Sermons

நற்செய்தி அறிவிக்கும் நாள்

இந்நாள் நற்செய்தி அறிவிக்கும் நாள்:

“பின்பு அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: நாம் செய்கிறது நியாயமல்ல, இந்நாள் நற்செய்தி அறிவிக்கும் நாள்; நாம் மவுனமாயிருந்து, பொழுது விடியுமட்டும் காத்திருந்தால் குற்றம் நம்மேல் சுமரும்; இப்போதும் நாம் போய் ராஜாவின் அரமனையாருக்கு இதை அறிவிப்போம் வாருங்கள் என்றார்கள்(2 இராஜாக்கள் 7:9).

குஷ்டரோகிகளான நாலு பேர் பசியின் காரணமாக பட்டணத்திற்குள் செல்ல பிரயாசப்பட்டார்கள். ஏற்கனவே, எலிசாவின் தீர்க்கதரிசனத்தின் படி ஆண்டவர் சீரியரின் படைகளை அங்கிருந்து துரத்தி விட்டார். அந்தக் குஷ்டரோகிகள் பாளையத்திற்குள் வந்தபொழுது அவர்களுக்கு வெள்ளி, பொண், புசிக்க தேவையான ஆகாரம் எல்லாம் கூடாரத்தில் கிடைத்தது. அந்த சூழலில் அவர்களுக்குள் ஒரு எண்ணம் ஏற்பட்டது. நாம் மட்டும் இந்த நன்மையை அனுபவிக்க கூடாது. நாம் இந்த நற்செய்தியை மற்றவர்களுக்கு கூற வேண்டும் என்ற உணர்வு அவர்களுக்குள் ஏற்பட்டது. இந்த நாளில் நாம் மௌனமாக இருக்கக் கூடாது அது குற்றம் என்பதை அவர்கள் அறிந்து வைத்திருந்தார்கள். பின் அந்த நற்செய்தியை அறிவிக்க போவோம் வாருங்கள் என்று கூறி அவர்கள் அந்த நற்செய்தியை இஸ்ரவேல் ஜனங்களுக்கு அறிவித்தார்கள்.

அதேபோல் இன்று நாமும் தேவனுடைய வார்த்தையை புசித்து ருசித்த ஒவ்வொருவரும் அந்த நற்செய்தியை மற்றவர்களுக்கு அறிவிக்க முன்வர வேண்டும். அநேகர் கர்த்தருடைய வார்த்தையை ருசிக்க முடியாத ஒரு ஆத்தும பசியில் இருந்து கொண்டிருக்கிறார்கள். 

1) முதலாவது கர்த்தருடைய வார்த்தையை கேட்க வேண்டும்:

2 இராஜாக்கள் 7:1 இல் எலிசா கூறுகிறார், கர்த்தருடைய வார்த்தையை கேளுங்கள் என்றும், என்ன நடக்கப் போகிறது என்றும் கூறுகிறார். இன்று நற்செய்தி அறிவிக்க ஆயத்தமாக இருக்கிறவர்கள் முதலாவது கர்த்தருடைய வார்த்தையை கேட்க வேண்டும். கர்த்தர் அந்த பகுதிக்கு என்ன சொல்ல விரும்புகிறார் என்பதை வசனத்தின் மூலமோ தரிசனத்தின் மூலமோ நாம் கர்த்தரிடத்திலிருந்து முதலாவது பெற்றிருக்க வேண்டும். அதற்கு நாம் தேவ சமூகத்திலே காத்திருந்து அதை பெறுகிற ஒரு அனுபவம் வேண்டும். தாவீதுடைய வாழ்க்கையிலே அவர் எதிரிகளை எதிர்த்து போருக்கு செல்கிறபொழுது, ஒவ்வொன்றும் கர்த்தரிடத்தில் விசாரித்து அவர் செயல்பட்டார் (1 நாளாகமம் 14:10), அவருடைய காரியம் ஜெயமாக முடிந்தது.

 2) கர்த்தர் - பாதையை செவ்வை பண்ணுகிறவர்:

2 இராஜாக்கள் 7:5-7 இல் இவர்கள் சீரியரிடைய ராணுவத்திற்கு போக எழுந்திருந்து அங்கே சென்ற பொழுது அங்கே ஒருவரும் இல்லை என்று வேதம் கூறுகிறது. அதாவது, பசிக்கு காரணமானவர்கள் துன்பப்படுத்தினவர்கள் அங்கே இருக்கக் கூடாமல் ஓடிவிட்டார்கள். இது கர்த்தரால் உண்டாயிற்று கர்த்தரே இந்த காரியங்களை சீரியப் படைகளை அங்கு இருந்து விரட்டுகிறதை ஏழாவது வசனத்தில் நாம் காண்கிறோம். இன்று கோணலானவர்களை செவ்வையாக்குகிற ஆண்டவர் நம் முன்பாக செல்லுகிறப் பொழுது நமக்காக அவர் யுத்தம் பண்ணுகிறப் பொழுது அங்கே இப்படிப்பட்ட பிசாசின் கிரியைகள் எதுவாக இருந்தாலும் அந்த இடத்தை விட்டு ஓடிவிடும். நீங்கள் அந்தப் பகுதிக்குப் போகும் பொழுது அங்கே ஒருவரும் இருக்க மாட்டார்கள். கர்த்தருடைய நற்செய்தியை அறிவிப்பதற்கு நமக்கு புதிய பாதைகளை திறந்து, ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களை ஆண்டவர் அங்கே செய்கிறார்.

