த்தையாகிய (முத்தம்), ஆவியானவரால் மணவாட்டியின் இருதயப் பலகையில் எழுதப்படுகிறது. மணவாட்டியாக எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறவர்களுக்குரிய உணர்வுப்பூர்வமான வார்த்தைகள் இந்த உன்னதப்பாட்டிலுள்ள வார்த்தைகள்.

இந்த வசனத்திலுள்ள இரண்டாம் வாக்கியம், "உமது நேசம்  திராட்சரசத்தைப் பார்க்கிலும் இன்பமானது". என்பதாகும் அந்நாட்களில் திராட்சரசம் பரிமாறப்படுவது மிகவும் பெரிய பணக்காரர்களின் வீடுகளில் தான் அந்தக் காலக்கட்டத்தில் விருந்து மிகவும் மேன்மையானதாக சுருதப்பட்டது. மேலும் கல்யாண வீட்டில் கொடுக்கப்பட்டதென்றால், அது அந்த வீட்டில் உள்ளோரை உயர்த்திக காட்டுவதாக இருக்கும் உலக ரீதியாக, திராட்சரசம் இருதயத்திற்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கிறது. இந்த திராட்சரசம் உலக சந்தோஷத்தைக் குறிப்பிடுகிறது. அவருடைய வார்த்தையினால் நமக்கு  வெளிப்படுத்தப்பட்டிருக்கிற தேவ அன்பும் நேசமும் திராட்சரசத்தைப் பார்க்கிலும் மேன்மையானதாக இருக்கிறது. அந்த நேசம் தேவ வசனத்தின் மூலமாக நமக்குக் கிடைக்கிறது. அதேப்போல் உம்முடைய வார்த்தை என் நாவுக்கு இனிமையானவைகள் என்று பார்க்கிறோம். "உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள், என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும். " (சங் 119:103) கர்த்தருடைய நேசம், பாசம், அன்பு இவைகளை வெளிப்படுத்துகிற அவருடைய வார்த்தை, திராட்சரசத்தைப் பார்க்கிலும் மேன்மையாகவும், இன்பமாகவும், இனிமையானதாகவும், தேனிலும் மதுரமுள்ளதாகவும் கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

இவ்விரண்டு வாக்கியங்களும் சேர்ந்தவாறு ஆண்டவருடைய வார்த்தை நமக்கு சொல்கிறது என்னவென்றால், வானத்தையும் பூமியையும், சகல சிருஷ்டிப்புகளையும் உண்டாக்கிய அவருடைய வாயின் வார்த்தை மனுக்குலத்திற்கு சமாதானத்தையும், அன்பையும் வெளிப்படுத்துகிறது. இயேசு கிறிஸ்து தம்முடைய வல்லமை உள்ள வார்த்தையின் (வேத வசனம்) மூலமாய் நம்மைத் தொடர்பு கொள்கிறார். நாம் அவரோடு கூட தனிப்பட்ட உறவு வைத்துக் கொள்ளும் போது (ஜெபம்) இயேசு மனிதனுடைய இருதயத்தோடு சமாதானமான, அன்பான வார்த்தைகளைப் பேசித் தேற்றுகிறார். "சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. " (யோவான் 14 : 27) இல் சொல்லியிருப்பதுப் போல மணவாளனாகிய இயேசு கிறிஸ்து மணவாட்டிக்குரிய அன்பை அவருடைய வார்த்தைகளினால் வெளிக்காட்டி, உலகம் தருகின்ற சந்தோஷத்தை அல்ல, மெய்யான ஒரு சமாதானத்தை சபையாகிய நமக்கு வேத புத்தகத்தில் உள்ள வார்த்தைகளினால் தந்திருக்கின்றார்.

இந்த கடைசிக் காலக்கட்டத்தில், பல உபத்திரவங்களுக்கு நடுவே இயேசுவை விசுவாசிக்கிற தேவப் பிள்ளைகளுக்கு உபத்திரவத்தை மேற்க்கொள்ள உலகம் தராத சமாதானத்தை அவர் தந்திருக்கிறார். மனமுடைந்த நிலையில் அல்லது சமாதானமற்ற நிலையில் அல்லது உபத்திரவத்தின் மத்தியில் இருக்கிற ஒரு நபருக்கு அன்பாக கூறப்படுகிற வார்த்தைகள் எல்லாவற்றையும்  விட மதுரமுள்ளதாய்  இருக்கும். முத்தமிடுகின்றது  போன்ற அன்பின் வெளிப்பாட்டாக  இருக்கும். அவர்  மணவாட்டியாகிய சபையை  உலகப் பாடுகளின் மத்தியில்  உருவாக்கிக் கொண்டிருக்கிறார். அதில் மாவாட்டியாக தகுதியுள்ளவர்களுக்கு தமது அன்பின் வார்த்தையை முத்தங்களாகத் தந்துக்கொண்டே இருக்கிறார். அது மணவாட்டியாகப் போகிற சபைக்கு உலக உபத்திரவத்திலிருந்து பெறுகிற ஆறுதலாகவும், திராட்சரசத்தை விடவும் இன்பமானதாக இருக்கிறது. இது சபைக்குக் கிடைத்திருக்கின்ற ஒரு மிகப்பெரிய ஆசீர்வாதம்.

கர்த்தருடைய வார்த்தையை மறந்து விடாதீர்கள்

குறிப்பு வசனம் : ஆதி 27: 26, 27, சங் 2: 12, லூக்கா 15:20





  :   24 Likes

  :   104 Views