Sermons

வாழ்வின் நோக்கத்தை அறிந்து கொள்வது

ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சியம் (Ambition) இருக்கும், அதாவது நம்முடைய ஆவிக்குரிய விதத்தில் சொன்னால் விஷன் (vision) இருக்கும். லட்சியம், உன்னுடைய எதிர்காலத் திட்டம் எப்படி அமையப்போகிறது என்பது தெரியாது, அது நம்முடைய ஆசையின் பேரில் நாம் ஏற்படுத்திக் கொள்வது. லட்சியம் என்பது எதையாவது சாதிக்க வேண்டும் என்ற வலுவான ஆசை, லட்சியம் பெரும்பாலும் சுயமாக இயக்கப்படும், பூமிக்குரிய ஆசையாக சித்தரிக்கப்படுகிறது.

விஷன் என்பது தரிசனம்.  ஞானத்துடன் எதிர்காலத்தை சிந்திக்க அல்லது திட்டமிடும் திறன், நமக்கு கர்த்தரால் கொடுக்கப்பட்ட தரிசனம். அது அப்படியே நம்முடைய எதிர்கால வாழ்க்கையில் நிறைவேறும். தரிசனம் என்கிறது காணாததை நம்புகிறது. ஒவ்வொரு தேவனுடைய பிள்ளைக்கும் ஒரு தரிசனம் கண்டிப்பாக இருக்க வேண்டும். விசுவாசம் என்பது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. தரிசனம் கிறிஸ்துவின் நோக்கத்திற்கு உதவுகிறது (அப்போஸ்தலர் 26:19). தரிசனம் வாழ்க்கையையும் திசையையும் கொண்டுவருகிறது.

இயேசு பூமியில் இருந்தபோது, அவருடைய வாழ்க்கையை நாம் மிகவும் உன்னிப்பாகக் கவனித்தால், இயேசு தனது இலக்கை அறிந்திருந்தார் என்பதும், அவர் செய்த அனைத்தும் அந்த இலக்கை நோக்கி, மனிதனின் மீட்பை நோக்கிச் சென்றது என்பதும் தெளிவாகிறது!

ஈசாக்கு, கர்த்தரின் தரிசனம், ஆனால் இஸ்மவேல் ஆபிராமின் மற்றும் சாராவின் லட்சியம். கர்த்தர் நமக்கு தனிப்பட்ட முறையில் அல்லது பரிசுத்த ஆவியின் உதவியால் அவரது வார்த்தையில் வெளிப்படுத்திய தரிசனத்தில் நமது நோக்கம் காணப்படுகிறது. நமக்கான கர்த்தரின் தரிசனத்தில் வேரூன்றும்போது லட்சியம் சிறந்தது.

1 கொரிந்தியர் 9:26-ல், பவுல் தனது கிறிஸ்தவ வாழ்க்கையை ஒரு தடகள வீரனின் இலக்குடன் ஒப்பிடுகிறார். "ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன். என்று அவர் கூறுகிறார், அதாவது தனது ஊழியத்திலும் ஆவிக்குரிய வாழ்க்கையிலும் தெளிவான குறிக்கோளுடன், நேரத்தை வீணாக்காமல் செயல்படுகிறார். பவுல் நோக்கமில்லாமல் ஓடவில்லை, ஒவ்வொரு அடியிலும் ஒரு இலக்கு உள்ளது.

காற்றில் குத்துச்சண்டை போடுபவரைப் போல (நிழல் சண்டை) இல்லாமல், சரியாக எதிரியைத் தாக்கும் வீரனைப் போல, கவனமாக ஆவிக்குரிய ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கிறார். நாமும் நம்முடைய விசுவாச வாழ்க்கையில் தெளிவான நோக்கத்துடனும், கவனத்துடனும் செயல்பட வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது. ‘பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்” (பிலிப்பியர் 3:  13, 14).

  • தேவன் நமக்கு ஒரு அழைப்பை கொடுத்திருக்கிறார்.

  • தேவன் நமக்கென்று ஒரு வேலையை நியமித்து வைத்திருக்கிறார்.

  • வெற்றிகரமாக செய்யும் பொழுது நமக்கென்று ஒரு வெகுமதி (reward) காத்துக்கொண்டு இருக்கிறது. 

“நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன்” (எரேமியா 29: 11) என்று கர்த்தர் சொல்லுகிறார். இந்த உலகத்தில் பிறந்த   ஒவ்வொரு மனிதனுக்கும் தேவன் ஏதோ ஒரு வாழ்வின் திட்டத்தையும், நோக்கத்தையும் மற்றும் தரிசனத்தையும் வைத்திருக்கிறார் அதை   நிறைவேற்றுவதும் நிறைவேற்றாமல் போவதும் நம்முடைய கையில் தான் இருக்கு.

