"உன் நாபி திராட்சரசம் நிறைந்த வட்டக்கலசம்போலிருக்கிறது; உன் வயிறு லீலி புஷ்பங்கள் சூழ்ந்த கோதுமை அம்பாரம் போலிருக்கிறது.”
இந்த வசனத்தில், "நாபி” என்பது தொப்புளைக் குறிக்கும். இது தாய்க்கும், சேய்க்கும் உள்ள உறவைக் குறிக்கிறது. இதன் மூலமாய் குழந்தைக்கு எல்லா ஊட்டச்சத்தும் கிடைக்கிறது. இந்த அடையாளத்தை எந்த மனிதனாலும் மறைக்க முடியாது. அது வாழ்வின் கடைசி மட்டும் வருகிறது. நாபியைக் குறித்து நீதி 3 : 7,8 -ல் போதகமாகிய உபதேசம் நாபிற்கு ஆரோக்கியம் என்றும், எசே 16 : 4 -ல் உறவு முறையையும் குறிப்பிடுகிறது.
"நாபி திராட்சரசம் நிறைந்த வட்ட கலசத்திற்கு” ஒப்பிடப்படுகிறது. ஏசா 65 : 8 இல் "ஒரு திராட்சக்குலையில் இரசம் காணப்படும்போது அதிலே ஆசீர்வாதம் உண்டென்று" திராட்சரசத்தை ஆசீர்வாதத்திற்கு ஒப்பிடப்படுகிறதை நாம் பார்க்கலாம். மேலும் திராட்சரசம் கர்த்தர் கொடுக்கும் நன்மையாகவும் அதினால் ஜனங்கள் மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள் என்று எரே 31 : 12 ,ல் கூறப்படுகிறது. "கர்த்தர் அருளும், கோதுமை, திராட்சரசம், என்பவைகளாகிய இந்த நன்மைகளுக்காக ஓடிவருவார்கள்” என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இயேசு கிறிஸ்து சபையைப் பார்த்து, உங்களுக்கும் எனக்கும் இருக்கிற உறவு எவ்வாறு இருக்கிறது என்றால் தாய்க்கும் பிள்ளைக்கும் இருக்கிற தொப்புள் உறவைப் போல் வலிமையாக இருக்கிறது என்று சொல்கிறார். அதனால் நீங்கள் என்னிடமிருந்து நன்மை பெற்றவர்களாகவும், சந்தோஷத்தையும், சமாதானத்தையும், ஆசீர்வாதத்தையும் பெற்றவர்களாகவும் இருக்கிறீர்கள். இது கிறிஸ்துவுக்கும், சபைக்குமான ஒரு அன்பின் உறவு செய்தியை வெளிப்படுத்துகிறது.
"உன் வயிறு லீலி புஷ்பங்கள் சூழ்ந்த கோதுமை அம்பாரம்போலிருக்கிறது” என்று சொல்லப்பட்டிருப்பதற்கு, முதலாவதாக, மனிதன் உட்கொள்கிற உணவு வயிற்றுப் பகுதிக்கு சென்று அதனுடைய சத்து ரத்தத்தோடு கலந்து மனிதனுக்கு பலனையும், ஆரோக்கியத்தையும், நன்மையையும் கொடுக்கிறது. லீலி புஷ்பம் பள்ளத்தாக்குளில் காணப்படும் ஒரு சிறு வகை பூ. கோதுமை அம்பாரம் என்பது கோதுமையை குவித்து வைப்பதை குறிக்கிறது. கோதுமை இஸ்ரவேல் ஜனங்களுக்கு மிகவும் ஒரு முக்கியமான உணவுப் பொருளாகும். இது செழிப்பு, அறுவடை, சுபிட்ஷத்தைக் காட்டுகிறது. கோதுமை உள்ள தேசம் ஒரு செழிப்பான, நல்ல தேசமாக கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்ட தேசமாக வேதம் கூறுகிறது. "உன் தேவனாகிய கர்த்தர் உன்னை நல்ல தேசத்திலே பிரவேசிக்கப்பண்ணுகிறார். அது கோதுமையும் வாற்கோதுமையும் திராட்சச்செடிகளும் தேனுமுள்ள தேசம்” என்று உபாகமம் 8 : 7, 8 இல் சொல்லப்படுகிறது. மேலும் "உச்சிதமான கோதுமையினால் அவர்களைப் போஷிப்பார்." என்று சங்கீதம் 81 : 16 இல் சொல்லப்பட்டிருப்பது போல, கர்த்தரை நம்பினவர்களை அவர் என்றென்றைக்கும் போஷிக்கிறவராய் இருக்கிறார் என்று குறிக்கிறது. அதேபோல் கோதுமை கர்த்தர் கொடுக்கும் நன்மையாக, "கர்த்தர் அருளும் கோதுமை, நன்மைகளுக்காக ஓடிவருவார்கள்" என்று எரே 31 : 12 இல் கூறப்படுகிறது. அதினால் ஜனங்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து சபையாகிய மணவாட்டியை கோதுமையோடு ஒப்பிட்டுப் பார்க்கிறார் "கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன்." என்று மத் 13 : 30-ல் சொல்கிறார். சபையிலே உணவு என்பது கர்த்தருடைய வார்த்தையைக் குறிக்கிறது. இந்த ஆவிக்குரிய மன்னாவை சபையாருக்கு உணவாக அருளப்படுகிறது. "அவனவன் வாயின் பலனால் அவனவன் வயிறு நிரம்பும்” என்று நீதி 18 : 20 -ல் வயிறு ஒரு ஆசீர்வாதத்தின் பலனை நமக்குக் காட்டுகிறது.
இந்த வசனத்தின் மூலம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, சபை, நல்ல ஆவிக்குரிய மன்னாவாகிய சத்தியத்தை உட்கொண்டு, கோதுமை குவியல் போல் அது நம்முடைய வாழ்விலே பெருகி வாசனை வீசுகின்றதாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார். நாம் உணவை உட்கொண்டு எப்படி பெலத்தைப் பெறுகிறோமோ, அதேப்போல் ஆவிக்குரிய மன்னாவாகிய சத்திய வசனத்தை நாம் அனுதினம் பெற்றுக் கொண்டு ஆவிக்குரிய பெலனையும், வளர்ச்சியையும் நாம் அடைய வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார். இயேசு கிறிஸ்துவில், நீங்கள் நல்ல ஐக்கியத்தில் இருக்கும் பொழுது நீங்கள் ஆசீர்வாதத்தையும், போஷிப்பையும், நன்மையையும் பெற்று உங்கள் ஆவிக்குரிய பெலன் லீலி புஷ்பங்கள் சூழ்ந்திருக்கிற பள்ளத்தாக்கைப் போலவும், கோதுமை குவியலைப் போலவும் பெருகி உங்கள் வாழ்வில் வாசனை வீசுகிறவர்களாக காணப்படுவீர்கள் என்பதாக ஆண்டவர் நம்மைப் பார்த்து மகிழ்ச்சியோடு கூறுகிறார்.
உங்களில் ஆசீர்வாதம் மற்றும் செழிப்பு உள்ளதா?
குறிப்பு வசனம் : நீதி 3 : 8, எசே 16 : 4, நீதி 18 : 20