Sermons

கர்த்தருடைய மகிமை படைப்பிலிருந்து தெரிகிறது

மகிமைப்படுத்துதல்:

யோவான் 16:14 இல் பரிசுத்த ஆவியானவர் இயேசு கிறிஸ்துவினுடையதை அறிவிப்பதினால், அவர் இயேசு கிறிஸ்துவை மகிமைப்படுத்துகிறார் என்று வசனம் கூறுகிறது. நம்முடைய செயல் கிறிஸ்துவினுடையதை வெளிப்படுத்துமானால், பிரஸ்தாபப்படுத்துமானால், அறிவிக்குமானால் அவரை நாம் மகிமைப்படுத்துகிறோம். அதேபோல இன்று படைப்பும் இயேசு கிறிஸ்துவினுடையதை அறிவிக்கிறது, அவருடைய ஞானத்தை வெளிப்படுத்துகிறது, அவருடைய வல்ல செயலை வழிகாட்டுகிறது. எனவே படைப்புகள் கர்த்தரை மகிமைப்படுத்துகின்றன.

படைப்பில் கர்த்தர் மகிழ்ச்சி:

உலகைப் படைப்பதில் கர்த்தருக்கு நம்பமுடியாத மகிழ்ச்சியைக் கொடுத்தது. கர்த்தருக்கு தேவைப்படுவதால் உலகைப் படைக்கவில்லை: அவருக்கு எதுவும் தேவையில்லை என்று அப்போஸ்தலர் 17:25 இல் நமக்குச் சொல்லப்பட்டுள்ளது. கர்த்தர் தனிமையில் இருந்ததால் உலகைப் படைக்கவில்லை: திரித்துவத்தின் மூன்று நபர்களும் ஒருவருக்கொருவர் ஐக்கியத்தை அனுபவித்தனர். அவர் தனது மகிழ்ச்சியின் மிகுதியிலிருந்து உலகைப் படைத்தார். நம் கர்த்தர் மகிழ்ச்சி நிறைந்தவர் என்று சொல்கிறது. நம் கர்த்தர் எல்லையற்ற ஞானமுள்ளவர், அவருடைய ஞானத்தில் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறார். உலகத்தைப் படைப்பதில் அவர் மகிழ்ச்சியால் வெடிக்கிறார். இது சங்கீதம் 104 இல் தெளிவாகத் தெரிகிறது, இது கர்த்தர் படைத்த உலகத்தைப் பிரதிபலிக்கும் ஞான சங்கீதமாகும். சங்கீதம் 104:31 இல் தொடங்கி இந்த வார்த்தைகளுடன் முடிக்கிறார். "கர்த்தருடைய மகிமை என்றென்றைக்கும் விளங்கும்; கர்த்தர் தம்முடைய கிரியைகளிலே மகிழுவார்".

படைப்புகள் அனைத்தும் கடவுளின் மகிமையை அறிவிக்கின்றன:

நாம் ஆண்டவரை மகிமைப்படுத்துகிறோமோ இல்லையோ இயற்கை ஆண்டவரை மகிமைப்படுத்துகிறது. அதுதான் இன்றைய நாளிலே நமக்கு தலைப்பு, படைப்பு கடவுளுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது.

  • ஆண்டவர் நம்மை மட்டும் அல்ல, இயற்கையும் படைத்து ஆசீர்வதித்திருக்கிறார் (ஆதியாகமம் 1:21,22).

  • நாம் ஆண்டவரை நோக்கி அடிக்கடி ஆண்டவரே எங்களை காப்பாற்றும் நீர் துருகமாக, கோட்டையாக, அரணாக, மதிலாக எங்களுக்கு இருக்கிறீர் என்று நாம் கூறுகிறோம். சங்கீதம் 36:6 இல்  மனுஷனையும், மிருகங்களையும் நீர் காப்பாற்றுகிறீர் என்று வேதம் கூறுகிறது.

  • மேலும், நாம் மட்டும் ஆண்டவருடைய வருகைக்காக காத்திருக்கிறோம் என்று நினைக்கிறோம் இல்லை, படைப்பும் ஆண்டவருடைய வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறது (ரோமர் 8:19).

