Sermons

கர்த்தருடைய வார்த்தையின் மகத்துவம்

“என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள் (ஓசியா 8:12).

முன்னுரை: (Introduction)

அநேக தேவ மனிதர்கள் வேதாகம மொழிபெயர்ப்புக்காக தங்கள் வாழ்கையை அர்பணித்திருந்தனர். தேவ மனிதர்களின் தியாகம் மற்றும் விலை கிரையத்தின் பலனே இன்றைக்கு நம்முடைய கையில் வேத புத்தகம் காணப்படுகிறது. ”வேதாகமமானது நம் இருதயத்தின் எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளிக்கும் ஒரு தேன் கூடு” என்று பேராசிரியர் ஒருவர் கூறுகிறார். தேவனுடைய வார்த்தையானது செழிப்படைந்து, கிறிஸ்துவைக் குறித்து அறிகிற அறிவின் வாசனையை உலகமெங்கும் தொடர்ந்து பரப்புகிறதாக இருக்கிறது.

ஓசியா தீர்க்கதரிசியின் காலத்தில், இஸ்ரவேலர்கள் தேவனை மறந்து தேவனுக்கும் அவருடைய வார்த்தைகளுக்கும் உண்மையற்றவர்களாக இருந்தனர். அவர்கள் விக்கிரகாராதனைக்கு எதிரான எல்லா எச்சரிக்கைகள் மற்றும் கட்டளைகளையும் மீறி, அந்நிய தெய்வங்களை வணங்க ஆரம்பித்தனர். தேவன் அவர்களை மனம் திரும்பவும் தன்னிடம் மறுபடியும் திரும்பும்படி அழைத்தார். ஆனால் இஸ்ரவேலர்களோ, தேவனுடைய வார்த்தைகளுக்கு உரிய மரியாதையைக் கொடுக்காமல், “அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள்.” இதினிமித்தமாக, தேசத்தில் நிலையான ஆட்சி மற்றும் ஆசீர்வாதம் இல்லாமல் போனது. முடிவில், அவர்கள் அசீரியர்களுடைய ஆட்சியின் கீழ் வந்தனர்.

தேவனுடைய மகத்தான அன்பு, அவருடைய இரட்சிப்பின் திட்டம், எல்லா மனிதருக்குமான தேவ சித்தம், மற்றும் மனித வரலாற்றில் தேவன் தொடர்ந்து இடைபட்டதைப் பற்றி வேதாகமம் நமக்குக் கூறுகிறது. தேவன் தம் ஜனங்களுக்குச் செய்த பெரிய காரியங்களைப் பற்றிக் கூறி, அவருடைய மகத்தான போதனைகள், அன்பு, மற்றும் வாக்குத்தத்தங்களை நமக்கு நினைவுபடுத்துகிறது.

தேவனுடைய வார்த்தை உலகத்தை உண்டாக்கியது, அற்புத அடையாளங்களை செய்தது, லாசருவை உயிரோடு எழுப்பியது, ஜனங்களை சுகப்படுத்தியது, ஜனங்களுக்கு ஆலோசனைக் கூறியது. தேவனுடைய கற்பனைகளை நோக்கும் போது நாம் வெட்கப்படுவதில்லை (சங்கீதம் 119:6). தேவனுடைய கட்டளைகளை ஆராயும் போது விசாலம் உண்டாகிறது (சங்கீதம் 119:45). ஆண்டவராகிய இயேசு தன்னுடைய பன்னிரெண்டாம் வயதிலே வேத வசனத்தில் நிறைந்து காணப்பட்டார். வார்த்தையினாலே வனாந்திரத்தில் சாத்தானின் சோதனைகளை ஜெயித்தார்.

கோலியத்தை சந்திக்கும் முன்பாக தன் பையை கூழாங்கற்களை கொண்டு தாவீது நிரப்பியது போல நாமும் சவால்களை சந்திப்பதற்கு வார்த்தையினால் நிரம்பி இருக்கவேண்டும்.

  • ஒவ்வொரு முறையும் வேதத்தை தியானிக்கும் பொழுது, புது அனுபவம் புதிய வெளிப்பாடு கிடைக்கிறது.