நம்முடைய வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கும், சாதனையாளர்களாக   மாறுவதற்கும், சகாப்தத்தை ஏற்படுத்துவதற்கும் முதல் படி என்ன? நம்முடைய வாழ்வின் நோக்கத்தை அறிந்து கொள்வது, வாழ்வின் நோக்கத்தை அறிந்து கொள்வதுதான் நாம் வெற்றியை நோக்கி எடுத்து வைக்கும் முதல்படி.   வேதத்தில்   ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும்   ஆண்டவர் வித்தியாசமான ஒரு நோக்கத்தை வைத்திருந்தார்.

  1. மோசே இஸ்ரவேல் புத்திரராகிய என்   ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படிக்கு உன்னை பார்வோனின் இடத்திற்கு   அனுப்புவேன் என்று மோசேக்கு ஆண்டவர் ஒரு திட்டம்   வைத்திருந்தார். என்ன திட்டம்?   எகிப்தில் இருக்கிற இஸ்ரவேல் மக்களை, பார்வோனின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து வெளியே கொண்டு வர வேண்டும்.

  2. யோசுவாவுக்கு ஒரு திட்டம் வைத்து இருந்தார். நிலத்தை பங்கிடும் திட்டம். இந்த ஜனங்களுக்கு முன்பாக கடந்து போய் தேசத்தை அவர்களுக்கு பங்கிட்டுக் கொடுப்பான்.

  3. தாவீதுக்கு ஒரு திட்டம் வைத்திருந்தார். என் தாசனாகிய தாவீது என் ஜனமாகிய இஸ்ரவேலரை பெலிஸ்தியர் கையிலிருந்தும் எல்லா சத்துருக்களின் கையிலிருந்தும் நீங்கலாக்கி இரட்சிப்பான். தாவீதினுடைய திட்டம் இஸ்ரவேல் ஜனங்களை எதிரிகளுடைய கையிலிருந்து காப்பாற்ற வேண்டும்.

  4. சாலமோனுக்கு ஒரு திட்டம் வைத்திருந்தார்.  அவன் என் நாமத்திற்கு   என்று ஒரு ஆலயத்தை கட்டுவான்.

  5. நெகேமியாவுக்கு ஒரு திட்டம் வைத்திருந்தார் அலங்கம் கட்டும் அந்த திட்டத்தை தேவன் நெகேமியாவினுடைய இருதயத்தில்   வைத்திருந்தார்.

  6. இயேசு கிறிஸ்துவும் இந்த உலகத்தில் வந்தபோது ஒரு நோக்கத்தோடு   வந்தார். 

முதலாவது, தேவன் நம்முடைய வாழ்க்கையில் ஒரு திட்டத்தை   வைத்திருக்கிறார்.

இரண்டாவது, ஒவ்வொருவருடைய நோக்கமும் தனித்தன்மை வாய்ந்தது.  ஒருவருடைய திட்டம் போல மற்றவருடைய திட்டம் இருக்காது.

மூன்றாவது, எல்லா நோக்கமும், இவர்கள் செய்த எல்லா காரியமுமே   தேவ ராஜ்ஜியம் கட்டும் பணியாக இருந்தது.

கதை:

ஒரு வில்வித்தை வீரர் பல நாட்களாக முயற்சி செய்தும், அவர், விடுகிற அம்பு எல்லாமே வேறு இடங்களில் விழுகிறதே தவிற சரியாக நடுவில் இருக்கிற அந்த வட்டத்தில் படவில்லை, அவர் ரொம்ப முயற்சி செய்து வாழ்க்கையே வெறுத்து போய்விட்டார், அதற்குப்பிறகு அவர் என்ன செய்தார் என்றால்,  வில் அம்பு எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு இனிமேல் நமக்கு இந்த வில்வித்தை வராது என்கிற ஒரு முடிவில், விரக்தியில் வரும் பொழுது, விரக்தியடைந்த இளம் வில்வித்தை வீரர், ஒரு குறிப்பிட்ட கிராமம் வரும் பொழுது ஒவ்வொரு மரத்திலும் இலக்கின் மையத்தில் ஒரு அம்பு சரியாக மாட்டப்பட்டிருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார், அதில் வெளிப்படையான இலக்குகள் எதுவும் இல்லை, அம்புகளைச் சுற்றி மட்டுமே குறிகள் வரையப்பட்டன.

அவர் வில்வித்தை வீரரான வயதான, பலவீனமான தாத்தாவைக் கண்டுபிடித்து, இந்த நம்பமுடியாத திறமையைக் கற்பிக்கச் சொன்னார். முதியவர் புன்னகைத்து, அந்த இளைஞனின் வில்லையும் அம்பையும் எடுத்து, அதை ஒரு மரத்தின் மீது எய்தார். அம்பு மையத்திலிருந்து வெகு தொலைவில் விழுந்தது. பின்னர் முதியவர் மரத்திற்கு நடந்து சென்று, ஒரு துண்டை எடுத்து, அம்பைச் சுற்றி சரியான ஒரு 'பல்ஸ் ஐ' (Bullseye) வட்டத்தை வரைந்தார்.