சங்கீதம் 19:1-6 இல் "வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது." படைப்பாளரைப் பற்றிய விஷயங்களை அவரது படைப்பைப் பார்த்து நாம் அறிந்து கொள்ள முடியும். ஒரு ஓவியம் ஓவியரைப் பற்றி நமக்குச் சொல்வது போல, அல்லது பாடல் பாடகரைப் பற்றி நமக்குச் சொல்வது போல, படைப்பு படைப்பாளரைப் பற்றி நமக்குச் சொல்கிறது. சங்கீதம் 19-ம் அதிகாரம் என்ன சொல்கிறது? "வானங்கள் அறிவிக்கின்றன... அவை பேச்சைப் பொழிகின்றன... அவை வெளிப்படுத்துகின்றன... அவற்றின் குரல் வெளிப்படுகிறது... அவற்றின் வார்த்தைகள்..." உருவாக்கப்படுவது படைப்பாளரைப் பற்றி நமக்குத் தெரிவிப்பதாகும். ஆனாலும், அவை வார்த்தைகளைப் பயன்படுத்துவதில்லை, மொழியைப் பயன்படுத்துவதில்லை, சொற்களை உருவாக்கவும் எண்ணங்களை வெளிப்படுத்தவும் மனித மொழியில் கேட்கக்கூடிய ஒலிகளைப் பேசுவதில்லை. படைப்பாளர் யார் என்பதைப் பற்றிய தெளிவான படத்தை வார்த்தைகள் இல்லாமல் தெரிவிப்பது படைப்பாளரின் இருப்பு(The Presence of the Lord) மட்டுமே. சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களின் - மகத்துவமும் ஒழுங்கும் - கர்த்தரின் மகிமை, வல்லமை மற்றும் ஞானத்தை அனைவருக்கும் வெளிப்படுத்துகின்றன. முழுப் படைக்கப்பட்ட உலகமும் கர்த்தரின் தெய்வீக இயல்புக்கு சாட்சியமளிக்கிறது.

சாட்சி:

யோபு 38:7-இல் "அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடி, தேவ புத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே" என்பதாகும். இது, பூமியை உருவாக்கும் போது, விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஒன்றாகப் பாடி, தேவனுடைய தூதர்கள் மகிழ்ச்சியாகக் கூச்சலிட்டனர் என்று கூறுகிறது. "தேவபுத்திரர்" என்பது தேவனுடைய தூதர்களைக் குறிக்கிறது.

மகிழ்ச்சி: நட்சத்திரங்கள் பாடியதும், தூதர்கள் கெம்பீரித்ததும் படைப்பின் அற்புதத்தைக் கண்டு அவர்கள் அடைந்த மகிழ்ச்சியைக் குறிக்கிறது. இந்த இயற்கையின் அதிசயங்களும், பிரமாண்டமான அழகும் படைத்தவரின் மகத்துவத்தையும், அதாவது அவருடைய மகிமையையும் நமக்குத் தெளிவாகப் பேசுகின்றன. சங்கீதம் 119:89-91 இல் படைப்புகள் கர்த்தரை சேமிக்கிறதையும், படைப்புகள் அவருடைய பிரமாணத்தை நிறைவேற்றுகிறதையும் அவருடைய வார்த்தை, படைப்பாகிய வானங்களில் நிலைத்திருக்கிறதையும் காண முடிகிறது.

இயேசு கிறிஸ்து தன்னுடைய படைப்புகளிலேயே மகிமைப்பட்டிருக்கிறதினால் தன்னை தன் படைப்போடு ஒப்பிடுகிறார்.

  • ஒளி - "நான் உலகத்திற்கு ஒளி" (யோவான் 8:12).
  • அப்பம் - "நான் ஜீவ அப்பம்" (யோவான் 6:35).
  • ஒரு மேய்ப்பன் - "நான் நல்ல மேய்ப்பன்" (யோவான் 10:11).
  • ஒரு திராட்சைக் கொடி - "நான் உண்மையான திராட்சைக் கொடி" (யோவான் 15:5).
  • ஒரு ஆட்டுக்குட்டி அவர் - "உலகின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி" (யோவான் 1:29) என்று குறிப்பிடப்படுகிறார், இது பழைய ஏற்பாட்டில் பலியிடப்பட்ட ஆட்டுக்குட்டிகளைக் குறிப்பிடுகிறது.
  • சிங்கம் – “யுத ராஜ சிங்கம்” (ஓசியா 5:14).
  • மின்னல் – “இரண்டாம் வருகை மின்னலை” போன்றது. (லூக்கா 17:24).
  • சூரியன் – “நீதியின் சூரியனாகிய” பிதாவை நினைவில் வையுங்கள். (மல்கிய 4:2).

