உன்னதப்பாட்டு 1 : 12
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



உன்னதப்பாட்டு 1 : 12

"இராஜா தமது பந்தியிலிருக்குந்தனையும் என்னுடைய நளததைலம் தன் வாசனையை வீசும்.”

இந்த வசனம் சங்கீதம் 23: 5 இன் வெளிப்பாட்டு வசனம்.

"இராஜா தமது பந்தியிலிருக்குந்தனையும்”  இராஜா என்பது இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறது. "பந்தியிலிருக்குந்தனையும்” என்பது உயர்நிலை ஐக்கியத்தைக் காட்டுகிறது. இப்பாடல் இயேசு கிறிஸ்துவுக்கும், சபைக்கும் உள்ள ஐக்கியத்தை வெளிப்படுத்துகிறது. மேலும் இயேசு கிறிஸ்து தனது மணவாட்டியாகிய சபைக்கு கொடுக்கும் அங்கீகாரத்தை குறிக்கும். கிறிஸ்து தனது ஜனங்களை தன்னோடு சேர்த்து தனது பந்தியில் அவர் உட்காருவதற்கு அனுமதி அளித்து அழகு பார்க்கிறார். ஒருவருக்கு நாம் விருந்து சாப்பாடு கொடுக்கிறோம் என்றால், அவரை நாம் முழுமையான அன்போடு ஏற்றிருக்கிறோம், அவருக்கும் நமக்கும் நல்ல ஒரு ஐக்கியம் இருக்கிறது என்று அர்த்தம். எல்லோரையும் கூப்பிட்டு நாம் விருந்து சாப்பாடு கொடுக்க மாட்டோம். அதேபோல் இந்த ஆசீர்வாதத்தை எல்லா விசுவாசிகளும் பெறுகிறார்களா? இல்லை. வெளி 3 : 20 -ல் யார் ஒருவர் உண்மையாக தன்னுடைய இருதயத்தில் இயேசுவுக்கு இடம் கொடுக்கிறார்களோ அவர்களோடு தான் அவர் வந்து பந்தி அமர்கிறார். 

இயேசுவோடு கூட பந்தியில் அமரும் மிகப்பெரிய பாக்கியத்தை சபை இன்று பெற்றிருக்கிறது. சங் 23 : 5 - ல்  "நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது". மேலும் திருச்சபைகளில் திருவிருந்து ஆராதனை நேரம் மிக உன்னதமான ஒரு நேரம் (1 கொரி 10 : 16).  உங்கள் வாழ்க்கையிலே அது ஒரு வெறும் சடங்காக இருக்கும் என்றால் அதில் எந்த ஒரு பயனும் இல்லை. ஒவ்வொரு முறையும் திருவிருந்து ஆராதனையில் நீங்கள் கலந்து கொள்ளும்பொழுது இயேசுவின் சிலுவை மரணத்தை நினைத்து உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றிகளை ஏறெடுக்கிறீர்களா? 

மேலும் கர்த்தருடைய பந்தியில் கொடுக்கப்படுகிற ஆவிக்குரிய அர்த்தம் என்னவென்றால் தேவ சித்தத்தை செய்து முடிப்பது. (யோவான் 4 : 34). இயேசு கிறிஸ்து கூறுகிறார்; பிதாவின் சித்தத்தை செய்து முடிப்பதே என்னுடைய போஜனமென்று கூறுகிறார். இன்று, அவருடைய பந்தியில் சேர்ந்திருக்கிற நாம்; தேவ சித்தத்தை செய்து முடிக்க பிரயாசப்படுவோம்.

என்னுடைய நளததைலம் தன் வாசனையை வீசும். நளததைலம் எண்ணெயோடு தொடர்புடையது. சங் 23 : 5 - ல்  "நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.” என்று வேதம் கூறுகிறது. அப்படியானால் சபை சொல்லுகிறதாவது; என்னுடைய அபிஷேகம், பரிசுத்தம் நான் கிறிஸ்துவோடு இருக்கிற பொழுது  வாசனை வீசுகிறதாக நிரம்பி வழிகிறது என்று கூறுகிறார்கள். அவரோடு நாம் ஐக்கியப்படும் பொழுது, நாம் நறுமணம் வீசுகிறவர்களாகவும் மற்றவர்களுக்கு பயனுள்ளவர்களாகவும் கிறிஸ்துவின் அன்பை பறைசாற்றுகிறவர்களாகவும் மாறுகிறோம். இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை நினைத்து, பாவமன்னிப்பைப் பெற்றுக்கொண்டு அவரோடு ஐக்கியப்பட்டு திருவிருந்து பந்தியில் பங்கு பெறுவோமானால், நாம் ராஜாவோடு பந்தி இருந்து நறுமணம் வீசுகிறவர்களாக இருப்போம்.

இயேசு கிறிஸ்துவினால் உங்கள் வாழ்வில் நறுமணம் வீசுகிறதா?

குறிப்பு வசனம் : சங் 45: 1, மத் 22: 11, மத் 25: 34, மத் 22: 4




  :   24 Likes

  :   104 Views