இந்த கதையில் இரண்டு விதமான ஆட்கள் பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். ஒரு விதமான ஆட்கள் தேவன் தந்த வாழ்வின் நோக்கத்தை, தரிசனத்தை மையமாகக் கொண்டு, அந்த இலக்கை நோக்கி அம்பு விடுகிற பயணிக்கிற ஆட்கள்.   இன்னொரு விதமான ஆட்கள், அம்பு எங்கே   போகிறதோ, வெள்ளம் எங்கே அடித்துக்கொண்டு போகிறதோ, அதுபோல வாழ்க்கை அவர்களை எங்கு அழைத்துக்கொண்டு போகிறதோ அங்கே அதை சுற்றி தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்கிற இன்னொரு விதமான ஆட்கள்.

இன்றைக்கு எப்படிப்பட்ட ஜனங்கள் இருக்கிறார்கள்:

இந்த   உலகத்துல ஒரு மூன்று விதங்களாக நாம் மக்களை பிரிக்கலாம்,

1) அழுத்தத்தால் இயக்கப்படுகிறது (pressure Driven): இவர்கள் செயல்படுவதற்கு வெளியில் இருந்து ஒரு அழுத்தம் (External pressure) இவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும். பள்ளியில் ஆசிரியர் Assignment கொடுத்து, ஒரு குறிப்பிட்ட தேதியை சொல்லி இந்த தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று கூறியிருந்தாலும், அநேக நேரங்கள் கிடைக்கும், ஆனாலும் அதை செய்ய மாட்டார்கள். கடைசி நாட்களுக்கு முந்தின நாள் எல்லாவற்றையும் அவசரமாக செய்து முடிப்பார்கள், ஏனென்றால் ஒரு External pressure அவர்களுக்கு அந்த தேதியின் மூலம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

2) மக்களால் இயக்கப்படுகிறது (People Driven): இவர்களுக்குப் பின்னால்   இருந்து ஒரு நபர் இவர்களை செயல்படுத்துவார்கள். இல்லையென்றால், இவர்கள் செயல்பட மாட்டார்கள். இந்த வேலைக்குப்போ, இந்த வேலையை செய், இந்த படிப்பை படி என்று யாராவது பின்னால் இருந்து சொல்லிக் கொண்டே இருக்கணும். பின்னால் இருந்து சொல்கிற குரல் கேட்கிற வரைக்கும் இவர்கள் வேலை செய்வார்கள். எப்பொழுது, அந்த குரல் மறைகிறதோ, உடனே அவர்கள் செய்கிற வேலையை நிறுத்தி விடுவார்கள். இன்றைக்குரிய வாலிபர்கள் கொஞ்சம் யோசிங்க… உங்கள் பெற்றோரோ, உடன் பிறந்தவர்களோ, அல்லது உங்கள் நண்பர்களோ சொன்னால்தான் நீங்கள் செயல்படுகிறீர்களா?

3) நோக்கம் சார்ந்தது (Purpose Driven): இவர்களுக்குள் தேவன் கொடுத்த ஒரு தரிசனம், நோக்கம், திட்டம், எதிர்கால இலக்கு இருக்கும். அந்த நோக்கத்தை   மையமாகக் கொண்டு ஒவ்வொரு நாளும் இவர்கள் செயல்படுவார்கள்.   தானாகவே செயல்படக்கூடிய தன்மை படைத்தவர்களாக இவங்க   இருக்கிறாங்க. நம்ம எப்படிப்பட்ட ஊந்து சக்தியினால   ஊந்தப்பட்டு செயல்படுகிறோம் என்பதை நாம   யோசிச்சு பார்ப்போம்.

நம்முடைய வாழ்க்கையில் இரண்டு தெரிவு (choice):

உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் ஆண்டவருக்காக அர்ப்பணித்து, உங்கள் வாழ்க்கையில் அவர் வைத்திருக்கிற திட்டத்தை ஏற்றுக்கொண்டு, அவருடைய அழைப்பிற்கு இணங்கி அவர் உங்களுக்காக வைத்திருக்கிற அந்த இலக்கை நோக்கி ஓடி, அவர் நியமித்து வைத்திருக்கிற அந்த பந்தய பொருளை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

தேவன் உங்களுக்கென்று வைத்திருக்கிற திட்டத்தை நீங்கள் புறக்கணித்தால், அதின் மூலம் உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் இழந்து போகிறதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

Loading...