படைப்பின் ஞானத்தின் வழியாக கிறிஸ்துவின் மகிமையை வெளிப்படுத்துகிறது:

இயேசுவுக்கும் ஞானத்திற்கும் இடையே ஒரு தொடர்பு உள்ளது. ஞானம் இயேசு கிறிஸ்துவின் ஒரு மாதிரியாக செயல்படுகிறது.  ஞானம் இயேசு கிறிஸ்துவை சுட்டிக்காட்டுகிறது. “கிறிஸ்து இயேசு... தேவனால் நமக்கு ஞானமானார்.” ( 1 கொரிந்தியர் 1:31 ) என்று கூறுகிறது, யோவான் 1:1-3 இல் நாம் வாசிக்கிறோம், “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய்ச் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.”

சங்கீதம் 104 வது அதிகாரம் ஒரு ஞான சங்கீதமாகும், அங்கு சங்கீதக்காரர் படைப்புப் பணியை விரிவாகக் சொல்லுகிறார். கர்த்தர் படைத்த உலகத்தை நாம் காணும்போது, சங்கீதம் 104:24 இல் சங்கீதக்காரனுடன் சேர்ந்து நாம் சொல்லுகிறோம். "கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருள்களினால் நிறைந்திருக்கிறது." ரோமர் 1:20 இல் படைப்பின் மூலம் கிறிஸ்துவை அறிந்து கொள்ளலாம் என்று கூறுகிறார். அப்படி என்றால், அந்தப் படைப்பின் மூலம் கிறிஸ்துவை அறிந்த நாமும் ஒவ்வொரு நாளும் அவருடைய மகிமையை அதிலே நாம் கண்டுகொள்ள முடியும். கிறிஸ்து தம்மை நன்கு புரிந்துகொள்ள நம் கவனத்தைத் தொடர்ந்து தம்முடைய படைப்புகளுக்குத் திருப்புகிறார். இந்த அனைத்து படைப்புகளும் தேவனுடைய  ஞானத்தால் உருவாக்கப்பட்டவை.

ஒரு நாத்திகன் கடவுளே இல்லை என்று சொல்லுகிற ஒருவன் தன்னுடைய வீட்டினுடைய பின்புறத்தில் இருந்து தோட்டத்திலே சற்று ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தான்.  அப்பொழுது அவருக்கு எதிரே இருக்கக்கூடிய மரத்தை பார்த்தாராம், பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது கீழே இருந்து ஒரு பாம்பு மேலே ஏறிக் கொண்டிருந்தது. அந்த மரத்தினுடைய உச்சியிலே கொப்பிலே ஒரு கூடு ஒன்று இருந்தது அந்த கூட்டிலே தாய் பறவை தன்னுடைய குஞ்சுகளோடு கூட சந்தோஷமாக இருந்து கொண்டிருந்தது. கீழே இருந்து பாம்பு போய்க்கொண்டிருக்கிறது அதை பார்த்து அந்த தாய் பறவை ஒரு சத்தத்தை எழுப்பியது,  அந்த சத்தத்தை கேட்டு ஒரு ஆண் பறவை அங்கும் இங்கும் ஓடியதாம், கடைசியில் ஏதோ ஒரு வகையிலே ஒரு குச்சியை கண்டுபிடித்து அதை எடுத்து பாம்பு ஏறுகிற அந்த இடத்திற்கும் தாய் பறவை குஞ்சுகளோடு உட்கார்ந்திருக்க கூடிய அந்த கூடு இருக்கும் இடையே ஒரு இடத்தில் அந்த குச்சியை சொருகி வைத்து விட்டது. பாம்புக்கு அந்த குச்சியை தாண்டி செல்ல முடியவில்லை ஏனென்றால், அது பாம்புக்கு விஷம் நிறைந்த ஒரு குச்சி. பாம்பு புரிந்து அப்படியே கீழே இறங்கி விட்டது.