  • மனிதனுக்கு பயனுள்ளதாக இருக்க கர்த்தர் வேதத்தை கொடுத்தார். அப்படி என்றால் எல்லோரும் அதனால் பயன்பெற வேண்டும். ஆனால் உண்மையிலேயே வேதத்தினால் எல்லோரும் பயன் அடைகிறார்களா?

  • உருவாக்கும் சக்தி தேவனுடைய வார்த்தைக்கு இருக்கிறது. உலகம் உண்டாகக்கடவது என்று கூறினார், உலகம் உண்டாயிற்று.

  • கர்த்தருடைய வேதம் மனிதனுடைய ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறது. (சங்கீதம் 19:7).

  • “தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.” (எபிரேயர் 4:12).

  • கர்த்தருடைய வார்த்தை நிச்சயம் நிறைவேறியே தீரும்.

  • எடுத்துக்காட்டாக யோசேப்பு வாழ்விலே ஆண்டவர் சொன்ன வார்த்தை நிறைவேறினது. தாவீது வாழ்க்கையிலே ஆண்டவர் சொன்ன வார்த்தை நிறைவேறினது. ஆனால் அவர்கள் வசனத்துக்காக புடமிடப்பட்டார்கள்.

  • கர்த்தருடைய வசனத்தை கைக்கொள்ளுவதால் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வாசம் பண்ணுகிறார்கள். (யோவான் 14:23).

கர்த்தருடைய வார்த்தையின் மகத்துவத்தை ஏற்றுக் கொண்டு சபை:

ஆகையால், நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனுஷர் வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக்கொண்டதினாலே நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறோம்; அது மெய்யாகவே தேவவசனந்தான், விசுவாசிக்கிற உங்களுக்குள்ளே அது பெலனும் செய்கிறது.” (1 தெசலோனிக்கேயர் 2:13). தெசலோனிக்கேயர் சபை கர்த்தருடைய வார்த்தையின் மகத்துவத்தை அறிந்து வைத்ததை குறித்து பவுல் மகிழ்ச்சி அடைகிறார்.

வார்த்தையின் பலன்: 

“மோசேயின் வெற்றி, அவருடைய திறமையின் இரகசியத்தை யோசுவா 1:7,8 இல் அறிந்து கொள்ளலாம். என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கமாத்திரம் மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு; நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்துகொள்ளும்படிக்கு, அதை விட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக” (யோசுவா 1:7). “இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாகவும் நடந்துகொள்ளுவாய்” (யோசுவா 1:8). கர்த்தருடைய வார்த்தையை பின்பற்றினால் மனிதனுடைய வழிகளை வாய்க்கப்பண்ணுவார். இதையே சங்கீதத்திலும் சங்கீதக்காரர் கூறுகிறார். சங்கீதம் 1:2,3 இல்  “கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.”

  • தாவீது தான் செய்த போர்களில் எல்லாம் வெற்றி பெற்றார் தாவீது தான் எபுசியரிடம் இருந்து எருசலேமைக்  கைப்பற்றினார். இப்படியாக அவர் செய்த எல்லா காரியங்களும் அவருக்கு வாய்த்தது. ஏனென்றால் அவர் வேதத்தை கைக்கொண்ட ஒரு மனிதர்.

  • வேதத்தில் எல்லா சாதனைகள் செய்த தெய்வ மனிதர்களின் ரகசியம் இதுதான் அவர்கள் கர்த்தருடைய வார்த்தையை கைக்கொண்டார்கள்.

கர்த்தருடைய வார்த்தை ஆவியும், ஜீவனுமாக உள்ளது:

கிறிஸ்துவின் மூலம் செயல்:

“நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும், ஜீவனாயும் இருக்கிறது” (யோவான் 6:63).

  • கர்த்தருடைய வசனம் ஆவியாக இருக்கிறது. அதே, வசனம் செயல்படும்போது ஜீவனாக இயங்குகிறது.

  • இந்த வசனம் கர்த்தருடைய வாயிலிருந்து வந்தாலும் கிறிஸ்துவின் மரணத்தின் மூலம் உயிர்பிக்கப்படுகிறது.