சீரிய படைகள் அங்கிருந்து ஓடி போனதால், அவர்கள் ஆதிக்கத்தில் இருந்த உணவுப் பொருட்கள் கிடைத்தது, அன்று அது அவர்களுக்கு ஒரு நற்செய்தி. அதேபோல், இன்று பிசாசின் ஆதிக்கம் ஒரு பகுதியில் இருந்து விலகிப் போனவுடன் மனிதர்களின் ஆத்ம பசி தீர்க்கப்படும். நமக்கு இது ஒரு நற்செய்தி. எதிராளியை ஜெயம் கொண்டு இந்த நற்செய்தியை ஜனங்களுக்கு அறிவிப்போம்.

3) நற்செய்தி பணிக்கு யாரையும் கர்த்தர் பயன்படுத்த முடியும்.

இந்த பகுதியிலே ஆண்டவர் நான்கு குஷ்டரோகிகளைக் கொண்டு அந்த இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஒரு நற்செய்தியை அறிவிக்கிறதை பார்க்கிறோம். எனக்கு ஊழியம் செய்ய தெரியாது எனக்கு அந்த திறமை இல்லை என்று எந்த ஒரு கிறிஸ்தவர்களும் சொல்லக்கூடாது சொல்லவும் முடியாது. மத்தேயு 25:14-30 வசனத்தின் படி பார்க்கும் பொழுது கிறிஸ்து ஐந்து தாலந்து, இரண்டு தாலந்து, ஒரு தாலந்து என்று கொடுத்திருக்கிறார்.   பூஜ்ஜியம் என்பது அங்கு இல்லை. அப்படியானால் நம்முடைய கர்த்தர் எல்லோருக்கும் ஏதோ ஒரு திறமைகளை கொடுத்திருக்கிறார். ஆகையால் இங்கே நாம் சாக்கு போக்கு சொல்ல முடியாது.

4 நற்செய்தி ஜனங்களை உயிர்ப்பிக்கும்

ஆதியாகமம் 45:27 இல் யோசேப்பு உயிரோடு இருக்கிறான் என்ற நற்செய்தி யாக்கோபு கேட்ட பொழுது அவருடைய ஆவி உயிர்ப்பித்தது என்று வேதம் சொல்லுகிறது. ஆம் இன்றும் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உயிரோடு இருக்கிறார் என்கிற நற்செய்தியை ஜனங்கள் கேட்டு விசுவாசிக்கிற பொழுது ஜனங்களின் ஆத்மா உயிர்பிக்கப்படுகிறது. ஆவி உற்சாகமடைகிறது, இதுதான் எழுப்புதல். நற்செய்தியை கேட்டு ஜனங்கள் விசுவாசிக்கிறப் பொழுது அவர்கள் ஆத்துமா, ஆவிலே உண்டாகிற மாற்றங்கள் தான் எழுப்புதல். இந்த எழுப்புதல் வேண்டுமென்று விரும்புகிறவர்கள் இன்று இந்த நற்செய்தியை அறிவிக்க முன் வாருங்கள். இயேசு இன்றைக்கும் உயிரோடு இருக்கிறார் நம்மை இரட்சிக்கிறார். கவலையோடும், கண்ணீரோடும், நம்பிக்கை இல்லாமையும் இருக்கிற ஜனங்களை எழுப்புவதற்கு ஒரே வழி இயேசு கிறிஸ்துவினுடைய நற்செய்தி மட்டுமே.

முடிவு:

இராஜாக்கள் காலத்தில் பிரபுக்கள் அல்லது தளபதிகள் நற்செய்திகள் கொண்டு போனால் அவர்களுக்கு தக்க பரிசு வழங்கப்படும். அதேபோல தான் இன்று நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ராஜாதி ராஜாவாக இருக்கிறார். நாம் இன்றைக்கு நற்செய்திகளைக் கொண்டு போகிற பொழுது இந்த உலகத்தில் என்ன கிடைக்கும் என்பது எனக்கு தெரியாது. ஆனால் ஒரு நாள் ராஜாவிடம் இருந்து உங்களுக்கு தக்க பரிசு உண்டு என்பது நிச்சயம்.

நற்செய்தி அறிவிப்போம் வாருங்கள்!!!

Loading...