இந்த நாத்திகன் பார்த்துக் கொண்டிருந்தான்.  இந்த பாம்புக்கு எப்படி அது ஒரு விஷத்தன்மை உடைய குச்சி என்பது தெரியும்?   இந்த பாம்பு மேலே ஏறுகிற அந்த காட்சியை அந்த தாய் பறவை எப்படி அறிந்து கொண்டது?  அதை அறிந்து கொண்டு எப்படி ஒலி எழுப்பினது? அந்த எழுப்பின ஒளியை அந்த ஆண் பறவை எப்படி உணர்ந்து கொண்டது? அதை எந்த விதத்தில் புரிந்து கொண்டு சுற்றி ஓடி போய் ஒரு குச்சியை எடுத்துக் கொண்டு வந்தது?  அந்த குச்சி தான் இந்த பாம்பிற்கு மாற்று மருந்து என்பது அந்த ஆண் பறவைக்கு எப்படி தெரிந்தது?  கடவுளே இல்லை என்று சொல்கிறேனே இந்த பிராணிகளுக்கு இந்த பறவைக்கு எப்படி இந்த ஞானம் வந்தது. இந்த ஞானத்தை கொடுத்தது யார் உண்மையிலேயே ஒரு கடவுள் இருப்பார் என்றால், அவர்தான் இந்த ஞானத்தை கொடுத்திருக்க வேண்டும் என்று அறிந்து கொண்டவனாக தான் மனம் திரும்பினான்.  இந்த இயற்கை, பறவை ஆண்டவர் கொடுத்த ஞானத்தின் வழியாக ஆண்டவருடைய மகிமையை வெளிப்படுத்துகிற ஒரு நிலைமையை நாம் பார்க்கிறோம். கடவுளுடைய மகிமையை நாம் வெளிப்படுத்த அழைக்கப்படுகிறோம் அதைத்தான் இந்த இயற்கை படைப்புகள் செய்கின்றன.

படைப்புகளின் வழியாக கடவுளுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது:

அவர் இயற்கையின் மீது அதிகாரம் கொண்டவர் என்பதை மாற்கு 4:35-41 வெளிப்படுத்துகிறது. இதிலே அவருடைய மகிமையும் வெளிப்படுகிறது. 1 இராஜாக்கள் 17:4,6 வசனத்திலே காகங்கள் அவனுக்கு (எலியாவுக்கு) விடியற்காலத்தில் அப்பமும் இறைச்சியும் சாயங்காலத்திலே அப்பமும் இறைச்சியும் கொண்டுவந்தது என்று பார்க்கிறோம். யோனா 2:10-வது வசனத்தில் ஆண்டவர் ஒரு பெரிய மீனுக்கு கட்டளை இடுகிறார், யோனா மீனின் வயிற்றிலிருந்து வெளியே வந்தார். யோனா 4:6-வது வசனத்தில் தேவனாகிய கர்த்தர் ஒரு ஆமணக்கு செடியை முளைக்க கட்டளையிட்டார் மறுநாளில் தேவன் ஒரு பூச்சியை கட்டளையிட்டார் அது ஆமணக்குச் செடியை அரித்து போட்டது, ஆமணக்கு செடிக்கு ஆண்டவர் கட்டளையிடுகிறார்.

விசுவாசத்தில் வளர உதவி செய்கிறது:

மத்தேயு 6:26 இல் “ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?”. சங்கீதம் 104:27-28 இல் “ஏற்றவேளையில் ஆகாரத்தைத் தருவீர் என்று அவைகளெல்லாம் உம்மை நோக்கிக் காத்திருக்கும். நீர்கொடுக்க, அவைகள் வாங்கிக்கொள்ளும்; நீர் உம்முடைய கையைத் திறக்க, அவைகள் நன்மையால் திருப்தியாகும்”. இன்றைக்கு அநேகர் படைப்புகளை பார்ப்பது இல்லை. அதனால் தான் விசுவாசத்திலே குறைவுள்ளவர்களாக இருக்கிறார்கள். மனிதருடைய விசுவாசத்தை பலப்படுத்துவதற்கு படைப்பை ஒரு கருவியாக ஆண்டுவர் எங்கே பயன்படுத்துகிறது பார்க்க முடிகிறது.

Loading...