ஏனென்றால், எங்கே மரணசானமுண்டோ, அங்கே அந்தச் சாதனத்தை எழுதினவனுடைய மரணமும் உண்டாகவேண்டும். எப்படியெனில், மரணமுண்டானபின்பே மரணசாசனம் உறுதிப்படும்; அதை எழுதினவன் உயிரோடிருக்கையில் அதற்குப் பெலனில்லையே” (எபிரேயர் 9:16,17).

ஆவியாக இருந்த வசனம் கிறிஸ்துவின் மரணத்துக்கு பிறகு ஜீவனாக நமக்குள் செயல்படுகிறது. எப்படி?

  • ஒரு உயில் எழுதினவரின் மரணம் நடந்தால் தான் அது செயல்படுத்தப்படும். அதே போல் இயேசு கிறிஸ்து தம் வாயிலிருந்து பிறந்த வார்த்தைகளை எழுதி தன்னுடைய மரணத்தினால் பெலன் உள்ளதாக மாற்றினார். அதாவது அதை எழுதின கிறிஸ்துவின் மரணம் நடந்தப்பொழுது அந்த வசனம் ஜீவன் அடைந்தது.

  • வசனத்தில் இருக்கிற ஜீவன் சாதாரணமானது அல்ல, அது கிறிஸ்துவின் ரத்தத்தினால் சிலுவை மரணத்தினால் ஜீவன் ஊட்டப்பட்டிருக்கிறது. இதற்கு ஆதாரமாக லேவியராகமம் 17:14 ல் "சகல மாம்சத்துக்கும் இரத்தம் உயிராயிருக்கிறது; இரத்தம் ஜீவனுக்குச் சமானம்” அப்படியென்றால், கிறிஸ்துவின் வசனம் எவ்வளவு வல்லமை உள்ளது. அந்த ஜீவன் நம்மோடு பேசுகிறது, நமக்கு நன்மை செய்கிறது, நமக்கு ஆலோசனை கொடுக்கிறது. இதை வாசிக்கிற நாமும் உயிர்ப்பிக்கப்பட வேண்டும். உயிர்பிக்கப்படாத மனிதன் வாசிக்கிற போது அதில் இருக்கிற ஜீவன் (வசனத்தில்) செயல்படுவதில்லை.

பரிசுத்த ஆவியானவர் மூலம் செயல்:

புல்வெளியில் நடக்கக்கூடாது என்று எழுதியிருந்தது ஆனாலும், எல்லோரும் நடந்தார்கள் சற்று நேரத்தில் புல்வெளியை பராமரிக்கும் மனிதர் வந்து அந்த பலகையை எடுத்து காட்டினார். எல்லோரும் வெளியே வந்து விட்டார்கள். வேதம் நாம் எதை செய்ய வேண்டும் செய்யக்கூடாது என்று கூறுகிறது. அதன்படி நம்மால் வாழ இயலவில்லை ஆனால், அந்த வார்த்தை தேவ ஆவியானவரால் சுட்டிக்காட்டும் பொழுது நாம் உணர்த்தப்பட்டு உந்துதல் பெறுகின்றோம். தேவன் ஏற்கனவே பேசின வார்த்தைகளை இன்று தேவ ஆவியானவர் உயிர்ப்பித்து நமக்குள் அனுப்பும் பொழுது அது ஜீவன் உள்ள வார்த்தையாக மாறுகிறது. தேவ ஆவினால் வார்த்தைகளை உயிருள்ளவர்களாக உணர்ந்து பின்பற்றும் படியான ஆவிக்குரிய மறுபிறப்பின் அனுபவம் வேண்டும்.

முடிவு:

சங்கீதம் 138:2 இல் உமது சகல பிரஸ்தாபத்தைப் பார்க்கிலும் உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர்.” என்று வேதம் கூறுகிறது. இன்று எல்லோரும் கர்த்தருடைய வசனத்தின் மகத்துவத்தை அறிந்து அதை பெற்றுக்கொள்ள வேண்டும்.

Loading...